புதுதில்லி:
அகில இந்திய வானொலி தமிழ் செய்திப் பிரிவு, மீண்டும் புதுதில்லியிலிருந்து ஒலிபரப்பப்படவேண்டும் என்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் து. ராஜா வலியுறுத்தினார்.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது. அவசரப் பொது முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சனைகளை எழுப்பும் நேரத்தில் து. ராஜா பேசியதாவது:
நான் இப்போது, தமிழ் மொழி குறித்து அவசரப் பொது முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சனையை எழுப்பிக் கொண்டிருக்கிறேன்.
தமிழ் மொழி மிகவும் பழைமையான மற்றும் மாபெரும் செவ்வியல் மொழியாகும். இன்றைய தினம் இந்தியாவில் மட்டும் சுமார் எட்டு கோடி பேர் இதனைப் பேசுகிறார்கள். எங்கள் மொழி குறித்து எங்களுக்கு எப்போதும் பெருமித உணர்ச்சி உண்டு. தமிழ் மொழி அனைத்துத் தென்னிந்திய மாநிலங்களிலும் குறிப்பிடத்தக்க அளவிற்குப் பேசக்கூடிய ஒரு மொழியாகும். இலங்கை மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் இது ஓர் ஆட்சி மொழியுமாகும். மலேசியாவில் கல்வி மொழியாகவும், தென் ஆப்பிரிக்கா மற்றும் மொரிசியஸ் தீவுகளில் சிறுபான்மை மொழியாகவும் ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் அங்கீகரிக்கப்பட்ட மொழியாகவும் விளங்குகிறது.
ஒலிபரப்பு குறைப்பு
ஆயினும் மத்திய அரசு தமிழ் மொழியை சிறுமைப்படுத்திக் கொண்டிருக்கிறது. புதுதில்லியில் அகில இந்திய வானொலி மூலம் ஒலிபரப்பப்பட்டுவந்த தமிழ் செய்திப்பிரிவை மூடிவிட்டதன் மூலம் தமிழுக்கு இருந்துவந்த தரநிர்ணயத்தைக் குறைத்திருக்கிறது. இங்கே செயல்பட்டுவந்த தமிழ் செய்திப் பிரிவை சென்னைக்கு மாற்றிவிட்டது. அதன் காரணமாக அகில இந்திய வானொலி மூலம் தமிழ் செய்தி அறிக்கை நான்கு தடவை ஒலிபரப்பி வந்தமை தற்போது மூன்றாகக் குறைந்துவிட்டது. எனவே, புதுதில்லியிலிருந்து மீண்டும் தமிழ் செய்திப் பிரிவு மீண்டும் செயல்பட வேண்டும் என்றும் இதனை உடனடியாகச் செய்திட வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன் என்று கூறினார். து. ராஜாவின் கோரிக்கைமீது டி.கே.ரங்கராஜன் (சிபிஎம்), எஸ்.ஆர். பாலசுப்பிரமணியன் (அஇஅதிமுக) முதலானவர்களும் தங்களை இணைத்துக் கொண்டனர். (ந.நி.)