tamilnadu

img

காஷ்மீர் சிறுவர்கள் 500 பேர் கதி என்ன?

புதுதில்லி:
ஜம்மு - காஷ்மீருக்கான சிறப்பு உரிமைகளை வழங்கும் அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 370-ஐ ரத்து செய்த, மத்திய பாஜக அரசு, அதற்கு எதிராக போராடிய பொதுமக்களை, ஆயிரக்கணக்கில் கைது செய்து, சிறையில் அடைத்தது. இவர்களில் 500-க்கும் மேற்பட்ட சிறுவர்களும் அடங்குவார்கள்.

கடந்த ஆகஸ்ட் 5-ஆம் தேதிக்குப் பின், ஜம்மு- காஷ்மீரைச் சேர்ந்த பலர் காணாமல் போயிருப்பதாக, அங்குள்ள அரசியல் கட்சிகள், பொதுமக்கள் குற்றச்சாட்டு தெரிவித்து வருகின்றனர். அவர்களில் கணிசமானோர் சிறுவர்கள் என்பதால், அச்சிறுவர்களின் பெற்றோர்கள், தங்களது குழந்தைகளின் நிலை குறித்து மிகுந்த கவலையிலும், அச்சத்திலும் நாட்களைக் கடத்திக் கொண்டிருக்கின்றனர்.இந்நிலையில், ஜம்மு - காஷ்மீரில், கைது செய்யப்பட்ட சிறுவர்களின் நிலை என்ன, அவர்கள் எங்கே, எப்படி இருக்கிறார்கள்? என்பதுகூட தெரியவில்லை என்று உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்று, தாக்கல் செய்யப்பட்டது.இந்த மனு, நீதிபதி என்.வி. ரமணாவின் தலைமையிலான அமர்வின் முன்பு, செவ்வாயன்று விசாரணைக்கு வந்தது.அப்போது, பொதுநல மனுவை விசாரணைக்கு ஏற்ற நீதிபதிகள், “சிறப்பு அந்தஸ்து நீக்கம் செய்யப்பட்ட பின், ஜம்மு - காஷ்மீரில், பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ள சிறுவர்களின் நிலைதற்போது என்ன என்பதைப் பற்றி விசாரிக்க வேண்டும். அந்த விசாரணை தொடர்பான அறிக்கையை, உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவேண்டும்” என்று ஜம்மு - காஷ்மீர் உயர் நீதிமன்றத்தின், சிறார் நீதிக் குழுவுக்கு(Juvenile Justice) உத்தரவு பிறப்பித்துள் ளனர்.