tamilnadu

img

2 பாலிவுட் நடிகைகளை  லஞ்சமாகக் கேட்ட அமைச்சர்?

புதுதில்லி:
ஊழல் வழக்கில் சம்பந்தப்பட்டவர்களை தப்பவிடுவதற்காக, அமைச்சர் ஒருவர், 2 பாலிவுட் நடிகைகளை லஞ்சமாக கேட்டதாக, சுப்பிரமணியசாமி திடுக்கிடும் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இதுதொடர்பாக, சுப்பிரமணியசாமி அவரது ட்விட்டர் பக்கத்தில், பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “ஒரு பிராஜெக்ட்டுக்கு அனுமதி கொடுப்பதற்கு அமைச்சர் ஒருவர் லஞ்சமாக 2 பாலிவுட் நடிகைகளை கேட்டால் என்ன தண்டனை கிடைக்கும்? என்பது குறித்து ஊழல் தடுப்பு சட்டத்தில் ஆராய்ந்து கொண்டிருக்கிறேன். இது குறித்து ஏதேனும் ஆலோசனைகள் இருக்கிறதா? தற்போது நடைபெற்று வரும் ஊழல் வழக்கு ஒன்றுக்கு தேவைப்படுகிறது” என்று பூடகமாக குறிப்பிட்டுள்ளார்.

இந்த பதிவு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சுப்பிரமணியசாமி கூறும் அந்த அமைச்சர் யார்? எந்த கட்சியைச் சேர்ந்தவர்? மத்திய அமைச்சரா, மாநில அமைச்சரா? என்று சர்ச்சைகளை கிளப்பி விட்டுள்ளது. சுப்பிரமணியசாமி பாஜக அமைச்சர் ஒருவருக்குத்தான் குறிவைத்திருக்கிறார் என்றும் பரவலாக பேச்சு எழுந்துள்ளது.

மத்திய அமைச்சர் பதவி கேட்டு, சுப்பிரமணியசாமி நீண்டகாலமாகவே, பாஜக தலைமையுடன் நிழல் யுத்தம் நடத்தி வருகிறார். குறிப்பாக, அருண் ஜெட்லி, இடைக்காலத்தில் பியூஷ் கோயல் ஆகியோருக்கு வழங்கப்பட்ட நிதியமைச்சர் பதவியை சுப்பிரமணியசாமியால் ஏற்கவே முடியவில்லை. இதனை பலமுறை வெளிப்படையாகவும் கூறியிருக்கிறார். ஆனால், பாஜக தலைமை, அதனைக் கண்டு கொள்வதாக தெரியவில்லை. தற்போதைய புதிய அமைச்சரவையிலும் சுப்பிரமணியசாமிக்கு இடமிருக்காது என்றே கூறப்படுகிறது. மறுபுறத்தில், அமைச்சர் பதவியை ஏற்குமாறு ஜெட்லியை மோடி உட்பட பலரும் கெஞ்சிக் கொண்டிருக்கின்றனர். இந்தப் பின்னணியில், பாஜக தலைமையை பிளாக் மெயில் செய்யும் வகையிலேயே, சுப்பிரமணியசாமி ட்விட்டர் பதிவை வெளியிட்டிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. 

சுப்பிரமணியசாமிக்கு அமைச்சர் பதவி வழங்க வேண்டும் என்று ட்விட்டரில் போடப்படும் பதிவுகளை, தொடர்ச்சியாக சுப்பிரமணியசாமி பகிர்ந்து வருகிறார் (ரீ ட்வீட்) என்பதும் குறிப்பிடத்தக்கது.