நாமக்கல், மே 6-விசைத்தறி தொழிலாளர்களுக்கு கூலி உயர்வு வழங்கக்கோரி சிஐடியு, ஏஐடியுசி, எச்எம்எஸ் கூட்டியக்கம் சார்பில்குமாரபாளையத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் வட்டாரத்தில் விசைத்தறி தொழிலில் பணிபுரியும் ஆண், பெண் தொழிலாளர்களுக்கு நியாயமான கூலி உயர்வு தர மறுக்கும் ஜவுளி அஉற்பத்தியாளர்களை கண்டித்தும், கூலி உயர்வு வழங்க வலியுறுத்தியும்தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தம் உட்பட பல கட்ட போராட்டம் நடத்தினர். இதன்பின்னணியில் கடந்த மே 2 ஆம் தேதியன்று வட்டாட்சியரை சந்தித்து முறையிடப்பட்டது. இருப்பினும் உரிய உடன்பாடு ஏட்டப்படவில்லை.இந்நிலையில் அத்தியாவசியபொருட்களின் விலை உயர்வினால் தொழிலாளர்கள் இயல்புவாழ்க்கையை கூட நடத்த முடியாமலும், வாடகை வீடுகளில் வசிப்பவர்கள் பெரும் சிரமத்தை சந்தித்து மிகவும் சிரமப்பட்டு வாழ்ந்துவருகின்றனர். ஆகவே விசைத்தறி தொழிலாளர்களுக்கு 75 சதவிகிதம் கூலி உயர்வு வழங்க வேண்டும். விசைத்தறி கூடங்களில் கழிப்பிட வசதி, குடிநீர் வசதி, மருத்துவ வசதி, பண்டிகை காலங்களில் விடுமுறை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திங்களன்று சிஐடியு, ஏஐடியுசி,எஸ்எம்எஸ் உள்ளிட்ட கூட்டு இயக்கம் சார்பில் குமாரபாளையம் பள்ளிபாளையம் பிரிவு ரோடு அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சிஐடியு நகர் தலைவர் ஜீ.மோகன் தலைமை வகித்தார். ஏஐடியுசி நகரத்தலைவர் கே.எஸ்.பாலசுப்பிரமணியன், எச்எம்எஸ் சங்கதலைவர் டி.கே.எஸ்.மணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிஐடியு விசைத்தறி தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் எம்.அசோகன், மாவட்ட உதவி செயலாளர் எஸ்.தனபால், நகரச் செயலாளர் கே.பாலசாமி, நகர பொருளாளர் பி.என்.வெங்டேசன், நகர துணைத் தலைவர் ஜெ.எஸ்.சரவணன், நகரத் துணைச் செயலாளர் கே.ஏசுராஜ், ஏஐடியுசி தலைவர் எஸ்.பி.நஞ்சப்பன், எச்எம்எஸ் சங்க செயலாளர் கே.சுரேஷ், பொருளாளர் சின்னசாமி, குமாரபாளையம் சிபிஎம் நகர செயலாளர் எஸ்.ஆறுமுகம் உள்ளிட்டபலர் கலந்து கொண்டனர்.