நாமக்கல், ஜூலை 15- இராசிபுரம் வட்டம், தொப்பட்டி ஊராட்சியில் இலவச வீட்டு மனை பெற்றுத்தருவதாக கூறி லட்சக்கணக்கில் பணம் வசூலித்து மோசடி செய்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையில் அப்பகுதி மக்கள் மாவட்ட ஆட்சி யரிடம் மனு அளித்தனர். நாமக்கல் மாவட்டம், இராசிபுரம் வட்டம், தொப்பட்டி ஊராட்சியில் அண்ணாநகர் தேவேந்திரர் தெருவில் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் விவ சாயக் கூலி வேலை செய்து வசித்து வருகின்றனர். இப்பகுதியில் வசித்து வரும் மக்கள் வாடகை வீடுகளில் வசித்து வருகின்றனர். இந்நிலையில் பெருமாள் கவுண்டம்பாளையத்தை சேர்ந்த சோமு என்கின்ற சோமசுந்தரம், லோகாம்பாள் ஆகியோர் அப்பகுதி மக்களிடம் இலவச வீட்டு மனை நிலம் பெற்றுத் தருகிறோம். இதற்காக முன் பணம் கட்ட வேண்டும் எனக் கூறி ரூ.5 ஆயிரம் முதல் ரூ.20 ஆயிரம் வரை 50க்கும் மேற்பட்டோரிடம் லட்சக் கணக்கில் பெற்றுக் கொண்டு ஏமாற்றி வந்துள்ளனர். இதுகுறித்து அவரிடம் பணத்தை திருப்பித் தாருங்கள் என்று கேட்க செல்லும்போது தரமுடி யாது என்று மிரட்டி வருகின்றனர். கடந்த இரண்டு வருடங்களாக பல குடும்பங்கள் ஏமாற்றப்பட்ட நிலையில் உள்ளனர். ஆகவே மோசடியில் ஈடுபட்ட நபர் மீது வழக்கு பதிவு செய்து பணத்தை மீட் டுத் தர வேண்டும் என வலியுறுத்தி திங்களன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையில் அப்பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியரிடமும், காவல் கண்காணிப்பாளரிடமும் மனு அளித்தனர். இதில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாமக்கல் மாவட்ட செயலாளர் எஸ்.கந்தசாமி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் ந.வேலுசாமி, மாவட்ட குழு உறுப்பினர் செல்வராஜ், கிளை செயலாளர் இ.குப்பண்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.