tamilnadu

img

முள்ளூர் துறை மீனவர்களை பழிவாங்கும் காவல்துறை... பாதிக்கப்பட்டோருக்கு நிவாரணம் வழங்க கோரிக்கை

நாகர்கோவில்: 
முள்ளூர் துறை பகுதியில் காவல் துறையினரை தாக்கியவர்களை கைது செய்வதாக கூறி அப்பாவிகளை தாக்குவது, இந்த சம்பவத்தில் தொடர்பில்லாதவர்களையும் வழக்கில் சேர்ப்பதை கைவிட வேண்டும் என கன்னியாகுமரி மாவட்ட மீன் தொழிலாளர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து சங்கத்தின் சார்பில் கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் வடநேரேவிடம் அளிக்கப்பட்ட மனு விபரம் வருமாறு, கோவிட்19 தொற்றுப் பரவல் தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் போது தனி மனித இடைவெளியை கட்டாயப்படுத்தும் காவல்துறை அனுபவிக்கும் சிரமங்களை கண்ணால் பார்க்கிறோம்.
இந்த சூழ்நிலையில் கடந்த 25 ஆம் தேதியன்று முள்ளூர்துறையில் சமூக விலகலை கண்காணிக்க ரோந்து சென்ற காவல்துறையினரிடம் அந்த ஊரில் சில இளைஞர்கள் காவல்துறையினரின் அறிவுரையை கேட்காமல் வாக்கு வாதத்தில் ஏற்பட்ட மோதலின் காரணமாக காவல்துறை உதவி ஆய்வாளர் தாக்கப்பட்டு, காவல்துறை வாகனங்களும் தாக்கப்பட்ட நிகழ்ச்சி மிகவும் வருந்தத்தக்கது, கண்டனத்திற்கு உரியது. இந்த மோசமான செயலை யாரும் பொறுத்துக் கொள்ள மாட்டார்கள். சட்டப்படி சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டியது காவல்துறையின் கடமையாகும். 

இதில் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் போர்வையில் நிரபராதிகளை வழக்கில் சேர்க்க கூடாது என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும். முதல் சம்பவமும் அப்பொழுது இருந்த காவலர்களில் சிலரது அதிகார போர்வையில் நடைபெற்றதாகவும் சொல்லப்படுகிறது. இப்படிப்பட்ட மோசமான செயலை பயன்படுத்தி , பின்பு காவல்துறையினர் சிலரது தூண்டுதலின் பேரில் காவல் துறையில் உள்ள சிலர் அந்த ஊரில் உள்ள பல நிரபராதிகளின் வீடுகளை அடித்து சேதப்படுத்தியுள்ளதுடன், பலரது வாழ்வாதார பொருள்களையும், டிவி, மிக்ஸி, கிரைண்டர், பேன், கட்டில், நாற்காலி, கண்ணாடி, ஜன்னல், வீட்டுக்கதவு, கழிவறை கதவுகள், இரு சக்கர வாகனங்கள் மற்றும் விலை மதிக்க முடியாத பொருட்களையும் நாசமாக்கியுள்ளனர். இது பழிக்குப் பழி வாங்கும் நடவடிக்கை என்பது நிரூபணமாகிறது. இந்த செயலை பொறுத்துக் கொள்ளமுடியாது .

காவல்துறை உதவி ஆய்வாளரை தாக்கி காயப்படுத்தியவர்கள், காவல்துறை வாகனங்களை அடித்து உடைத்தவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கும் நேரத்தில் காவல்துறை போர்வையில் அந்த ஊரில் நடத்தியிருக்கும் அராஜகம் மற்றும் பொது மக்கள் மீது கடுமையான தாக்குதல் நடத்தி கொடும் காயம் ஏற்படுத்திய சம்பந்தப்பட்ட காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலே சொன்ன இரு சம்பவங்களையும் புதுக்கடை காவல் நிலையம் அல்லாத காவல்துறையில் நேர்மையான உயர் அதிகாரியை கொண்டு புலன் விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டுவதோடு, காவல்துறையின் பழக்கப்பட்ட வார்த்தையான கண்டால் தெரியும் நபர்கள் என்பதை கூறி நிரபராதிகளை கைது செய்யாமல் இருக்கவும், காவல்துறையினர் தனக்கு வேண்டாதவர்களை வழக்கில் சேர்ப்பதற்கு வசதியாக கண்டால் தெரியும் நபர்கள் என்ற காவல்துறையினரின் வாசகத்தை முதல் தகவல் அறிக்கையிலிருந்து நீக்கம் செய்யவும், பாதிக்கப்பட்ட நிரபராதிகளுக்கு உரிய நஷ்டஈடு வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு  அதில் கூறப்பட்டுள்ளது.