சீர்காழி, ஆக.24- கொள்ளிடம் பகுதியில் கொசு உற்பத்தியை தடுக்க பிளீச்சிங் பவுடர் தெளிக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நாகை மாவட்டம் கொள்ளிடம் பகுதியில் கடந்த சில தினங்களாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இந்நிலையில் சாலைகள், தெருக்கள் உள்ளிட்ட பகுதிகளில் ஆங்காங்கே தண்ணீர் தேங்கி நிற்பதால் கொசு உற்பத்தி அதிகமாகிக் கொண்டிருக்கிறது. இதனால் இரவு நேரங்களில் ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகள் மற்றும் மனிதர்கள் குழந்தைகளையும் கொசுக்கள் கடிக்கத் தொடங்குகின்றன. நோயாளிகளும் கொசு கடியால் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். தூக்கமின்மையால் பெரிதும் அவதிப்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அடிக்கடி ஏற்படும் மின்தடையால் வீடுகளில் மின்விசிறி இயங்காத போது கொசுக்கள் அதிக எண்ணிக்கையில் கூட்டமாக வீட்டிற்குள் நுழைந்து கடிப்பதால் தொடர்ந்து தோல் அரிப்பை ஏற்படுத்தி வருகின்றன. கொசுக்களில் பல வகையான இனங்கள் உற்பத்தியாவதால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே ஊரக வளர்ச்சித்துறை, சுகாதாரத்துறை மற்றும் வருவாய்த்துறை அனைத்தும் இணைந்து கிராமப் பகுதிகளிலும் பிளீச்சிங் பவுடர் மற்றும் கொசு மருந்துகளை தெளித்தும் கொசுக்கள் உற்பத்தியை உடனடியாக கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியருக்கு பொது மக்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.