சீர்காழி:
சீர்காழி அருகே மாதானம் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் விவசாயிகள் எடுத்துவந்த நெல் மூட்டைகளை கொள்முதல் செய்யாததால் ஒரு வார காலத்துக்கு பிறகு மீண்டும் விவசாயிகள் வீட்டுக்கே கொண்டு சென்றனர்.மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே மாதானம் கிராமத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் இயங்கி வருகிறது. இங்கு மாதானம் மற்றும் சுற்று வட்டார கிராமங்களில் உள்ள விவசாயிகளிடமிருந்து கடந்த இரண்டு மாதமாக நெல் மூட்டைகளை கொள்முதல் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பெய்த மழையின் காரணமாக விவசாயிகள் நெல் கொள்முதல் நிலையத்துக்கு கொண்டு வந்து அடுக்கி வைத்த நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதமடைந்தன. உரிய நேரத்தில் கொள்முதல் செய்யத் தவறியதால் விவசாயிகள் கொண்டு வந்த நெல் மூட்டைகள் கொள்முதல் நிலையத்திலேயே அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. இந்நிலையில், கொள்முதல் நிலையத்தில் நீண்ட நாட்களாக அடுக்கி வைத்திருந்த நெல் மூட்டைகளை மீண்டும் ஏமாற்றத்துடன் வீட்டுக்கு எடுத்துச் சென்றனர்.இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், இந்த வருடம் தொடர்ந்து பெய்த மழையின் காரணமாக சம்பாநெற்பயிர் சேதமடைந்து விவசாயிகளுக்கு பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தி
யது. மீதம் இருந்த நெற்பயிரை அறுவடை செய்து, அதன் மூலம் கிடைத்த குறைந்த அளவே உள்ள நெல் மூட்டைகளை கொள்முதல் நிலையத்துக்கு எடுத்து வந்தும், நூற்றுக்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் சேதமடைந்து விட்டது என்றனர்.மேலும் விவசாயிகளுக்கு வேளாண் துறை மூலம் 50 சதவீத மானியத்தில் வந்த தார்ப்பாய்களை விவசாயிகள் விலை கொடுத்து வாங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. 75 சதவீத மானியத்தில் தார்ப்பாய்கள் வழங்கியிருந்தால் நெல் மூட்டைகளை விவசாயிகள் அந்தந்த நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் மழையிலிருந்து பாதுகாத்து இருக்கலாம். ஆனால் தார்ப்பாய்கள் இல்லை. மானியம் இருந்தும் விலை அதிகம் உள்ளதால் விவசாயிகள் வாங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே விவசாயிகளுக்கு விநியோகம் செய்ய வேண்டிய தார்ப்பாய்களை 75 சதவீத மானியத்தில் வழங்க வேண்டும். மேலும், நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் அடுக்கி வைக்கப்பட்டு சேதமான நெல் மூட்டைகளையும் விவசாயிகள் நலன் கருதி உடனடியாக மீண்டும் கொள்முதல் செய்ய வேண்டும் என்றனர்.