நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம், திருமருகல் ஒன்றியம், வாழ்மங்களம் கிராமத்தைச் சேர்ந்த ஜனனி என்ற மாணவி, அதே ஊரைச் சேர்ந்த ராஜ்குமார் என்னும் தலித் இளைஞரைக் காதலித்ததற்காகப் பெண்ணின் தாய் உமாமகேஸ்வரி, தான் பெற்ற மகளையே மண்ணெண்ணெய் ஊற்றி எரித்துவிட்டு தன்னையும் எரியூட்டிக் கொண்டு சில நாட்களில் அவரும் இறந்தார்.இந்த ஆணவக் கொலையைக் கண்டித்து, திருமருகல் ஒன்றியம், திட்டச் சேரிப் பேருந்து நிலையத்தில், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி, மாவட்டக்குழு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.திருமருகல் ஒன்றியத்தைச் சேர்ந்த வாழ்மங்களம் கிராமத்தைச் சேர்ந்த மாணவி ஜனனி(18), இவரது தாய் உமாமகேஸ்வரி. தந்தை நடராஜன். ஜனனி 12-ஆம் வகுப்பு படித்தார்.
அதே ஊரைச் சேர்ந்த 22 வயது தலித் இளைஞர் ராஜ்குமார். ஜனனியும் ராஜ்குமாரும் மனம் ஒன்றிக் காதலித்தனர். இந்தக் காதலை ஏற்றுக் கொள்ள முடியாத ஆதிக்கச் சாதியினரும் பெண்ணின் பெற்றோரும் எதிர்ப்புத் தெரிவித்தனர். தலித் இளைஞர் மீது காவல் துறையிலும் புகார் செய்தனர்.ஆனால், காதலர்கள் உறுதியாக இருந்தனர். கடந்த நவம்பர் மாதம் 20ம்தேதி அதிகாலை, ஜனனிக்கு 18 வயதுநிறைவடைவதற்கு 2 நாட்கள் இருக்கும் நிலையில், இரண்டு நாள் கழித்து விட்டால், ஜனனி 18 வயதாகி மேஜராகி விட்டால், சட்டப்படி, ராஜ்குமாரைத் திருமணம் செய்துவிடுவார் என குதர்க்கமாக யோசித்த ஆதிக்கச் சாதியினர், பெண்ணின் பெற்றோரை மிக இழிவாகவும் கேவலமாகவும் பேசிப் பெண்ணின் தாயிடமே பெண்ணைக் கொன்று விடுமாறு நிர்ப்பந்தித்தனர். நவம்பர்-20ம் தேதி அதிகாலை 4.30மணிக்கு, ஜனனி வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த போது, திட்டமிட்டு விழித்திருந்த தாய், ஜனனி மீது மண்ணெண்ணெய்யை ஊற்றித் தீ வைத்து விட்டுத் தானும் மண்ணெண்ணெய்யை ஊற்றித் தீ வைத்துக் கொண்டார்.
முழுவதும் எரிந்த நிலையில் ஜனனியும் 90 விழுக்காடு எரிந்த நிலையில் தாயும் நாகை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். தன்மீது தீயை வைத்தது தன் தாய்தான் என்று ஜனனி வாக்குமூலம் கொடுத்த பின்னால், அன்று காலையே இறந்து விட்டார். கடுமையான தீப்புண்ணால் உயிரோடு போராடியதாயும் 30.11.2019 அன்று இறந்துவிட்டார். பெற்ற மகளையே கொன்று விடத் தூண்டி விட்டவர்கள் ஆதிக்கச் சாதியினர்.சாதி வெறியால் இப்படிப்பட்ட ஆணவக் கொலைகள்இந்தப் பகுதிகளில் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டே வருகின்றன. காவல்துறையோ மாவட்ட நிர்வாகமோ, தமிழக அரசோ இப்படிப்பட்ட ஆணவக் கொலைகளைத் தடுப்பதற்கு எவ்வித முயற்சியும் நடவடிக்கைகளும் மேற்கொள்வதில்லை.எனவே, சாதி ஆணவக் கொலைகளைத் தடுப்பதற்கும் ஜனனியின் கொலைக்குத் திட்டம் தீட்டிக் கொடுத்தும் பெண்ணின் தாயின் சாவுக்கும் காரணமாகச் செயற்பட்ட சாதி வெறியர்களைக் கைது செய்து உரிய தண்டனை பெற்றுக் கொடுத்திடவும் வலியுறுத்தி, திட்டச் சேரியில் தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.ஆர்ப்பாட்டத்திற்குத் தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்டத் தலைவர் சி.வி.ஆர்.ஜீவானந்தம் தலைமை வகித்தார். சி.பி.எம். திருமருகல் ஒன்றியச் செயலாளர் எம்.ஜெயபால், விவசாயிகள் சங்க ஒன்றியச்செயலாளர் பொன்.மணி முன்னிலை வகித்தனர். தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்டச் செயலாளர் ப.சுபாஷ் சந்திரபோஸ் விளக்கவுரையாற்றினார்.
சி.ஐ.டி.யு. மாவட்டச் செயலாளர் சீனி.மணி, மாற்றுத்திறனாளிகள் சங்க மாவட்டச் செயலாளர் டி.கணேசன், வி.தொ.ச. மாவட்டத் தலைவர் கே.சித்தார்த்தன், முன்னணியின் மாவட்டப் பொருளாளர் பி.ஏ.ஜி.சந்திரசேகரன், மாவட்டத் துணைச் செயலாளர் வி.வி.ராஜா, வி.ச.ஒன்றியத் தலைவர் ஜி.எஸ்.ஸ்டாலின்பாபு, வாலிபர் சங்க ஒன்றியச் செயலாளர் பி.சதீஸ், ஒன்றியத் தலைவர் எஸ்.பிரபாகரன், சி.ஐ.டி.யு. ஒன்றியச் செயலாளர் பி.எம்.லெனின் வி.தொ.ச. ஒன்றியச் செயலாளர் ஏ.பாரதி, ஒன்றியத் தலைவர் ஜி.ராமச்சந்திரன் மற்றும் ஏ.பழனிவேல், எம்.சிங்காரவேல், கே.கணேசன் உள்ளிட்டோர் கண்டன உரையாற்றினர்.தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநிலத் துணைத் தலைவரும் சட்டமன்ற முன்னாள் உறுப்பினருமான எஸ்.கே.மகேந்திரன் சிறப்புரையாற்றினார். முன்னணியின் மாவட்டக்குழு உறுப்பினர் என்.எம்.பாலு நன்றி கூறினார். (ந.நி.)