tamilnadu

இன்று பொது வேலை நிறுத்தம்  நாகையில் ரயில் மறியல் போராட்டம்

 நாகப்பட்டினம்: பொதுத்துறைகளைத் தனியாருக்குத் தாரை வார்க்கக் கூடாது, மோட்டார் வாகனச் சட்டத் திருத்தத்தைத் திரும்பப் பெற வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, புதன்கிழமை நடைபெறும் அகில இந்தியப் பொது வேலை நிறுத்தத்தை ஆதரித்து, நாகை மாவட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ரயில் மறியல், சாலை மறியல் போராட்டங்களும், ஆர்ப்பாட்டங்களும் நடைபெறுகின்றன. சி.பி.எம். நாகை ஒன்றியம், திருமருகல் ஒன்றியம், கீழ்வேளூர் ஒன்றியம், நாகை நகரம் சார்பில் காலை 10 மணிக்கு, சிக்கல் நகரில் ரயில் மறியல் போராட்டம் நடைபெறுகிறது. போராட்டத்திற்கு சி.பி.எம். மாவட்டச் செயலாளரும் சட்டமன்ற முன்னாள் உறுப்பினருமான நாகைமாலி தலைமை வகிக்கிறார். கீழ்வேளூர் ஒன்றியச் செயலாளர் ஜி.ஜெயராமன், நாகை ஒன்றியச் செயலாளர் பி.டி.பகு, திருமருகல் ஒன்றியச் செயலாளர் எம்.ஜெயபால், நாகை நகரச் செயலாளர்(பொ) சு.மணி, மாவட்டக்குழு உறுப்பினர்கள் எம்.சுப்பிரமணீயன், எம்.என்.அம்பிகாபதி, பி.கே.ராஜேந்திரன், என்.எம். அபுபக்கர், ப.சுபாஷ் சந்திரபோஸ், கே.செந்தில்குமார், எம்.செல்வராஜ், எம்.பெரியசாமி, எஸ்.சுபாதேவி மற்றும் விவசாயிகள் சங்கம், விவசாயத் தொழிலாளர் சங்கம், வெகுஜன இயக்கத்தினர் திரளானோர் போராட்டத்தில் பங்கேற்கிறார்கள். போராட்டத்தில் அரசுப் போக்குவரத்துத் துறை ஊழியர் சங்கத்தினர், அரசு ஊழியர் சங்கத்தினர், வங்கி ஊழியர்கள், அதிகாரிகள், ஆயுள் காப்பீட்டுத் துறை, அஞ்சல் துறை, தொலைத் தொடர்புத் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த ஊழியர்கள், சி.ஐ.டி.யு. சார்பில் அனைத்துத் தொழிற் சங்கத்தினர், ஆட்டோ சங்கத்தினர், இடதுசாரி, தொ.மு.ச. உள்ளிட்ட பல்வேறு தொழிற் சங்கத்தினர் பங்கேற்கிறார்கள். இந்தப் பொது வேலை நிறுத்தப் போராட்டத்தை விளக்கும் பிரச்சார வாயிற்கூட்டங்கள், நாகப்பட்டினம் அரசுப் போக்குவரத்து மற்றும் அரசு விரைவுப் போக்கு வரத்துக் கழகப் பணிமனைகள் முன்பு சனிக்கிழமை நடைபெற்றன. இவற்றில் சி.ஐ.டி.யு. நாகை மாவட்டச் செயலாளர் சீனி.மணி, மாவட்டத் துணைச் செயலாளர் எஸ்.ஆர்.ராஜேந்திரன், அரசுப் போக்குவரத்துக் கழக, சி.ஐ.டி.யு. கெளரவத் தலைவர் தஞ்சை ஆர்.மனோகரன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.