தரங்கம்பாடி, செப்.29- நாகை மாவட்டம், மயிலாடுதுறை அருகேயுள்ள சோழம்பேட்டை கிராமத்தில் மணல் கொள்ளையால் உயிரிழந்த சிறுவனின் இறப்பிற்கு காரணமானவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. சோழம்பேட்டை கிராமத்திலுள்ள வானமுட்டி பெருமாள் கோவில் குளத்தை தூர்வாருவதாகக் கூறி அதேப் பகுதியில் வசிக்கும் காவல்துறையில் பணியாற்றும் மணிகண்டன் என்பவர் தனது உறவினர் ஒருவரின் பெயரில் விதிகளை மீறி சட்ட விரோதமாக நாள் தோறும் பல நூறு லாரிகளில் மணலை கொள்ளையடித்தாராம். அதிகாரத்தில் இருப்பவர் என்பதால் பொதுமக்கள் மணல் கொள்ளையை எதிர்க்காததை பயன்படுத்தி 50 அடி ஆழத்திற்கும் மேல் குளத்தை தோண்டி 1500-க்கும் மேற்பட்ட லாரிகள் மூலம் மணலை பல்வேறு பகுதிகளுக்கு கடத்தினாராம். இதுகுறித்து பலமுறை வட்டாட்சியரிடம் மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் நேரில் புகார் அளிக்கப்பட்டும் எந்த நடவடிக்கையும் இல்லாத நிலையில் தான் அண்மையில் குளத்தில் நீர் நிரப்பப்பட்டது. இந்நிலையில் கடந்த 26 அன்று தனது நண்பர்களுடன் குளத்தின் கரையில் அமர்ந்து தூண்டில் போட்டுக் கொண்டிருந்த அதேப் பகுதியை சேர்ந்த சண்முகம் -பிரேமா தம்பதியினரின் மகனான 10 ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த சஞ்சய் குமார் கரை உடைந்து குளத்தினுள் விழுந்துள்ளார். அதிகளவு ஆழமாக இருந்ததால் நீரில் சிக்கி சஞ்சய்குமார் பரிதாபமாக உயிரிழந்தார். பல மணி நேரம் தேடி தீயணைப்புத் துறையினர் உடலை கைப்பற்றினர். உடல்கூறு ஆய்வுக்கு பின் உடல் அடக்கம் செய்யப்பட்டது. மணல் கொள்ளையால் சிறுவனின் உயிர் பறிக்கப்பட்டதாகவும், இது போன்ற துயர சம்பவங்கள் நடந்து விடக் கூடாது என பலமுறை முறையிட்டும் அலட்சியமாக இருந்ததாலேயே ஆழத்தில் சிக்கி சஞ்சய்குமார் பரிதாபமாக இறந்துள்ளார் என குற்றஞ்சாட்டிய மார்க்சிஸ்ட் கட்சியின் வட்ட செயலாளர் மேகநாதன் இதுவரை காவிரி டெல்டா பகுதியில் மட்டும் இதுவரை 10க்கும் மேற்பட்டோர் மணல் கொள்ளையால் உயிரிழந்தும் அரசு நிர்வாகம் கண்டு கொள்ளாமல் இருப்பதாகவும், உடனடியாக சிறுவனின் உயிரிழப்புக்கு காரணமானவர்களை கைது செய்து, அவரது குடும்பத்திற்கு உரிய நிவாரணம் வழங்க வலியுறுத்தி அக்டோபர் 5 ல் மயிலாடுதுறையில் மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாகவும் கூறினார்.