மும்பை,டிச.1- மகாராஷ்டிரா சட்டமன்றத்தின் சபாநாயகராக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நானா பட்டோலே போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். மகாராஷ்டிராவில் சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகளின் கூட்டணியான மகாராஷ்டிரா வளர்ச்சி முன்னணி ஆட்சி யமைத்துள்ளது. புதிய எம்.எல்.ஏ.க்கள் பதவி யேற்புக்காக ஆளுநர் பகத்சிங் கோஷியாரி பாஜகவின் காளிதாஸ் கொலம்ப்கர் என்பவரை தற்காலிக சபாநாயகராக நியமித்தார். பின்னர் தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்த திலீப் வல்சே பாட்டீல் புதிய தற்காலிக சபாநாயகராக நியமிக்கப்பட்டார். மகாராஷ்டிரா சட்டமன்ற சபாநாயகர் பதவிக்கான தேர்தல் ஞாயிறன்று நடைபெற்றது. இதில் மகாராஷ்டிரா வளர்ச்சி முன்னணி கூட்டணி சார்பில் காங்கிரஸ் எம்.எல்.ஏ. நானா பட்டோலே, பாஜக சார்பில் முர்பாட் எம்.எல்.ஏ. கிஷான் கத்தோரே ஆகியோர் வேட்பு மனுவை தாக்கல் செய்தனர். இந்நிலையில் பாஜக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட கிஷான் கத்தோரே ஞாயிறன்று காலை தனது வேட்புமனுவை வாபஸ் பெற்றார். இதனால் காங்கிரஸ் கட்சியின் நானா பட்டோலே, மகாராஷ்டிரா சட்டமன்றத்தின் சபாநாயகராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். அவரை முதலமைச்சர் உத்தவ் தாக்கரே உள்ளிட்டோர் வழிநடத்திச் சென்று சபாநாயகர் இருக்கையில் முறைப்படி அமரவைத்தனர்.