tamilnadu

img

வாலிபர் சங்க நிர்வாகிகள் கொடூரக்கொலைக்கு கண்டனம்..... தமிழகம் முழுவதும் வாலிபர் சங்கத்தினர் ஆவேச ஆர்ப்பாட்டம்

மதுரை:
கேரளாவில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் நிர்வாகிகளை கொடூரமாகக் கொன்ற காங்கிரஸ் கட்சி குண்டர்களைக் கண்டித்து செப்டம்பர் 1 செவ்வாயன்று தமிழகம் முழுவதும் வாலிபர் சங்கம் சார்பில் ஆவேச ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின்திருவனந்தபுரம் மாவட்டம் தேவலக்காடு கிளைத் தலைவர்  ஹக் முகமது , கல்லிங்கில் முகம் கிளை துணைச் செயலாளர் மிதிலாராஜ் ஆகியோர்  கொரோனா காலத்தில் இரவு பகல் பாராது, மக்களை பாதுகாக்கும் சேவைப் பணியில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டனர்.  ஓணம் பண்டிகைக்காக மிதிலாராஜ்  கடைக்கான காய்கறிகளை இறக்கிவிட்டு  ஹக்முகமதுவும் மிதிலாராஜூம் இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பியுள்ளனர். மக்களுக்கான இவர்களின்  சேவையை பொறுத்துக் கொள்ள முடியாத காங்கிரஸ் கட்சி குண்டர்கள், 2 பேரையும் ஆகஸ்ட் 31 நள்ளிரவு 12.30 மணியளவில்  வெங்ஙாரமூட்டில் வைத்து மிகக் கொடூரமான முறையில் வெட்டிப் படுகொலை செய்துள்ளனர். இவர்களின் உடலில் 70 இடங்களில் வெட்டியுள்ளனர்.

ஹக் முகமதுவிற்கு ஒன்றரை வயதில் ஆண் குழந்தை உள்ளது. மனைவி மூன்று மாத கர்ப்பிணியாகவும்  உள்ளார். மிதிலாராஜூக்கு 2 மகன்கள் உள்ளனர். கேரளாவில் இருக்கக் கூடிய காங்கிரஸ் கட்சிக்காரர்கள் இந்தக் கொலைக்கும் எங்களுக்கும் சம்பந்தமில்லை என்று திசை திருப்பி வருகின்றனர். ஆனால் பகிரங்கமாக ஆடூர் பிரகாஷ் எம்.பி., சம்பந்தப்பட்ட கொலையாளிகளுடன்  தொலைபேசியில் தொடர்பில் இருந்துள்ளார் என தெரிவிக்கப் பட்டுள்ளது. கடந்த 3 மாதத்திற்கு முன்பே வாலிபர் சங்கத்தின் மற்றொரு ஊழியர் பைசல் மீது காங்கிரஸ் குண்டர்கள் கொடூரத் தாக்குதலை நடத்தினர். அவர்  மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு காப்பாற்றப்பட்டார்.  தோழர் பைசலை தாக்கியவர்கள்தான் இரட்டைக் கொலை
யிலும் சம்பந்தப்பட்டுள்ளனர் என செய்தி வெளியாகியுள்ளது.

இந்நிலையில் வாலிபர் சங்க நிர்வாகிகளை கொடூரமாகக் கொன்ற காங்கிரஸ்கட்சிக் குண்டர்களைக் கண்டித்து தமிழ்நாடு முழுவதும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் ஆவேச ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 52 இடங்களில் இப்போராட்டம் நடைபெற்றது.மதுரை பெத்தானியாபுரத்தில் நடைபெற்ற போராட்டத்தில் மாநிலச் செயலாளர் எஸ்.பாலா, மாவட்டத் தலைவர் பி.கோபிநாத், மாவட்ட பொருளாளர் ஏ.பாவெல் சிந்தன், நிர்வாகிகள் சரண், நவீன், சரவணன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
கன்னியாகுமரி மாவட்டம் அருமனையில் நடைபெற்ற போராட்டத்திற்கு வட்டார தலைவர் சரவணன் தலைமை வகித்தார். மாநில தலைவர் என்.ரெஜீஸ்குமார் பங்கேற்று பேசினார். தேனி மாவட்டம் கம்பத்தில் நடைபெற்ற போராட்டத்திற்கு ஏரியா துணைச் செயலாளர் மணியரசன் தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் கே.ஆர்.லெனின் , ஏரியா செயலாளர் அசோக் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.