சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர் வா.செ.குழந்தைசாமி 1929 - ஜூலை 14ஆம் நாள் பிறந்தார்.இவர் இந்திய பொறியியல் (நீரியல்துறை) அறிஞரும், கல்வியாளரும் கவிஞரும் எழுத்தாளரும் ஆவார். தமிழ் இணையப் பல்கலைக்கழகத்தின் நிறுவனத் தலைவராகப் பணியாற்றியவர்.இவர், மதுரை காமராசர் பல்கலைக்கழகம், அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் இந்திரா காந்தி தேசிய திறந்தநிலைப் பல்கலைக்கழகம் ஆகியவற்றின் துணைவேந்தராகவும் பதவி வகித்துள்ளார்.இவர் குலோத்துங்கன் என்ற புனைப்பெயரில் பல கவிதைத்தொகுப்புகளை வெளியிட்டுள்ளார். இவைதவிர ஆங்கிலத்திலும், தமிழிலும் பல்வேறு தலைப்புகளில் கட்டுரைகள் எழுதியுள்ளார்.
இவர் தனது ஆறு கவிதைத் தொகுப்புகள் மற்றும் ஏழு கட்டுரைகளுக்காக 1999-ம் ஆண்டு தமிழக அரசின் திருவள்ளுவர் விருது பெற்றார். தமிழ் இணையப் பல்கலைக்கழகத்தின் தலைவர் பதவியோடு சென்னை ஆசியக் கல்வி நிறுவனத்தின் துணைத் தலைவராகவும் இருந்துள்ளார்.தமிழ் இலக்கியத்திற்கு இவரது பங்களிப்புகளைப் பாராட்டி சாகித்ய அகாடமி விருது வழங்கப்பட்டுள்ளது. மேலும், கல்வி மற்றும் அறிவியல் துறைகளில் இவரது பங்களிப்பிற்காக பத்மஸ்ரீ விருது 1992-ம் ஆண்டும், பத்மபூசண் விருது, 2002-ம் ஆண்டும் வழங்கப்பட்டது. இவரது தமிழ்ப் படைப்புகளுக்காக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் இவருக்கு 1980-ம் ஆண்டு கௌரவ முனைவர் பட்டமளித்தது.நீர்வளத்துறையில் இவருடைய கண்டுபிடிப்பை குழந்தைசாமி மாதிரியம் என அழைக்கிறார்கள்.இவர் 2016ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 10ஆம் நாள் மறைந்தார்.
===பெரணமல்லூர் சேகரன்===