மின்வாரிய கடன்சுமையை அதிகரிக்கும் ஒன்றிய அரசின் ஸ்மார்ட் மீட்டர் திட்டம்
ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை ரத்து செய்யக் கோரி ஏப். 21 அன்று வட்ட மேற்பார்வை பொறியாளர் அலுவலகங்கள் முன்பு தர்ணா நடைபெறும் என்று தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு (சிஐடியு) அறிவித்துள்ளது. இது குறித்து பொதுச் செயலாளர் எஸ். இராஜேந்திரன் கூறுகையில், தமிழகத்தில் 3 கோடி ஸ்மார்ட் மீட்டர்களை தனியார் நிறுவனங்கள் பொருத்தி பராமரிக்க உள்ளன. முதற்கட்டமாக 3 லட்சம் மீட்டர்களை மொத்த செலவின முறையில் (டோடெக்ஸ்) மாற்ற 475 கோடி ரூபாய் செலவாகும், இதில் ஒன்றிய அரசு 52 கோடி ரூபாய் மட்டுமே மானியம் வழங்கும். இதனால் மின்வாரியத்தின் கடன் சுமை 423 கோடி ரூபாய் அதிகரிக்கும். ஆனால் வாரியமே கொள் முதல் செய்து பொருத்தினால் 175 கோடி ரூபாய் மட்டுமே செல வாகும். மொத்தமுள்ள 3.40 கோடி மின் இணைப்புகளை மாற்றினால் 50 ஆயிரம் கோடி ரூபாய் செலவு வரும். ஸ்மார்ட் மீட்டரால் நுகர்வோர் மீட்டர் வாடகை செலுத்த வேண்டும், நேரத்திற்கேற்ப கட்டணம் வசூலிக்கப்படும் (காலை 6-10, மாலை 6-10 மணி வரை அதிக கட்டணம்), வீடுகள் மற்றும் விவசாயிகளுக்கான இலவச மின்சாரம் ரத்தாகும், கைத்தறி மானியம் நிறுத்தப்படும், கணக்கீட்டு பணியாளர்கள் வேறு பணிக்கு மாற்றப்பட்டு வேலைவாய்ப்புகள் பாதிக்கப்படும். கேரள இடது ஜனநாயக முன்னணி அரசு போல தமிழக அரசும் மூலதனச் செலவு முறையை பின்பற்ற வேண்டும் என்றும், ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தி ஏப்ரல் 19 அன்று தமிழகம் முழுவதும் மக்கள் சந்திப்பு இயக்கமும், ஏப்ரல் 21 அன்று தர்ணா போராட்டமும் நடைபெறும் என அறிவித்தார். அமைப்பின் தலைவர் தி. ஜெய்சங்கர், பொருளாளர் எம். வெங்கடேசன் ஆகியோர் உடனிருந்தனர்.