tamilnadu

img

காசாவை ஆக்கிரமிக்கப்போவதாக டிரம்ப் அறிவிப்பு

அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவை சந்தித்த பிறகு காசாவை கைப்பற்ற போவதாக அறிவித்துள்ளார். போரினால் சர்வநாசம் ஆக்கப்பட்டுள்ள காசா பகுதியில் இருந்து பாலஸ்தீனர்களை எகிப்து, ஜோர்டான் உள்ளிட்ட மத்திய கிழக்கு நாடுகளுக்கு துரத்த வேண்டும் எனவும் பேசியுள்ளார். இந்த சந்திப்பிற்கு பிறகு நடந்த கூட்டு செய்தியாளர் சந்திப்பில் “காசா பகுதியை அமெரிக்கா கைப்பற்றும். நாம்  அதைச் செய்வோம். நாங்கள் அதைச் சொந்தமாக்குவோம்” என்று பகிரங்கமாக ஆக்கிரமிப்பு நடவடிக்கையை அறிவித்துள்ளார். மேலும் அவர் பேசியதாவது: காசாவில் வெடிக்காமல்  உள்ள குண்டு களை அமெரிக்கா அகற்றும். இடிபாடுகளை அகற்றி அப்பகுதியை சமப்படுத்தும்.

காசாவில் அதிக வேலைகள் மற்றும் வீடுகளை வழங்கும் பொருளாதார வளர்ச்சியை அமெரிக்கா அங்கு உருவாக்கும். ஆனால் அவை பாலஸ்தீனர்களுக்கு அல்ல என்று டிரம்ப் கூறியுள்ளார். மேலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணமாக அதனை செய்யப்போவதில்லை என்பதையும் இவ்வாறு டிரம்ப் உறுதிப்படுத்தியுள்ளார். அங்கே வாழ்ந்து துன்பப்பட்டு மரணித்த பாலஸ்தீனர்கள் மீண்டும் அங்கேயே வாழக்கூடாது. 20 லட்சம் பாலஸ்தீனர்களும் ஜோர்டான்,  எகிப்து போன்ற அண்டை நாடுகளுக்கு சென்று விட வேண்டும் என  பேசியுள் ளார். டிரம்பின் இந்த தீவிரமான இன அழிப்பு திட்ட அறிவிப்பை தொடர்ந்து இதுவரை இஸ்ரேலுக்கு இருந்த மிகப் பெரிய நண்பன் டிரம்ப் மட்டுமே என  நேதன்யாகு அவருக்கு புகழ் பாடினார். மேலும் டிரம்ப்பின் இத்திட்டம் “வரலாற்றை மாற்றக்கூடியது” என பேசினார். இதற்கு முன்பாக பனாமா கால்வாய், கனடா,மெக்சிகோ உள்ளிட்ட நாடுகளை ஆக்கிரமிப்பேன்; அமெரிக்காவின் எல்லைகளை விரிவாக்குவேன் என  மிரட்டல் விடுத்திருந்தார்.

இத்தகைய சூழலில் காசாவையும் கைப்பற்றி அங்குள்ள  கடல் பகுதிகளில் எண்ணெய் உள்ளிட்ட இயற்கை வளங்களை சுரண்டும் திட்டத்தின் ஒரு பகுதியாக டிரம்ப் அறிவிப்பை வெளியிட்டுள்ளார் என கூறப்படுகின்றது. இந்த திட்டத்திற்கு கடுமையான கண்டனங்கள் எழுந்து வருகின்றன. காசாவை குப்பை மேடாக எவரும் கருத வேண்டாம் என பாலஸ்தீனர்கள் இதற்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.காசாவில் இருந்து பாலஸ்தீனர்களை முழுமையாக துரத்த வேண்டும் என்ற டிரம்ப்பின் கருத்தை எகிப்து மற்றும் ஜோர்டான் அரசுகள் முழுமையாக நிராகரித்துள்ளன.ஐ.நா. அவைக்கான பாலஸ்தீன தூதர், உலக நாடுகளின் தலைவர்கள் பாலஸ்தீனர்களின் விருப்பத்தை மதிக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.