மதுரை:
அரசு போக்குவரத்து கழக கண்காணிப்பாளர்களுக்கான ஊதிய உயர்வு தொடர்பாக தமிழக போக்குவரத்து துறை முதன்மை செயலர் பிறப்பித்த அரசாணையை ரத்து செய்யக்கோரிய வழக்கில் அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு.
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற சம்பத், சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுதாக்கல் செய்திருந்தார். அதில்,” தமிழகத்தில் அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு கண்காணிப்பாளர், பொறியாளர்கள் முதல்மேலாண் இயக்குனர் வரையுள்ளவர்களுக்கு அரசு ஊதியக் குழு பரிந்துரைகளின்படி ஊதிய நிர்ணயம் செய்யப்படுகிறது.தொழிலாளர்களுக்கு வழங்குவது போல் 2.44 மடங்கு அடிப்படையில் ஊதியநிர்ணயம் செய்து 31.10.2018-இல் அரசாணைபிறப்பிக்கப்பட்டது.
இந்த அரசாணை நிதித்துறை அரசாணை, போக்குவரத்துத் துறை அரசாணைகளுக்கு முரணாக பிறப்பிக்கப்பட்டுள்ளது. கண்காணி்ப்பாளர்கள் பலருக்கு 2.57 மடங்கு ஊதிய உயர்வு வழங்கப்பட்டுள்ளது. பலருக்கு இந்த அடிப்படையில் ஊதிய உயர்வுமறுக்கப்பட்டுள்ளது.எனவே அரசு போக்குவரத்து கழக கண்காணிப்பாளர்களுக் கான ஊதிய உயர்வு நிர்ணயம் தொடர்பாக தமிழக போக்குவரத்துத் துறை முதன்மைச் செயலர் பிறப்பித்த அரசாணையை ரத்து செய்ய வேண்டும். எனக்கு ஏழாவது ஊதியக்குழு அடிப்படையில் சம்பளம் மறு நிர்ணயம் செய்து பணப்பலன்களை வழங்க உத்தர விட வேண்டும்” எனக் கூறியிருந்தார்.இந்த மனுவை திங்களன்று விசாரித்த நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் இது தொடர்பாக தமிழகஅரசு பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணை யை மார்ச் 23-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.