நாகர்கோவில், ஏப்.17-கன்னியாகுமரி மாவட்டத்தில், கடந்த சில மாதங்களாக வெயில் சுட்டெரித்தது. மாவட்டத்தில் நிலவிய கடும் வெப்பம் காரணமாக, பகல் நேரங்களில் பொதுமக்கள் வீடுகளிலேயே தஞ்சமடையும் நிலை ஏற்பட்டது.கொளுத்திய வெயிலால், வாழை, தென்னை, மரவள்ளி உள்ளிட்டவை தண்ணீரின்றி கருகின. குறிப்பாக, நீர் நிலைகள், அணைகள் என அனைத்தும் வறண்டன. இந்நிலையில், புதனன்று பிற்பகல் திடீரென கருமேகங்கள் திரண்டு, இடி, மின்னலுடன் பலத்த மழை கொட்டியது.நாகர்கோவில், மார்த்தாண்டம், குழித்துறை, களியக்காவிளை, அருமனை, குலசேகரம், திற்பரப்பு, சுருளகோடு, சித்திரங்கோடு, திருவட்டாறு உள்ளிட்ட பெரும்பாலான இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்தது. சுமார் 1 மணி நேரம் வரை பெய்த மழையின் காரணமாக, நாகர்கோவில் நகரின் பலஇடங்களில் ஆங்காங்கே வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடியது.பரவலாக பெய்த மழையால், வெப்பம் தணிந்து மாலையில் குளிர் காற்று வீசியது. நீண்ட நாள்களுக்கு பின்பெய்த பலத்த மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
திருநெல்வேலி
நெல்லையில் கடந்த சில மாதங்களாகவே கோடையை மிஞ்சும் வகையில்வெயில் கொளுத்தி வருகிறது. பொதுமக்களை மகிழ்விக்கும் விதமாக புதனன்று மதியம் நெல்லையில் வானில்கருமேகங்கள் சூழ்ந்து தொடர்ந்து தூறலாக ஆரம்பித்த மழை, பின்னர் கனமழையாக மாறியது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். இதனிடையே புதனன்று அதிகபட்சமாக 103 டிகிரி வெயில் பதிவாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.