‘தாயுமானவர் திட்டம்’ இந்தியாவிற்கே முன்மாதிரி!
முதலமைச்சர் பெருமிதம்
சென்னை, ஆக. 12 - மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகளுக்கு அரசின் சேவைகளை மக்களின் வீடுகளுக்கே தேடிச் சென்று வழங்கும் ‘தாயுமானவர்’ திட்டத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் துவக்கி வைத்தார். சென்னை, தண்டையார்பேட்டை, கோபால் நகர் மற்றும் அன்னை சத்யா நகரில், மாற்றுத் திறனாளிகள் மற்றும் வயது முதிர்ந்த பயனாளிகளின் இல்லங்களுக்கு நேரில் சென்ற முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், அவர்களுக்கு ரேசன் பொருட்களை வழங்கி, தாயுமானவர் திட்டத்தை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில், அமைச்சர் பி.கே. சேகர்பாபு, தலைமைச் செயலாளர் நா. முருகானந்தம் சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர். தமிழகத்திலுள்ள, 70 வயதுக்கு மேற்பட்ட 20 லட்சத்து 42 ஆயிரத்து 657 மூத்த குடிமக்கள் மற்றும் 1 லட்சத்து 27 ஆயிரத்து 797 மாற்றுத் திறனாளிகள் என மொத்தம் 21 லட்சத்து 70 ஆயிரத்து 454 பேர் இந்த திட்டத்தின் கீழ் பயனடைய உள்ள நிலையில், தாயுமானவர் திட்டமானது, இந்தியாவிற்கே முன்மாதிரி முயற்சி” என்று முதல்வர் ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார்.