tamilnadu

img

ஏழ்மை நிலையில் தவிக்கும் மாணவிக்கு நேரில் சென்று உதவிய தஞ்சை எம்.பி.,

ஏழ்மை நிலையில் தவிக்கும் மாணவிக்கு நேரில் சென்று உதவிய தஞ்சை எம்.பி.,

சமூக வலைதளத்தில் பரவிய மாணவியின் ஏழ்மை நிலை அறிந்து, வீட்டிற்கே நேரில் சென்று பார்த்த தஞ்சை நாடாளுமன்ற உறுப்பினர் ச.முரசொலி, உயர்கல்விக்கான முழு செலவையும் ஏற்றுக்கொள்வதாக உறுதி அளித்துள்ளார்.
தஞ்சை மாவட்டம் பேராவூரணி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட சித்துக்காடு கிராமத்தை சேர்ந்தவர் ரங்கசாமி (45), இவரது மனைவி ராக்கம்மாள் 9 ஆண்டுகளுக்கு முன்பு காலமானார். இவர்களுக்கு சித்துக்காடு அரசு உயர்நிலைப்பள்ளியில் 9 ஆம் வகுப்பு பயிலும் நித்திய ஸ்ரீ (14) என்ற மகளும், 7 ஆம் வகுப்பு பயிலும் ஹரிஹரசுதன் (12) என்ற மகனும் உள்ளனர். 
ரங்கசாமிக்கு விபத்து ஒன்றில் வலதுகால் பாதிக்கப்பட்டு, அவரால் எந்த வேலையும் நிரந்தரமாக செய்ய முடியாத நிலை உள்ளது. இந்நிலையில் அவ்வப்போது நூறுநாள் வேலை செய்து, அதில் வரும் வருமானத்தைக் கொண்டு தாயில்லாத தனது குழந்தைகளை காப்பாற்றி வருகிறார்.

 
ரேஷன் கடை மூலம் கிடைக்கும் அரிசியைக் கொண்டு இரவில் தனது தந்தை சமைத்து தரும் உணவை உண்டும், மறுநாள் மதியம் தானும், தனது தம்பியும்  பள்ளியில் மதிய உணவைத் தான் சாப்பிடுகிறோம் எனவும், சிறு குடிசையில் விளக்கு வெளிச்சத்தில் படிப்பதாகவும், தனது துயரத்தை சமீபத்தில் சமூக வலைதளத்தில் பதிவு செய்திருந்தார். இந்நிலையில், திருச்சிற்றம்பலம் பகுதிக்கு கட்சி பொதுக்கூட்டத்திற்கு வந்திருந்தபோது, தனது மனைவி மூலம், தகவல் அறிந்த தஞ்சை நாடாளுமன்ற உறுப்பினர் ச.முரசொலி, வெள்ளிக்கிழமை சித்துக்காட்டில் உள்ள மாணவி நித்தியஸ்ரீயின் வீட்டிற்கு நேரில் சென்று விபரங்களை கேட்டறிந்தார். 
தொடர்ந்து, மாணவியின் குடும்பத்தினருக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களையும், நிதியுதவியும் வழங்கிய நாடாளுமன்ற உறுப்பினர் முரசொலி, விரைவில் வீட்டிற்கு மின் இணைப்பு கிடைத்திடவும், மாணவியின் உயர்கல்விக்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்து தருவதாகவும் உறுதி அளித்தார்.


அப்போது மாணவி சுமார் இரண்டு கிலோமீட்டர் தூரம் உள்ள பள்ளிக்கு செல்வதற்கு சைக்கிள் இருந்தால் உதவியாக இருக்கும் என தெரிவித்தார். இதையடுத்து, சனிக்கிழமை காலை தஞ்சை நாடாளுமன்ற உறுப்பினர் ச.முரசொலி ஏற்பாட்டில், கட்சி நிர்வாகிகள் அவரது வீட்டிற்கு சென்று மாணவி விரும்பியவாறு சைக்கிளை வழங்கினர். அந்த சைக்கிளை மாணவி ஆர்வத்துடன் தொட்டு பார்த்து மகிழ்ச்சி அடைந்தார். 
மேலும், மாணவி மற்றும் அவரின் தந்தையிடம் செல்போன் மூலம் பேசிய தஞ்சை நாடாளுமன்ற உறுப்பினர் ச.முரசொலி, தற்போது மாணவி கேட்டுக் கொண்டதற்கிணங்க சைக்கிள் வாங்கி அனுப்பி இருப்பதாகவும், மாணவிக்கும் அவரது தம்பிக்கும் தேவையான உதவிகளை செய்ய தயாராக இருப்பதாகவும் உறுதியளித்தார். 


சமூக வலைதளம் மூலம் தகவல் அறிந்து வீட்டிற்கே வந்து சைக்கிள் வழங்கியதோடு, தனக்கு தேவையான உதவிகளை செய்ய தயாராக இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் ச.முரசொலி தெரிவித்ததற்கு, மாணவி நித்யஸ்ரீ, அவரது தம்பி ஹரிஹரசுதன் ஆகியோர் நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்தனர்.