சிபிஎம் வேட்பாளர் சு.வெங்கடேசன் வலியுறுத்தல்
மதுரை, ஏப்.21-மதுரையில் வாக்கு எண்ணும் மையத்திலிருந்து வாக்குப்பதிவு ஆவணங்களை வெளியே எடுத்துச்சென்ற சம்பவத்தில் தொடர்புடைய அனைவர் மீதும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றுமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் சு.வெங்கடேசன் வலியுறுத்தியுள்ளார்.மதுரை நாடாளுமன்ற மக்களவைத் தொகுதி தேர்தல் வாக்குப்பதிவு ஏப்ரல் 18 அன்று நடைபெற்றது. இத்தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார பில் சு.வெங்கடேசன்,அதிமுக சார்பில் ராஜ்சத்யன், அமமுக சார்பில் டேவிட் அண்ணாத்துரை உள்பட 27 பேர் போட்டியிட்டனர். ஏப்ரல் 18 அன்று இரவு 8 மணிக்கு வாக்குப்பதிவு முடிந்து வாக்குப்பதிவு இயந்திரங்கள் மதுரை மருத்துவக்கல்லூரி வளாகத்தில் வைக்கப்பட்டுள் ளது. இதைக் கண்காணிக்க இரண்டுதேர்தல் அதிகாரிகளும், காவல்துறையின் மூன்றடுக்கு பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.இந்நிலையில் தேர்தல் பணியில் ஈடுபட்ட வட்டாட்சியர் சம்பூர்ணம் என்பவர்வாக்குப்பதிவு ஆவணங்கள் வைக்கப்பட்டிருந்த அறைக்குள் சனிக்கிழமையன்று மாலை 3 மணியளவில் சென்றுள் ளார். அங்கு மாலை 6 மணிவரை இருந்துவாக்குப்பதிவு ஆவணங்களை வெளியேஎடுத்து வந்து, ஜெராக்ஸ் எடுத்துள்ளார். இதனை கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கண்டுபிடித்து வேட்பாளர்சு.வெங்கடேசனிடம் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து சு.வெங்கடேசன், கட்சியின் மதுரை மாநகர் மாவட்டச் செயலாளர் இரா.விஜயராஜன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் மா.கணேசன் ஆகியோர் வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைக்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர்.
திமுக நிர்வாகி அக்ரி கணேசன், வழக்கறிஞர் கே.பழனிச்சாமி, அமமுக வேட்பாளர் டேவிட் அண்ணாதுரை, மக்கள் நீதி மைய வேட்பாளர் அழகர், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் பாண்டியம்மாள் ஆகியோரும் மருத்துவக்கல்லூரி வளாகத்திற்கு வந்தனர். அப்போது மேற்கு தொகுதிக்கு உட்பட்ட ஆவணங்கள் வைக்கப்பட்டுள்ள அறையில் இருந்து ஆவணங்கள் எடுத்துச் சென்றதாக அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருந்தது. மாவட்ட ஆட்சியருடன் நடைபெற்ற பேச்சுவார்த்தைக்குப் பின்னர் சிபிஎம்வேட்பாளர் சு.வெங்கடேசன், மாவட்டச்செயலாளர் இரா.விஜயராஜன் ஆகியோர் கூறுகையில், பாதுகாப்பு மிகுந்த வாக்கு எண்ணும் மையத்துக்கு தாசில்தார் வர வேண்டிய காரணம் என்ன? வாக்குகளில் முறைகேடு நடந்துள்ளதாக சந்தேகம் கொள்கிறோம். அந்த அறையையும் சீல் வைத்திருக்க வேண்டும். இதைப்பற்றி மாவட்ட ஆட்சியரிடம் புகார் தெரிவிக்கப்பட்டது. இரவு 12.45 மணி வரைநடைபெற்ற பேச்சுவார்த்தையில் மாவட்ட ஆட்சியர் ச.நடராஜன் ஆவணங்கள் எடுத்துச்சென்ற அதிகாரி மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். ஆவணங்கள் எடுக்கப்பட்ட அறைக்கு உடனடியாக சீல் வைக்கப்படும் என்றும், இதுபோன்ற தவறு இனி நடக்காது. உரிய பாதுகாப்புப் போடுவதற்கு உடனடியாக உத்தரவிடுகின்றேன் என்று கூறியதாக தெரிவித்தனர்.
இந்நிலையில் ஆவணங்களை எடுத்துச் சென்ற வட்டாட்சியர் சம்பூர் ணம் ஞாயிற்றுக்கிழமையன்று பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். ஆவணங்களை எடுத்துச் சென்ற சம்பவம் குறித்து சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் மா.கணேசன், பேராசிரியர் விவேகானந்தன் ஆகியோர் ஞாயிறன்று மாவட்ட ஆட்சியரிடம் புகார்மனு அளித்தனர். மேலும் ஞாயிறன்று மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் சிபிஎம் வேட்பாளர் சு.வெங்கடேசன் செய்தியாளர்களிடம் கூறுகையில், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தபால் வாக்குகள் வைக்கப்பட்டுள்ள அறைக்கு உடனடியாக கண்காணிப்பு கேமிரா பொருத்த வேண்டும். மருத்துவக்கல்லூரி வளாகத்தில் வாக்குப் பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைக்கு உயர் அதிகாரிகள் உத்தரவின்றி யாரையும் அனுமதிக்கக்கூடாது. இச்சம்பவத்தில் தொடர்புடைய அனைவர் மீதும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
(ந.நி.)