வராக்கடன் என்று அறிவித்த பிறகும் வசூல் நடவடிக்கை தொடரும் என்ற இந்த தீய்ந்து போன டயலாக்கை எத்தனை முறை பேசுவீர்கள் என்றும், வாராக் கடனை எப்போதுதான் வசூல் செய்வீர்கள் என்றும் ஒன்றிய அரசுக்கு மதுரை எம்.பி சு.வெங்கடேசன் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது குறித்து அவர் தனது எக்ஸ் பதிவில் கூறியதாவது:
“வராக்கடன் என்று அறிவித்த பிறகும் வசூல் நடவடிக்கை தொடரும்” இந்த தீய்ந்து போன டயலாக்கை எத்தனை முறை பேசுவீர்கள். 2021 - 25 ஐந்து நிதியாண்டுகளில், பொதுத்துறை, தனியார் துறை, பட்டியலிடப்பட்ட வணிக வங்கிகளில், வராக்கடன்களாக அறிவிக்கப்பட்ட தொகை ரூ.18,14,360 கோடி வராக்கடன்களில் இந்த 5 ஆண்டுகளில் வசூலிக்கப்பட்ட தொகை 4,16,205 கோடி வசூல் செய்யப்படாத தொகை ரூ.13,98,155 கோடி வசூல் விகிதம் 23% மட்டுமே. 2025 ஆகஸ்ட் 12 அன்று நீங்கள் கேள்வி எண் 2617 க்கு மாநிலங்களவையில் தந்த பதில்தான் இந்த விவரங்கள் எல்லாம். கால் கிணறு கூட தாண்டவில்லை உங்கள் வசூல் "வேட்டை"...
வராக்கடன் வசூல் என்பது தொடர் நடவடிக்கை என்பது அரசின் வாதம். எப்போதுதான் வசூல் செய்வீர்கள் என்பதுதான் கேள்வி. நீங்கள் 2014 இல் இருந்து பெயர்களோடு, தொகையோடு கணக்கு கொடுங்கள். தேசம் பார்க்கட்டும் மக்கள் சேமிப்பு எவ்வாறு சூறையாடப்படுகிறதென்று...” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.