நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம்கள்
தஞ்சாவூர், அக். 12- தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே உள்ள திருச்சிற்றம்பலம் அரசு மேல்நிலைப்பள்ளியில், தமிழ்நாடு அரசு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம் சனிக்கிழமை நடைபெற்றது. பேராவூரணி வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் அருள் வரவேற்றார். பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் நா.அசோக்குமார் தலைமை வகித்து, மருத்துவ முகாமை துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார். சுகாதாரத் துறை அமைச்சர் இணை இயக்குநர் டாக்டர் அன்பழகன், உதவி திட்ட அலுவலர் நவீன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் அருள்பிரகாசம், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பேசினர். முகாமில், இருதயம், நரம்பியல், சர்க்கரை, நுரையீரல், பல், மனநலம், குழந்தைகள் நலம், எலும்பு மூட்டு பிரிவு, சித்த மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த சிறப்பு மருத்துவர்கள் மருத்துவ பயனாளிகளை பரிசோதித்து மருத்துவ ஆலோசனை வழங்கினர். தேவையானவர்களுக்கு இசிஜி, எக்கோ, சர்க்கரை, எக்ஸ் ரே, சளி, மார்பக மற்றும் கர்ப்பப்பை வாய் பரிசோதனைகள் செய்யப்பட்டன. மேலும், மாற்றுத் திறனாளிகள் நலத்துறை சார்பில் 74 பேருக்கு அடையாள அட்டைகளை சட்டமன்ற உறுப்பினர் நா.அசோக்குமார் வழங்கினார். மயிலாடுதுறை மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி பேரூராட்சிக்குட்பட்ட பொறையார் நிவேதா பள்ளி வளாகத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட மருத்துவ முகாமினை மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த், பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா எம்.முருகன் தொடங்கி வைத்து, கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகத்தை வழங்கினர். மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இணை இயக்குநர் மரு.பானுமதி, சுகாதார பணிகள் துணை இயக்குநர் அஜீத் பிரபுகுமார், தரங்கம்பாடி பேரூராட்சி தலைவர் சுகுணசங்கரி குமரவேல், தரங்கம்பாடி பேரூராட்சி துணை தலைவர் பொன் ராஜேந்திரன், வட்டாட்சியர் சதீஷ்குமார், தரங்கம்பாடி பேரூராட்சி செயல் அலுவலர் ராமபிரசாத் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.