மதுரை:
“அம்மாவின் அரசு”, “அம்மாவின் ஆட்சி” என முழங்கிவரும் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ, அவரது தொகுதியில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சட்டசபையில் 110-ஆவது விதியின் கீழ் அறிவிக்கப்பட்டு அவரது உத்தரவின் பேரில் கட்டப்பட்ட மதுரை மாவட்டம் பரவை-துவரிமான் இடையில் பல லட்சம்ரூபாய் செலவில் கட்டப்பட்ட இணைப்புப்பாலம் “பாராக”மாறிவிட்டது.
மதுரை நகர் மட்டுமல்ல புறநகர் பகுதியிலும் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்காகவும் மாவட்டத்தின் வடகரையையும் தென்கரையையும் இணைக்கும் வகையில் பரவை-துவரிமான் இடையே பல லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்ட பாலத்தின் நிலை குறித்து அமைச்சர் செல்லூர் கே.ராஜூ கவலைப்படவில்லை.பாலத்தின் ஒரு பகுதி மதுரை-மேலக்கால் இடையே துவரிமான் சாலையோடு இணைக்கப்பட்டுவிட்டது. மறுபுறத்தில் பரவை பிரதான சாலையோடு இணைக்கப்படவில்லை. பாலம் வைகையாற்றில் “எனக்கென்ன” என நிற்கிறது. இதற்குக் காரணம் பரவை வைகையாற்றிலிருந்து பிரதானசாலையோடு இணைக்கும் பகுதியில் குடியிருப்புகள் உள்ளன. முதல்வர் 110 விதியின் கீழ் அறிவிக்கப்பட்ட பிறகும்பரவை பேரூராட்சி நிர்வாகம் அப்பகுதியில் வீடுகள் கட்ட அனுமதி வழங்கியதாகக் கூறப்படுகிறது.
அமைச்சர் செல்லூர் கே.ராஜூ இப்பிரச்சனையில் தலையிட்டு வைகையாற்றில் கட்டப்பட்டுள்ள இணைப்புப் பாலத்தை பரவையின் பிரதான சாலையோடு இணைக்கபோர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.அதே நேரத்தில் தற்போது குடியிருக்கும் மக்களுக்கு பொருத்தமான மாற்று இடத்தை வழங்கவேண்டும்.