மதுரை:
உலகெங்கிலும் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அத்தியாவசியப் பணிகள் அடிப்படையில் மருத்துவம், பொது சுகாதாரம், காவல்துறை பணிகளோடு கால்நடைத் துறையினரும் பணியாற்றிவருகின்றனர். மேலும் வீடுகளுக்கு சென்று கால்நடைகளுக்கு சிகிச்சை அளித்துவரும் நிலையில், கால்நடை மருந்தகங்கள், கால்நடை மருத்துவமனை, பன்முக மருத்துவமனைகள், கிளை நிலையங்கள் என அனைத்தும் செயல்பட்டு வருகின்றன. இதில் கால்நடை உதவி மருத்துவர்கள், கால்நடை ஆய்வாளர்கள், கால்நடை பராமரிப்பு உதவியாளர்கள் என அனைவரும் பணியாற்றி வருகின்றனர். ஆனால் இவர்களுக்கு எந்த ஒரு வசதியையும் கால்நடைத்துறை சார்பில் செய்து தரவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
குறிப்பாக பாதுகாப்பு உபகரணங்களான முகக் கவசமோ,கையுறைகளோ, சுத்தப்படுத்தும் திரவமான சானி டை சரோ இதுவரை வழங்கப்படவில்லை. இது குறித்து பல முறை அதிகாரிகளிடம் கோரியும் எந்த நடவடிக்கையும் இல்லாத நிலையில் கடந்த 15 நாட்களுக்கு முன்பு நாளிதழில் செய்தி வந்ததைத் தொடர்ந்து முகக் கவசமும், சானிடைசரும் பெற்றுக் கொள்ள உத்தரவிடப்பட்டு சென்னை தலைமை அலுவலகத்திலிருந்து உத்தரவு வந்தது.
அந்த உத்தரவின்படி கடந்த வாரம் முகக் கவசம் மட்டும் (அதுவும் குறைந்த அளவே ) வழங்கப்பட்டுள்ளது. இதில் என்ன கொடுமை என்றால் அதையும் கூட சம்பந்தப்பட்ட கால்நடை மருந்தகத்தில் பணிபுரியும் மருத்துவர்கள் மொத்தமாக உடன் பணிபுரியும் ஆய்வாளருக்கோ, உதவியாளருக்கோ வழங்கப்படவில்லை. மேலும் சானி டைசரும் யாருக்குமே வழங்கப்படவில்லை. கேட்டால் மருந்து கிட்டங்கியில் இருந்து முகக் கவசம் மட்டுமே கொடுக்கப்பட்டதாகவும் சானி டை சர் இருப்பு இல்லை என்றும் தெரிவித்துள்ளார்கள்.
கையுறை பற்றி பேச்சே இல்லை. கால்நடைதுறைக்கு முக்கிய தேவை என்பது கையுறை தான் .அதுவும் சரியாக வழங்கப்படவில்லை. பிற துறைகளில் பணிபுரியும் பணியாளர்களுக்கு உரிய பாதுகாப்பு உபகரணங்கள் முறையாக வழங்கப்பட்டு வரும்நிலையில் கால்நடை துறையில் பணி புரிபவர்களுக்கு மட்டும் வழங்கப்படவில்லை. ஏன் எங்களுக்கு நோய் தொற்று ஏற்படாதா? இது குறித்து அதிகாரிகளிடம் பலமுறை பணியாளர்கள் சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகளுக்கு எடுத்துக் கூறியும் நடவடிக்கை இல்லை. ஒழுங்கான முறையில் அனைவரும் பணிக்கு வர வேண்டும் என்று சொல்லும் அதிகாரிகள், கால்நடைத்துறையில் பணியாற்றும் பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்களை பெற்றுத் தர வேண்டும் என்ற அக்கறையி ல்லாமல் போனது ஏன்? பிற துறைகளில் பணியாற்றுபவர்களுக்கு அந்த துறையின் அதிகாரிகள் தேவையானவற்றை உடனடியாக பெற்றுத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால் எங்கள் துறை அதிகாரி இது பற்றி கண்டு கொள்வதே - சிறப்பு ஊதிய மோ, போக்குவரத்து வசதிகளோ எதுவுமே இல்லாத நிலையில் எங்களின் உயிர் பாதுகாப்புக்கான உபகரணங்களை கூட பெற்றுத்தரும் நிலை அதிகாரிகளுக்கு இல்லையே. ஒரு வேளை கொரோனா தாக்குதல் அனைத்தும் நீங்கியபிறகு பாதுகாப்பு உபகரணங்களை பெற்றுத் தருவார்களோ என்று கேள்வி எழுப்பியுள்ளார்கள்.