திருச்சி ஆட்சியர் அலுவலக வளாகத்தில் வருவாய் துறை அலுவலர்கள் தர்ணா
திருச்சிராப்பள்ளி, ஆக. 11-
தமிழ்நாடு வருவாய்த்துறை அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், திங்களன்று திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்துக்குள், வருவாய் துறை அலுவலர்கள் உள்ளிருப்பு தர்ணா போராட்டம் நடத்தினர்.
மாவட்ட ஆட்சியர் அலுவலக முதல் தளத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் அறை இருக்கும் நடைபாதை பகுதியில், நூற்றுக்கும் மேற்பட்ட வருவாய் துறை அலுவலர்கள் தரையில் அமர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். தகவலறிந்த காவல்துறையினர், அங்கு விரைந்து சென்று, வருவாய் துறை அலுவலர்களிடம் போராட்டம் குறித்து கேட்டறிந்தனர். இந்தப் போராட்டம் குறித்து கூட்டமைப்பு நிர்வாகிகள் கூறுகையில், தமிழக அரசின் சிறப்பு திட்டங்களை செயல்படுத்துவதற்கு கூடுதல் கால அவகாசம் வழங்க வேண்டும். ஆய்வுக் கூட்டங்கள் என்ற பேரில் நாள்தோறும் அலுவலர்களை வசை பாடுவதை நிறுத்தி கொள்ள வேண்டும். காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தர்ணா நடத்தி வருகிறோம். எங்களது கோரிக்கைகள் குறித்து அதிகாரிகள் பரிசீலிக்கும் வரை போராட்டத்தை தொடர்வது என முடிவு செய்துள்ளதாக தெரிவித்தனர்.
வருவாய்த்துறை அலுவலர்கள் போராட்டம் நடத்தியதால் மனுக்கள் மீது விசாரணை நடக்கும் பல்வேறு பணிகள் பாதிக்கப்பட்டன.