அஜித் குமார் குடும்பத்திற்கு பெ.சண்முகம் ஆறுதல் ரூ. 50 லட்சம் இழப்பீடு வழங்க வலியுறுத்தல்
சிவகங்கை, ஜூலை 3 - சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தில் போலீசாரால் அடித்துக் கொலை செய்யப்பட்ட மடப்புரம் இளைஞர் அஜித்குமாரின் குடும்பத்தினரை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம், சட்டமன்ற உறுப்பினர் எம். சின்னத்துரை, மாநில செயற்குழு உறுப்பினர் கே. அர்ஜூணன், மாநிலக்குழு உறுப்பினர் எஸ்.கே. பொன்னுத்தாய், மாவட்டச் செயலாளர் ஏ.ஆர். மோகன் உள்ளிட்ட தலைவர்கள் வியாழனன்று நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர். இந்தச் சந்திப்புக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய, சிபிஎம் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம், “இளைஞர் அஜித்குமார் அடித்துக் கொலை செய்யப்பட்டது, மிகமோசமான மனித உரிமை மீறலாகும்; இதுபோன்ற நிகழ்வுகள் இனிமேல் நடக்காமல் இருப்பதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போராடும்; இச்சம்பவத்தில் தமிழக முதல்வர் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதை வரவேற்கிறோம்; அதேபோல இளைஞர் அஜித்குமாரின் குடும்பத்திற்கு நிவாரணமாக ரூ. 50 லட்சம் வழங்க வேண்டும்” என்றார்