மனைவி மீது தீ வைப்பு: கணவன் கைது
நாகர்கோவில், ஏப்.17-களியக்காவிளை அருகே தெற்றிக்குழி, மேக்கேதட்டு விளை பகுதியைச் சேர்ந்தவர் கட்டிட தொழிலாளி கிறிஸ்டோபர்(38). இவரது மனைவி வினிதா (36). இவர்களுக்கு திருமணமாகி 11 ஆண்டுகள் ஆகிறது. இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். கிறிஸ்டோபருக்கு குடிப்பழக்கம் இருந்தது. இவர் தினமும் குடித்து விட்டு மனைவியிடம் தகராறு செய்து வந்தார். செவ்வாயன்று கிறிஸ்டோபர் மனைவியிடம் குடிக்க பணம் கேட்டு தகராறு செய்துள்ளார். வினிதா பணம் கொடுக்க மறுத்ததால் ஆத்திரம் அடைந்த கிறிஸ்டோபர் வீட்டில் இருந்த மண்ணெண்ணெய்யை வினிதா மீது ஊற்றி தீ வைத்தார். இதில் வினிதாவின் உடலில் தீக்காயம் ஏற்பட்டது. அக்கம்பக்கத்தினர் வினிதாவை மீட்டு குழித்துறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு வினிதாவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து பளுகல் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதை தொடர்ந்து காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து கிறிஸ்டோபரை கைது செய்தனர்.
பைக் மீது லாரி மோதி விபத்து வாலிபர் பலி; ஒருவர் படுகாயம்
தூத்துக்குடி, ஏப்.17-தூத்துக்குடி தாளமுத்துநகர், பூபாண்டியாபுரம், வஉசி நகரைச் சேர்ந்தவர் மலையாண்டி மகன் மணிகண்டன் (30). அதே பகுதியைச் சேர்ந்தவர் மூக்கையா மகன் அழகுமுத்து(38). கூலித் தொழிலாளர்களான இவர்கள் இருவரும் புதனன்று காலை பொட்டல்காட்டில் உள்ள உப்பளத்திற்கு வேலைக்குச் சென்று விட்டு காலை 11 மணியளவில் ஒரே மோட்டார் பைக்கில் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர்.பொட்டல்காடு விலக்கிலிருந்து தூத்துக்குடி - திருச்செந்தூர் மெயின் ரோட்டில் பைக் திரும்பியபோது, தூத்துக்குடி துறைமுகம் நோக்கி வேகமாகச் சென்ற லாரி பைக் மீது மோதியது. இதில், தூக்கி வீசப்பட்டு இருவரும் படுகாயம் அடைந்தனர். காயம் அடைந்த இருவரும் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். ஆனால், வழியிலேயே மணிகண்டன் உயிரிழந்தார். அழகுமுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விபத்து குறித்து முத்தையாபுரம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஓய்வு பெற்ற எஸ்.ஐ. மனைவியிடம் நகை பறிப்பு
தூத்துக்குடி, ஏப்.17 -தூத்துக்குடியை சேர்ந்தவர் மாடசாமி. இவர் தூத்துக்குடி மாவட்ட காவல்துறையில் எஸ்ஐ-யாக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது மனைவி ஜெயலட்சுமி (54). இவர்கள் இருவரும் திங்களன்று இரவு அங்குள்ள கோவில் திருவிழாவிற்கு சென்று விட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். தூத்துக்குடி கருப்பசாமி கோவில் தெரு பகுதியில் வந்தபோது ஒரே பைக்கில் வந்த இரு வாலிபர்கள் ஜெயலட்சுமி கழுத்தில் அணிந்திருந்த 10 பவுன் நகையை பறித்துச் சென்றனர். ஜெயலட்சுமி அதிர்ச்சியில் அலறினார். அவரது சத்தம் கேட்டு அப்பகுதி மக்கள் அங்கு குவிந்தனர். ஆனாலும் கொள்ளையர்கள் அங்கிருந்து தப்பிச் சென்று விட்டனர். அவர்கள் பறித்து சென்ற நகையின் மதிப்பு ரூ.2.5 லட்சம். இதுகுறித்து புகாரின் பேரில் தூத்துக்குடி வடபாகம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.