8 மாநில முதல்வர்களுக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்
‘உச்சநீதிமன்றத்தின் உத்தரவை கேள்விக்குள்ளாக்கும் குடியரசுத் தலைவரின் குறிப்பினை ஒன்றுபட்டு எதிர்ப்போம்’
சென்னை, மே 18 - ஆளுநர்கள் மற்றும் குடியரசுத் தலைவர் மாநில மசோதாக்கள் மீது முடிவெடுக்க காலக்கெடு நிர்ணயிக்க முடியுமா என்று உச்ச நீதிமன்றத்திடம் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு எழுப்பிய கேள்விகள் தொடர்பாக கேரளா, கர்நாடகா, மேற்கு வங்கம் உள்ளிட்ட 8 மாநில முதல்வர்களுக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். “உச்சநீதிமன்றத்திடம் கேள்விகள் கேட்டு குடியரசுத் தலைவர் அனுப்பி யுள்ள குறிப்பினை நாம் ஒன்றுபட்டு எதிர்க்க வேண்டும். நீதிமன்றத்தின் முன் நாம் அனைவரும் ஒருங் கிணைந்த சட்ட உத்தியை உருவாக்கி, அரசியல் அடிப்படைக் கட்டமைப்பை பாதுகாக்க வழிவகுத்திட வேண்டும். இந்த முக்கியமான பிரச்சினையில் மாநில முதல்வர்களின் உடனடியான தனிப்பட்ட தலையீட்டை எதிர்நோக்கு கிறேன்” என்று ஸ்டாலின் தனது கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.
கடிதத்தின் விரிவான விவரங்கள்:
இந்தியக் குடியரசுத் தலைவர், ஒன்றிய அரசின் ஆலோசனையின் பேரில், கடந்த 13-5-2025 அன்று அரசியலமைப்பு சட்டத்தின் 143ஆம் பிரிவின் கீழ் சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி 14 கேள்விகளை உச்ச நீதிமன்றத்திடம் எழுப்பியுள்ளார். இந்தக் குறிப்பு எந்த மாநிலத்தை யும் அல்லது தீர்ப்பையும் குறிப்பாகக் குறிப்பிடவில்லை என்றாலும், தமிழ்நாடு அரசு, தமிழ்நாடு ஆளு நருக்கு எதிராக தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பினைக் கேள்விக்குள்ளாக்கு வதே இதன் நோக்கம் என்று ஸ்டாலின் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பு அனைத்து மாநிலங்களுக்கும் பொருந்தும் வகையில் அமைந்துள்ள தாகவும், மாநிலங்களுக்கும் ஒன்றிய அரசுக்கும் இடையிலான கூட்டாட்சி அமைப்பையும் அதிகாரப் பகிர்வை யும் நிலைநிறுத்துவதாக அமைந்து ள்ளதாகவும் கடிதத்தில் குறிப்பிடப் பட்டுள்ளது. ஆளுநர்கள் மாநில மசோதாக் களுக்கு ஒப்புதல் அளிப்பதில் தேவை யற்ற தாமதத்தை ஏற்படுத்துவதையும், எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங் களின் செயல்பாட்டைத் தடுக்க ஒன்றிய அரசு ஆளுநர்களைப் பயன்படுத்து வதையும் ஸ்டாலின் விமர்சித்துள் ளார். உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பில் ஆளு நர்கள் மசோதாக்களை கையாளும் போது மாநில அமைச்சரவையின் உதவி மற்றும் ஆலோசனைக்கு கட்டுப் பட வேண்டும் என்றும், மசோதாக் களுக்கு ஒப்புதல் அளிப்பதை தாமதப் படுத்த “வீட்டோ” அதிகாரத்தைப் பயன்படுத்த முடியாது என்றும் தெளிவுபடுத்தியுள்ளதாக கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. “பாஜக அரசாங்கம் தனது சூழ்ச்சி யின் முதல் அங்கமாக குடியரசுத் தலைவரை உச்ச நீதிமன்றத்தில் பரிந்துரை பெறுமாறு அறிவுறுத்தி யுள்ளது. இந்த முக்கியமான கட்டத்தில், கூட்டாட்சித் தத்துவத்தையும், மாநில சுயாட்சிக் கொள்கையையும் காத்திடும் நோக்கம் கொண்ட, பாஜக-வை எதிர்க்கும் மாநில அரசுகள் இந்தச் சட்டப் போராட்டத்தில் இணைய வேண்டும்” என்று ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.