ஸ்டெம் கண்டுபிடிப்பு, கற்றல் மையம் அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்
புதுக்கோட்டை, ஆக. 12- புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள STEM கண்டுபிடிப்பு மற்றும் கற்றல் மையத்தினை, அமைச்சர்கள் எஸ்.ரகுபதி, அன்பில் மகேஸ் பொய்யாமொழி, சிவ.வீ.மெய்யநாதன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். டிஜிட்டல் ஈக்வலைசர் திட்டத்தின்கீழ் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 212 அரசுப் பள்ளிகளில் செயல்படும் வகையில், மாவட்டத்தில் உள்ள வட்டார வள ஆசிரிய பயிற்றுநர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டு, அவர்கள் மூலம் 212 அரசு பள்ளி ஆசிரியர்களுக்கும் பயிற்சிகள் வழங்கப்படுகிறது. ஒவ்வொரு STEM கண்டுபிடிப்பு மற்றும் கற்றல் மையமும் கோடிங், எந்திரவியல், மின்னணுவியல், விண்வெளி தொழில்நுட்பவியல் கருவிகள், முப்பரிமாண அச்சு இயந்திரம் மற்றும் மாதிரி உருவாக்கம் போன்ற துறைகளில் நேரடி கற்றலை எளிதாக்கும் மேம்பட்ட கருவிகளைக் கொண்டுள்ளது. இது மாணவர்களை அன்றாட வாழ்வியல் சவால்களை அறிவியல் மூலம் அணுகுவதற்கு தயார் செய்கின்றது. அதன்படி, SILC கற்றல் மையத்தின் மதிப்பீடு ரூ.15 லட்சம் ஆகும். அந்தவகையில், கீரமங்கலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், STEM கண்டுபிடிப்பு மற்றும் கற்றல் மையத்தினை, இயற்கை வளங்கள் துறை அமைச்சர் எஸ்.ரகுபதி, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். நிகழச்சிக்கு மாவட்ட ஆட்சியர் மு.அருணா தலைமை வகித்தார். இணை இயக்குநர்கள் வை.குமார் (ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி), மா.இராமகிருஷ்ணன் (மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம்), முதன்மைக் கல்வி அலுவலர் கூ.சண்முகம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.