tamilnadu

img

மதுரை: தூய்மை பணியாளர்கள் கைது - சு.வெங்கடேசன் எம்பி கண்டனம்

மாநிலம் முழுக்க தூய்மை பணியாளர்களின் போராட்டத்தை காவல் துறைதான் கையாளுமென்றால் நகராட்சி துறையும், தொழிலாளர் நலத்துறையும் எதற்கு? என மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “மதுரை மாநகராட்சி வளாகத்தில் ஜனநாயக வழியில் போராடிய தூய்மை பணியாளர்கள் காவல்துறையினரால் அராஜகமாக கைது செய்யப்பட்டதற்கு எனது கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

மாநிலம் முழுக்க தூய்மை பணியாளர்களின் போராட்டத்தை காவல் துறைதான் கையாளுமென்றால் நகராட்சி துறையும், தொழிலாளர் நலத்துறையும் எதற்கு?

மதுரையில் தூய்மைப்பணிகளை தனியாருக்கு கொடுத்த பின்னர் அந்த நிறுவனம் செய்துள்ள சட்ட மீறல், சம்பளக்குறைப்பு, ஒப்பந்த விதி மீறல், தொழிலாளிகளுக்கு இழைக்கப்பட்ட அநீதி ஆகியவை எண்ணற்றவை. ஆனால் அவைகள் மீது எந்த விதமான சட்ட நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை. ஆனால் தங்களின் நியாயமான கோரிக்கைகளுக்காக போராடும் தொழிலாளிகள் மீது இரவோடு இரவாக  கைது நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

தனியார் நிறுவனங்களுக்கு ஆதரவாக மட்டுமல்லாமல் தொழிலாளர்களுக்கு எதிராக காவல்துறை தொடர்ந்து களம் இறக்கப்படுவது அரசுக்கு அவப்பெயரைத்தான் உருவாக்கும்.” என்று அதில் தெரிவித்துள்ளார்.