தடைகளை உடைப்போம்! வாழ்வுரிமை வெல்வோம் திருச்சியில் மாற்றுத்திறனாளிகள் சங்கத்தின் 5-வது மாநில மாநாடு எழுச்சி முழக்கம்
திருச்சிராப்பள்ளி, டிச. 21- தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக் கான சங்கத்தின் 5-வது மாநில மாநாடு திருச்சியில் மூன்று நாட்கள் எழுச்சியுடனும் உணர்ச்சி கரமாகவும் நடைபெற்றது. மாற்றுத்திறனாளிகளின் உரிமை களை வென்றெடுக்கவும், சமு தாயத்தில் அவர்களுக்கு நிலவும் தடைகளைத் தகர்க்கவும் இந்த மாநாடு ஒரு முக்கிய அரசியல் களமாக அமைந்தது. மாநாட்டின் துவக்கமும் பேரணியும் டிசம்பர் 19-ஆம் தேதி வெள்ளிக் கிழமை மாலை, திருச்சி மன்னார் புரம் ராணுவ மைதானத்தில் டி. லட்சுமணன் நினைவுத் திடலில் எழுச்சியான பேரணி மற்றும் கலை நிகழ்ச்சிகளுடன் மாநாடு தொடங் கியது. மாநாட்டின் இரண்டாம் நாளான சனிக்கிழமை காலை, சமயபுரம் எம்ரால்டு திருமண மண்டபத்தில் ஸ்டேன் சுவாமி நினைவு அரங்கத்தில் மாநிலக் குழு உறுப்பினர் பி. திருப்பதி மாநாட்டுக் கொடியை ஏற்றி வைத் தார். இதனைத் தொடர்ந்து, என்.பி. ஆர்.டி பொதுச் செயலாளர் டி. முரளிதரன் கண்காட்சியைத் திறந்து வைத்தார். விடிவெள்ளி பள்ளி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் பார்வையாளர் களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தின. பிரதிநிதிகள் மாநாடு பிரதிநிதிகள் மாநாட்டிற்கு மாநிலத் தலைவராக தோ. வில்சன், அ. ஜெயந்தி, எம். புருஷோத்தமன், ஆர். அமலா ராணி மற்றும் பி. குமார் ஆகி யோர் தலைமைத் தாங்கினர். வர வேற்புக்குழுத் தலைவர் வி.ஆர்.அண்ணாதுரை வரவேற்புரை ஆற்றினார். மாநிலத் துணைத் தலைவர் சி. ரமேஷ்பாபு அஞ்சலி தீர்மானத்தை வாசித்தார். மாநாட்டைத் தொடங்கி வைத்துப் பேசிய சென்னை உயர் நீதிமன்ற மேனாள் நீதியரசர் முனைவர் எஸ். விமலா வேல்முரு கன், ஒரு யானையின் கதையைக் கூறி மாற்றுத்திறனாளிகளிடம் உள்ள மனத்தடையை உடைக்க வேண்டிய அவசியத்தை வலியுறுத் தினார். சிறிய வயதில் கயிற்றால் கட்டப்பட்ட யானை, தான் வளர்ந்து பெரிய பலம் பெற்ற பிறகும் அந்த நினைவிலேயே தன்னை விடு வித்துக்கொள்ள முயலாமல் இருப் பதைப் போல, மாற்றுத்திறனாளி களின் முன்னேற்றத்திற்கு ‘முடி யாது’ என்ற எண்ணமே பெருந் தடையாக உள்ளதாகக் குறிப்பிட்டார். மாற்றுத்திறனாளிகளின் குறை பாடு என்பது அவர்களின் உடல் சார்ந்ததல்ல, மாறாகச் சமுதாயம் உருவாக்கி வைத்துள்ள கட்ட மைப்புத் தடைகளே உண்மை யான குறைபாடுகள் என்று அவர் சுட்டிக்காட்டினார். சாலைகளிலும் பொது இடங்களிலும் முறையான வசதிகள் இல்லாததே சமுதாயம் ஏற்படுத்தும் முட்டுக்கட்டை என் றார். அணுகல் உரிமை (Right to Accessibility) என்பது எவ்வித சமாதானமும் இன்றி உடனடி யாக வழங்கப்பட வேண்டிய அடிப் படை உரிமை என்றும், சமத்து வம் இருந்தால் மட்டுமே உண்மை யான உரிமை நிலைபெறும் என்றும் அவர் தெரிவித்தார். களப்போராட்ட அறிவிப்புகள் மாநிலத் துணைத்தலைவர் ப.சு. பாரதி அண்ணா, சமத்துவ உரிமைகளைப் பறிக்கும் பிற்போக்குக்கருத்துகளையும், மத்திய அரசின் மாற்றுத் திறனாளி விரோதப் போக்குகளையும் எதிர்த்து வலுவான களப்போராட்டங்களை முன்னெடுக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திச் சிறப்புத் தீர்மானத்தை வாசித்தார். மாநிலப் பொதுச்செயலாளர் பா. ஜான்சிராணி வேலை ஸ்தாபன அறிக்கையையும், மாநிலப் பொருளாளர் கே.ஆர். சக்கரவர்த்தி வரவு - செலவு அறிக்கையையும் சமர்ப்பித்தனர். மாநாட்டில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகளின்படி, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தைச் சிதைக்கும் மத்திய அரசைக் கண்டித்து, வரும் ஜனவரி 6-ஆம் தேதி தமிழகம் முழு வதும் ஆயிரம் மையங்களில் பிடிஓ அலுவலகங்கள் முன்பாகச் சட்ட நகல் கிழிப்புப் போராட்டம் நடத்தத் தீர்மானிக்கப் பட்டது. மேலும், உதவித்தொகையை உயர்த்தி வழங்கக் கோரி பிப்ரவரி 10-ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் முன் மறியல் போராட்டம் நடத்தப்பட வுள்ளது. முக்கியக் கோரிக்கைகளும் நிறைவும் தமிழக அரசு மாற்றுத்திறனாளிகளின் உதவித்தொகையை 6,000 முதல் 15,000 ரூபாய் வரை உயர்த்தி வழங்க வேண் டும், தனியார் துறையில் வேலைவாய்ப்புக் கான அரசாணையைத் தீவிரமாக நடை முறைப்படுத்த வேண்டும், தடையற்ற சூழலை நீதிமன்றங்கள் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் உருவாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இத்தீர்மானங்களை கே.பி. பாபு, வி. பெரிய சாமி, யூ ஜெபஸ்டின்ராஜ், எம். குமார், சி.முருகேசன் உள்ளிட்ட நிர்வாகிகள் முன்மொழிந்தனர். மாதர்சங்க மத்தியக்குழு உறுப்பினர் எஸ்.பொன்னுத்தாய், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநிலத் தலைவர் மு. பாஸ்கர், வாஞ்சிநாதன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். மாநாட்டுச் சிறப்பு மலரை வழக்கறிஞர் உ. நிர்மலா ராணி வெளி யிட, வழக்கறிஞர்கள் கே.சி. காரல் மார்க்ஸ், எஸ். ராணி உள்ளிட்டோர் பெற்றுக் கொண்டனர். நிர்வாகிகள் தேர்வு இறுதியில், மாநிலத் தலைவராக தோ. வில்சன், பொதுச்செயலாளராக பா.ஜான்சிராணி, பொருளாளராக கே.ஆர். சக்கரவர்த்தி ஆகியோர் மீண்டும் தேர்வு செய்யப்பட்டனர். மாநகர் மாவட்டப் பொருளாளர் மாலதி சைகை மொழி பெயர்ப்பு செய்ய, திருச்சி புறநகர் மாவட்டச் செயலாளர் த. ரஜினிகாந்த் நன்றியுரை கூற மாநாடு எழுச்சியுடன் நிறைவுற்றது.
