தமிழகத்தில் தேர்வு மையங்களை அமைக்க ரயில்வேதுறை நடவடிக்கை எடுக்க வேண்டும் ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ வலியுறுத்தல்
மனிதநேய மக்கள் கட்சியின் தலைவரும், பாபநாசம் எம்.எல்.ஏவுமான ஜவாஹிருல்லா விடுத்துள்ள அறிக்கையில், தெற்கு ரயில்வேயில் உதவி லோகோ பைலட் 493 பணியிடங்களுக்கு 2 ஆம் கட்டத் தேர்வு மார்ச் 19 இல் நடைபெற உள்ளது. முதல்கட்டத் தேர்வு அருகிலுள்ள மையங்களில் நடந்த நிலையில், 2 ஆம் கட்டத் தேர்வுக்குத் தெலுங்கானாவில் தேர்வு மையம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நடவடிக்கை, தேர்வு எழுதுபவர்களை அதிர்ச்சி அடையச் செய்திருக்கிறது. சுமார் 6000 பேர் தேர்வு எழுத உள்ள நிலையில், அதிகமான நபர்களுக்கு 1,500 கிலோமீட்டருக்கு அப்பால் வெளி மாநிலங்களில் தேர்வு மையம் அமைக்கப்பட்டு இருப்பது கண்டனத்திற்குரியது. இது நியாயமற்ற முறையில் தமிழக தேர்வர்களை மனஉளைச்சலுக்கு ஆளாக்கி, பணியில் சேர விடாமல் தடுக்கும் உத்தி என்றே கருத வேண்டி இருக்கிறது. எனவே தாமதம் இன்றி தமிழகத்தில் தேர்வு மையங்களை அமைக்க உரிய நடவடிக்கையை தென்னக ரயில்வே துறை எடுக்க வேண்டும் என்று கூறப் பட்டுள்ளது.
“சகி” பெண்களுக்கான ஒருங்கிணைந்த சேவை மையத்தில் ஆட்சியர் ஆய்வு
திருவாரூர் மாவட்டம் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் கிராமிய சுய வேலைவாய்ப்பு பயிற்சி மையம் மற்றும் திருவாரூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் செயல்படும் “சகி” பெண்களுக்கான ஒருங்கிணைந்த சேவை மையத்தினை, திருவாரூர் மாவட்ட ஆட்சியர் வ. மோகனச்சந்திரன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். திருவாரூர் அருகே உள்ள பவித்திரமாணிக்கத்தில் அமைந்துள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் கிராமிய சுய வேலைவாய்ப்பு பயிற்சி மையத்தினை பார்வையிட்டு, 2024-2025 ஆம் ஆண்டிற்கான பயிற்சி விவரங்கள் மற்றும் பயிற்சி பெற்று, தற்போது வெற்றிகரமாக தொழில் செய்துகொண்டிருக்கும் நபர்கள் பற்றிய விவரங்களை கேட்டறிந்தார். 2025-2026 ஆம் ஆண்டிற்கான பயிற்சி தொடர்பான ஆலோசனைகளை மாவட்ட ஆட்சியர் வழங்கினார். தொடர்ந்து, திருவாரூர் மாவட்ட மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், பெண்களின் நலனுக்கான ‘சகி’ என்ற பெயரில் பெண்களுக்கான ஒருங்கிணைந்த மையத்தில் மாவட்ட ஆட்சியர் திடீர் ஆய்வு மேற்கொண்டு, இம்மையத்தின் மூலம் மேற்கொள்ளப்பட்டுள்ள மீட்பு சேவைகள் மற்றும் அவசர நடவடிக்கைகள் குறித்தும், பாதிக்கப்பட்ட பெண்களுக்கு வழங்கப்படும் மருத்துவ சேகைள் குறித்தும், தேவைப்படும் பட்சத்தில் பாதிக்கப்படும் பெண்களுக்கு அவர்களின் ஒப்புதலின்படி காவல்துறை உதவியுடன் முதல் கட்ட தகவல் அறிக்கை மற்றும் சிஎஸ்ஆர் வழங்கிய விவரங்கள் குறித்தும், பாதிக்கப்பட்ட பெண்களுக்கு அவர்களின் மனநிலைக்கு ஏற்றவாறு உளவியல் ரீதியாக ஆலோசனை மற்றும் உதவிகள் வழங்கிய விவரங்கள் குறித்தும், மகளிர் உதவி எண் மூலம் பெறப்பட்ட புகார் குறித்து, எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் பற்றியும் கேட்டறிந்தார். இந்நிகழ்வில், RSETI-யில் பயிற்சி மைய இயக்குநர் கணேஷ், சகி மைய நிர்வாகி மற்றும் மைய பணியாளர்கள் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.