tamilnadu

img

முன்னுக்கு வந்த பிரச்சனைகள் - சிபிஐ(எம்) உதயம்

முன்னுக்கு வந்த பிரச்சனைகள் - சிபிஐ(எம்) உதயம்

1952 பொது தேர்தலுக்கு பிறகு எழுந்ததைப்போலவே 1957 பொதுத் தேர்தலுக்கு பிறகும் கட்சிக்குள் அரசியல் சித்தாந்த விவாதங்கள் தலை தூக்கின. இதில் ஆழமான கருத்து முரன்பாடுகளும் ஏற்பட்டன. இதற்கு மத்தியில் கட்சி ஒன்றுபட்டு தலை யிட வேண்டிய ஒரு அவசர பிரச்சனை முன்னுக்கு வந்தது. அதுதான் மொழி வாரியாக மாநிலங்களை பிரிக்க வேண்டுமென்ற கோரிக்கை. கட்சி இது குறித்து ஏற்கனவே விவாதித்து ஒரு ஒன்றுபட்ட அணுகுமுறையை உருவாக்கியிருந்ததால் நமது தலையீடுகளில் எந்த பிரச்சனையும் எழவில்லை.

மொழிவாரி மாநிலங்கள்

மொழிவாரி மாநிலங்கள் அமைக்கப்பட வேண்டும்  என்பதே கட்சி எடுத்திருந்த உறுதியான நிலைபாடு. மலையாள மொழி பேசும் பகுதிகளை இணைத்து ஐக்கிய கேரளம் உருவாக்குவதற்காக கட்சி கடுமை யாக போராடியது. ஆந்திராவில் விசால ஆந்திரா கோரிக்கை வலுவாக முன்னுக்கு வந்தது. இக்கோரிக்கைக்காக பொட்டி ஸ்ரீராமுலு சாகும்வரை உண்ணாவிரதம் மேற்கொண்டார். மத்திய அரசின் அலட்சியம் காரணமாக அவர் உயிர் துறக்கும் நிலை  ஏற்பட்டது. இது ஆந்திர மாநிலத்தில் பெரும் கல வரத்தை உருவாக்கியது. தமிழ் பேசும் பகுதிகளை ஒருங்கிணைத்து ஒரே மாநிலமாக உருவாக்க பெரும் போராட்டங்கள் வெடித்தன. இப்போராட்டங்கள் அனைத்திலும் கம்யூனிஸ்ட் கட்சி முன் நின்றது. இப்போராட்டங்களின் தீவிரம் மற்றும் பலரது  உயிர் தியாகத்திற்கு பிறகு மத்திய அரசு இக்கோரி க்கையை ஏற்று மொழிவாரியாக மாநிலங்களை உரு வாக்கும் முயற்சியில் இறங்கியது. ஆந்திரா, சென்னை. கேரளம், கர்நாடகம் பின்னர் மகாராஷ்டிரா என பல் வேறு மொழிவாரி மாநிலங்கள் உருவாக்கப்பட்டன. சென்னை மாநிலத்திற்கு தமிழ்நாடு என பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என்பதற்காக நடைபெற்ற பிரச்சாரம் மற்றும் போராட்டாங்களில் கம்யூனிஸ்ட் இயக்கம், திராவிட இயக்கங்கள் குறிப்பிடத்தக்க பாத்தி ரம் வகித்தன. நாடாளுமன்றத்தில் இதற்கான தீர்மானத்தை தோழர் பி.ராமமூர்த்தி முன்மொழிந்தி ருந்தார். அவர் அன்றைக்கு சபைக்கு வர இயலாத நிலை இருந்ததால் தோழர் பூபேஷ் குப்தா இதன் மீதான விவாதத்தை தொடங்கி வைத்தார். நாடாளு மன்றத்தில் இதன்மீது கடுமையான வாக்குவாதம் நடந்தது. மத்திய அரசு துவக்கத்தில் இக்கோரிக்கை யை ஏற்க மறுத்தது. 1967-ல் திமுக ஆட்சி ஏற்பட்ட பிறகு சென்னை மாகாணத்திற்கு தமிழ்நாடு என பெயர் சூட்ட வேண்டுமென சட்டமன்றத்தில் தீர்மானம் நிறை வேற்றி மத்திய அரசுக்கு அனுப்பி வைத்தது. இத்தீர்மானம் மற்றும் போராட்ட நிர்பந்தத்திற்கு பிறகு மத்திய அரசு தனது ஒப்புதலை கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. தியாகி சங்கரலிங்கனார் மேற்கண்ட கோரிக்கைக் காக உண்ணாவிரதம் இருந்து உயிர் நீத்தார். அவர் மரணமடையும் தருணத்தில் தனது உடலை கம்யூனிஸ்டுகளிடம் ஒப்படைக்க வேண்டும் என கூறியிருந்தார். அந்த அளவிற்கு கம்யூனிஸ்ட் இயக்கம் இப்போராட்டத்தில் முன் நின்றது. தியாகி சங்கரலிங்கனார் இறுதி நிகழ்ச்சியை கம்யூனிஸ்ட் இயக்கம் முன்னின்று நடத்தியது.  குமரி மாவட்டத்தை தாய் தமிழகத்துடன் இணைக்க  வேண்டுமென்ற கோரிக்கைக்காக காங்கிரஸ் கட்சியின் சார்பாக நேசமணி மட்டுமல்ல; கம்யூனிஸ்ட் இயக்கத்தின் சார்பாக தோழர்கள் ஜி.எஸ்.மணி, டி.மணி  போன்ற தலைவர்களும் இப்போராட்டத்தில் தீவிரமாக முன் நின்றார்கள். இப்போராட்டத்தில் கம்யூனிஸ்ட்டு களுக்கு வரலாற்று சிறப்புமிக்க பாத்திரம் உண்டு. பிற்காலத்தில் இக்கோரிக்கை ஏற்கப்பட்டு குமரி  மாவட்டம் தமிழகத்தின் பகுதியாக இணைக்கப்பட்டது. சென்னை மாநகரத்தை ஆந்திரத்துடன் இணைக்க  வேண்டுமென்று கோரிக்கை எழுந்த போது கம்யூனிஸ்ட் இயக்கத்தின் தமிழ்நாடு மாநிலக்குழு மட்டு மல்ல, ஆந்திர மாநிலக்குழுவும் இணைந்து சென்னையை தமிழ்நாட்டுடன் இணைக்க வலியுறுத்தி யது. இதற்காக கம்யூனிஸ்ட் இயக்கமும் வேறுபல ஜனநாயக இயக்கங்களும் பல போராட்டங்களை நடத்தின. இறுதியில் சென்னையை தமிழ்நாட்டுடன் இணைக்க வேண்டிய கட்டாயம் மத்திய அரசுக்கு ஏற்பட்டது. மொழிவாரி மாநிலங்களுக்காகவும் அவை  சரியான வடிவில் உருவெடுப்பதற்காகவும் கம்யூ னிஸ்ட் இயக்கம் வகித்த பாத்திரம் எவரும் மறுக்க  முடியாதது. இதோடு தாய்மொழி கல்வி, மாநிலங் களில் தாய் மொழியை ஆட்சி மொழியாக்குவது போன்ற கோரிக்கைகளுக்காகவும் கம்யூனிஸ்ட் இயக்கம் வலுவாக குரல் கொடுத்து போராடியது.

1962 பொதுத் தேர்தல்

1957 பொதுத் தேர்தலை போலவே 1962 பொதுத் தேர்தலையும் கருத்து வேறுபாடுகளை நிறுத்தி வைத்து ஒன்றுபட்டு சந்திப்பது என கம்யூனிஸ்ட் இயக்கம் தீர்மானித்தது. அவ்வாறு சந்திக்கவும் செய்தது. இத்தேர்தலில் 29 நாடாளுமன்ற தொகுதிகளை கைப்பற்றியதோடு 9.94 சதம் வாக்குகளையும் பெற்று நாடாளுமன்றத்தின் பிரதான எதிர்க்கட்சி என்ற அந்தஸ்தை கட்சி தக்க வைத்துக்கொண்டது.

அரசியல் தத்துவார்த்த சர்ச்சைகள்

1962 பொதுத்தேர்தலுக்குப் பிறகு உட்கட்சி விவாதம் மீண்டும் தொடங்கியது. இந்த விவாதத்தில் மையமான அம்சம் வர்க்கப் போராட்டமா, வர்க்க சமரசமா என்பது தான். அரசியல் ரீதியாக காங்கிரசுடன் இணைந்து செயல்பட வேண்டும் என ஒரு பகுதியினரும், காங்கிரசை உறுதியாக எதிர்த்து போராட வேண்டும் என்று இன்னொரு பகுதியினரும் நிலைபாடு எடுக்கும் விவாதமாகவும் இது அமைந்தது.

இந்திய - சீன எல்லைப் பிரச்சனை

இந்த வாதங்கள் நடந்து கொண்டிருந்த வேளையில்  இந்திய-சீன யுத்தம் துவங்கிவிட்டது. எல்லை பிரச்ச னை குறித்து இந்தியா - சீனா இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தைகள் வெற்றி பெறாத நிலையில், இந்த மோதல் ஏற்பட்டது. இந்தியாவின் எல்லைகளை பாதுகாக்க வேண்டும் என்பதில் கம்யூனிஸ்ட் இயக்கத்திற்குள் எந்த மாறுபாடும் இல்லை. கட்சிக்குள் நடந்த அரசியல், சித்தாந்த சர்ச்சையில் வர்க்க  போராட்டமே என்ற நிலைப்பாடு எடுத்த தோழர் பி.ராமமூர்த்தி 1962 இல் நடந்த கட்சியின் தேசிய கவுன்சில் கூட்டத்தில் இந்திய-சீன எல்லை பிரச்சனை குறித்து ஒரு நகல் அறிக்கையை முன் வைத்தார்.இதன் சாரம்சம் வருமாறு: “நமது எல்லைகளை பாதுகாக்க தமது இன்னுயிரை  ஈந்துள்ள ஜவான்களுக்கு தேசிய கவுன்சில் தனது நெஞ்சார்ந்த அஞ்சலியை செலுத்துகிறது. நமது எல்லையை பாதுகாப்பது என்ற பிரச்சனையில் தேச பாதுகாப்பை பலப்படுத்தும் நிலைபாட்டில் கம்யூனிஸ்ட் கட்சி உறுதியாக முன் நிற்கிறது. இன்றைய நிலையில் இந்தியா தானாகவே யுத்த  நிறுத்தம் செய்வது என்ற பேச்சுக்கே  இடமில்லை. ஆனால், அதே நேரத்தில் நமது எல்லைகளை பாதுகாக்க  அனைத்து  நடவடிக்கைகளையும் எடுத்துக்கொண்டே, இன்றைய மோதலை நிறுத்திடவும் சமாதான பூர்வமான பேச்சுவார்த்தை மேற்கொள்வதற்கும் பெரும்முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.”  ஏறத்தாழ இதே சாராம்சம் கொண்ட நகல் அறிக்கையை தோழர்கள் இஎம்எஸ் நம்பூதிரிபாட் மற்றும் பூபேஷ் குப்தாவும் முன்மொழிந்தனர். இந்த நகல் அறிக்கைகளின் மீது என்ன தவறு  இருக்க முடியும்? ஆனால் காங்கிரஸ் ஆட்சியாளர் களும், பிற்போக்குவாதிகளும் இந்த அறிக்கையை  முன்மொழிந்தவர்களையும் இதனை ஆதரித்தவர் களையும் சீன ஏஜெண்டுகள் என முத்திரை குத்தினர். அது மட்டுமல்ல, அன்றைய காங்கிரஸ் அரசு அவசர கால பிரகடனத்தை வெளியிட்டு பேச்சுரிமை, எழுத்து ரிமை போன்ற அனைத்து ஜனநாயக உரிமைகளை யும் நிறுத்தி வைத்தது. மேற்கண்ட நகல் அறிக்கை யின் ஆதரவாளர்களையும் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள், ஊழியர்களின் ஒரு பகுதியினரையும் கைது செய்து சிறையில் அடைத்தது காங்கிரஸ் ஆட்சி.

சிபிஐ(எம்) உதயம்

இங்கு கவனிக்க வேண்டிய முக்கிய அம்சம் என்ன வென்றால் 1952 துவங்கி கட்சிக்குள் நடைபெற்று வந்த அரசியல் - சித்தாந்த சர்ச்சைகள் பிற்காலத்தில் தீவிரமடைந்தன என்பதுதான். அதுவும் 1956 சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியின் 20வது மாநாடு நிறைவேற்றிய அரசியல் தீர்மானத்திற்கு பிறகு தீவிரமைடந்தது. குருசேவ் தலைமையில் சோவியத் சுட்சிக்குள் திருத்தல்வாதப் போக்குகள் வலுவாக வெளிப்பட்டன. இந்திய கட்சிக்குள்ளும் இதன் தாக்கம் வலுவாக இருந்தது. இதோடு இந்திய நிலைமைகள் குறித்த கருத்து வேறுபாடுகளும் இணைந்து இந்த முரண்பாடு கள் தீவிர வடிவமெடுத்தன. இந்நிலையில் 1964 ஏப்ரல் 11ல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய கவுன்சில் கூடியபோது அரசியல் தத்துவார்த்த சர்ச்சைகளில் சமரசம் ஏற்படாத நிலையில் 32 தேசிய கவுன்சில் உறுப்பினர் கள் அதிலிருந்து வெளியேறினார்கள். இவர்கள் தாங்கள் ஏன் வெளியேறினோம் என்பது குறித்து விளக்கி தனியாக ஒரு அறிக்கை வெளியிட்டார்கள். இதன் தொடர்ச்சியாக 1964 ஜூலை 7- 11 தெனாலியில் சிறப்பு மாநாடு (கன்வென்சன்) நடைபெற்றது. மார்க்சிய லெனினிய அடிப்படையில் இந்திய நிலைமைகளை மதிப்பீடு செய்த இந்த சிறப்பு மாநாடு 41 பேர் கொண்ட மத்திய அமைப்புக் குழுவை முடிவு செய்தது. இந்த மத்திய அமைப்புக்குழு உரிய அரசியல் ஸ்தாபன முயற்சிகளை மேற்கொண்டு கட்சியின் 7வது மாநாட்டை  நடத்துமாறு பணித்தது. இந்த 7வது கட்சி மாநாட்டில் கட்சி திட்டத்தையும், அடுத்த மூன்று ஆண்டு காலத்திற்கு செயல்படுவதற்கான அரசியல் தீர்மானத்தையும் நிறைவேற்ற முடிவு செய்தது. இதன்படி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 7வது மாநாடு 1964 அக்டோபர் 31 முதல் நவம்பர் 7 முடிய கொல்கத்தாவில் நடபெற்றது. நாடு முழுவதும் இருந்து 422 பிரதிநிதிகள் இதில் கலந்து கொண்டனர். இக்கட்சி காங்கிரசில் கட்சித் திட்டமான “மக்கள் ஜனநாயக திட்டம்” நிறைவேற்றப்பட்டது. கூடவே, அடுத்த மூன்று ஆண்டுகால செயலபாட்டுக்கான அரசியல் தீர்மானமும் நிறவேற்றப்பட்டது. இந்திய அரசியலிலும், இடதுசாரி இயக்க வரலாற்றிலும் சிபிஐ(எம்) உதயம் ஒரு புதிய திருப்பமாக அமைந்தது.