tamilnadu

img

விண்வெளி ஆராய்ச்சியின் மகுடம் இஸ்ரோ! - சி.ஸ்ரீராமுலு

மனித குல வரலாற்றில் நிலவு முக்கிய இடம் பிடித்திருக்கிறது. நிலாவை பார்த்து நேரம் சொன்னதில் தொடங்கிய அந்தத் தொடர்பு, நிலாவில் வாழ முயலும் அளவுக்கு இன்று வளர்ந்துள்ளது. இவ்வளவு தூரம் தாக்கம் செலுத்தி வரும் இந்த நிலா உருவானது எப்படி என்ற தேடல் இன்னமும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.

இரவில் வானத்தைப் பார்க்கும் மனி தர்கள் தங்கள் கண்களுக்கு புலப்படுவதை  பார்த்து ரசித்தும் வியந்தும் இருக்கிறார்கள்.  சிலர் கற்பனைக்கு எட்டாத கட்டுக்கதை களையும் விருப்பம் போல் அவிழ்த்து விட்டி ருக்கின்றனர்.  இவை அனைத்தும் மனித குலத்  தோற்றம், பரிணாமம், இயங்கியல், கருப் பொருள், வாழ்வியல் முறை, வானிலை முன்னறிவிப்பு, புயல், கால நிலை மாற்றங்  கள், வளி மண்டலம் பற்றிய அறிவியல் ஆராய்ச்சி, கண்டுபிடிப்புகள், 20 ஆம் நூற்றாண்டின் மின்னணுவியல், பிற தொழில்  நுட்பங்களின் வளர்ச்சி, செயற்கைக்கோள் மூலம் விலங்குகள், மனிதர்களை விண் ணுக்கு அனுப்புவது சாத்தியமாவதற்கு முன்பு.

வழிகாட்டிய சோவியத் ஒன்றியம்!

விண்வெளி ஆராய்ச்சி வரலாற்றில், ஸ்புட்னிக் - 1 எனும் செயற்கைக்கோளை 1957  அக்டோபர் 4 அன்று வெற்றிகரமாக விண்  வெளியில் நிலை நிறுத்தியது சோவியத் ஒன்றியம். இதுவே உலகின் முதல் செயற் கைக்கோள். தொடர்ந்து வியக்கத்தக்க சாத னைகளை படைத்த சோவியத் ரஷ்யா, 1961  ஆம் ஆண்டில் யூரி ககாரினை முதல் நப ராக விண்வெளியில் உலாவச் செய்தது. அதன் பிறகு தான், அமெரிக்காவின் நீல் ஆம்ஸ்ட்ராங் நிலவில் கால் வைத்தார். 1961 முதல் 91 வரை அமெரிக்கா-சோவி யத் யூனியன் இடையிலான போட்டியில் விண்வெளி திட்டங்கள் வேகம் எடுத்தன. 30 ஆண்டு காலம் விண்வெளி ஆராய்ச்சியில் அமெரிக்காவுக்கு பெரும் சவாலாக விளங்கி யது சோவியத் ஒன்றியம்.

தடம் பதித்த இந்தியா!

விண்வெளித் துறையில் சற்று காலதாம தமாகவே அடியெடுத்து வைத்த இந்தியா தற்போது உலகமே வியந்து பார்க்கும் வகை யில் ஏராளமான சாதனைகளை படைத்துள் ளது. 1963,  நவம்பர் 21 அன்று கேரள மாநி லம் தும்பாவில் இருந்து முதல் ராக்கெட்டை ஏவியது. அதுதான் வெற்றியின் முதல் புள்ளி. இந்தியாவின் விண்வெளி ஆய்வுப் பய ணம் பிரதமர் நேரு காலத்தில் துவங்கினா லும், வலுவான அடித்தளம் அமைத்தவர் பிர தமர் இந்திரா காந்தி. விண்வெளி ஆய்வில் அதிகம் ஆர்வம் கொண்ட அவர், இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் (இஸ்ரோ) உருவாக துணை நின்றார். இஸ்ரோ, சொந்தமாக தயாரித்த முதல்  செயற்கைக்கோளுக்கு வானியல் அறிஞர் ‘ஆர்யபட்டா’ பெயரை சூட்டியது. அன் றைக்கு நம்மிடம் ஏவுதளம் கிடையாது. சோவி யத் ஒன்றியத்திற்கு சொந்தமான காஸ்மோஸ் -3 எம் ராக்கெட் மூலம்  1975, ஏப்ரல் 19 அன்று  ஆர்யபட்டா விண்ணில் வெற்றிகரமாக பாய்ந்  தது. இது மற்றொரு மைல் கல்லாகும்.  சோவியத் ஒன்றியம் வீழ்ச்சிக்குப் பிறகு,  இந்தியா சொந்தமாக ராக்கெட் தயாரிக்கும் முயற்சியை தொடங்கியது. நமது முதல், ஏவு  வாகனம் பிஎஸ்எல்வி-3 ராக்கெட் மூலம் ரோகினி-1 செயற்கைகோள் 1980, ஜூலை 18 இல் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தி சுற்றுப்பாதையில் நிலை நிறுத்தப்பட்டது. அடுத்த 10 ஆண்டுகளில் மேலும் வேகம்  எடுத்த இஸ்ரோ, ஆந்திர மாநிலம் ஸ்ரீ ஹரி கோட்டாவில் முதலாவது ராக்கெட் ஏவு தளம்  அமைத்தது. இங்கிருந்துதான் நமது சொந்தத்  தயாரிப்புகளான பிஎஸ்எல்வி, ஜிஎஸ்எல்வி போன்ற ராக்கெட்டுகளின் உதவியோடு உலக  நாடுகளின் செயற்கைக் கோள்களையும் ஏவி  வருகிறது. ஆகாஷ், அக்னி, பிரமோஸ், பிருத்வி, நிர்பய் என பல்வேறு ஏவுகணை களை இங்கு தான் சோதனை செய்துள்ளது.  வளர்ச்சியின் அடுத்த கட்டமாக, தமிழ்நாட்  டில், தூத்துக்குடி மாவட்டம் குலசேக ரப்பட்டினத்தில் இரண்டாவது மிகப்பெரிய ராக்கெட் ஏவு தளத்தை அமைத்து வருகிறது.

வெற்றிப் பயணம்!

இந்திய தேசிய செயற்கைக் கோள்கள் தொகுதி என்று அழைக்கப்படும் இன்சாட் -1,  ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் உரு வாக்கப்பட்ட மிகப்பெரிய உள்நாட்டு தக வல் தொடர்பு அமைப்பு என்ற பெருமைக்குரி யது. இது 1983 இல் உருவானது. இதனால்  தகவல் தொடர்பில்  பல்வேறு உச்சங்களை எட்ட முடிந்தது. இஸ்ரோவின் சாதனைகள் பலவற்றுக் கும் காரணமாக விளங்குவது போலார் சாட்டி லைட் லான்ச்  (பிஎஸ்எல்வி) ராக்கெட் மிக  முக்கியமான ஒன்றாகும். இதன் முதல் வெற்றிப் பயணம் 1994 இல் தொடங்கியது. 2016 வரை இந்த ராக்கெட் 38 முறை விண்  ணில் பாய்ந்து உள்ளது. 37 முறை தொடர்ச்சி யாக வெற்றி பெற்றுள்ளது. 121 செயற்கைக் கோள்களை சுமந்து சென்றுள்ளது. இதில்  20 வெளிநாடுகளுக்கு சொந்தமானவை. ஒட்டு மொத்தமாக இந்த ராக்கெட் மூலம் 48 செயற்கைக்கோள்கள் செலுத்தப்பட்டதில் 45 வெற்றி பெற்றது மிகப்பெரிய சாதனை யாகும். காலநிலை ஆய்வுக்கு கல்பனா-1, கல்விக்கு எஜூ சாட், கடல் ஆய்வுக்கு  ஓசோன்  சாட்- 1 என்று தொடர்ச்சியாக செயற்கைக் கோள்களை விண்ணில் செலுத்திய இஸ்ரோ, உச்சபட்சமாக, ஒரு ராக்கெட்டில் 104 செயற்கைக் கோள்களை ஒரே நேரத்தில்  விண்ணுக்கு அனுப்பி மெகா சாதனை படைத்தது.

அமெரிக்காவுக்கு சவால்!

செவ்வாய்க்கிரக சுற்றுக் கலன் திட்டம்  (மார்ஸ் ஆர்பிட்டர் மிஷன்) என்ற செவ்  வாய்க் கிரகத்துக்கு ஆளில்லா விண்கலத்தை  2013, நவம்பர் 5 அன்று அனுப்பியது இஸ்ரோ.  விண்வெளி ஆய்வில் ஜாம்பவானான அமெரிக்காவின் முதலாவது செவ்வாய்க் கிரக ஆய்வு திட்டம் ஃபீனிக்ஸை காட்டி லும் நமது மங்கள்யான் திட்ட மதிப்பு 10  மடங்கு குறைவு. இருந்தாலும், நமது அறி வியலாளர்களின் முதலாவது பயணமே செவ்வாய் சுற்றுவட்டப் பாதையில் இணைந்  தது. சோவியத் ரஷ்யா சிதறுண்ட பிறகு, ராக்கெட்டுகளை ஏவும் தொழில்நுட்பம், அவற்றைக் கண்காணிக்கும் தொழில்நுட்பம் ஆகியவற்றில் அமெரிக்காவின் நாசா பயிற்சி  மையத்திற்கு நமது இளம் அறிவியல் அறி ஞர்கள் சென்றனர். ஆனால், எதிர்பார்த்த அளவுக்கு உதவிகரமாக அமையவில்லை. இது ஏமாற்றமே என்றாலும், முயற்சியை கைவிடவில்லை.  இந்தியாவின் விண்வெளிப் பயணத்தை முன்னெடுத்துச் சென்றனர். பிஎஸ்எல்வி ராக்கெட்டை உருவாக்கினர். இதை உரு வாக்கியது ஏ.பி.ஜே.அப்துல் கலாம் என்ற ஒரு தமிழர் என்பது நமது பெருமை. புதுப் புது கண்டுபிடிப்புகள் மூலம் ஒவ்வொரு நாளும் புதிய உயரத்தை எட்டி வரும் நமது அறிவியலாளர்கள் 2008, நவம்பர் 14 அன்று நிலவின் மேற்பரப்பில் விண்கலத்தை பாதுகாப்பாக தரையிறக்கி நமது மூவர்ணக் கொடியை நாட்டினர். அங்கு, சேகரிக்கப்பட்ட தரவுகளின் பகுப்பாய்வில் நீர், பனி, காற்று இருப்ப தற்கான ஆதாரங்களை கண்டுபிடித்தது சந்திரயான்-1. இந்த திட்டத்தின் தலைவர் மயில்சாமி அண்ணாதுரையும் ஒரு தமிழர். சந்திரயான்-2 திட்டத்தில் ஏற்பட்ட தோல்வி யின் படிப்பினைகள் சந்திரயான்-3 திட்டத்தை சற்று தாமதப்படுத்தியது. அது தனது பயணத்தை நோக்கி 2023 ஜூலை 14 அன்று துவக்கியது. 40 நாட்கள் பயணித்து ஆகஸ்ட் 23 அன்று திட்டமிட்டபடி நிலவின் தென் துருவத்தில் தரையிறங்க தடம் பதித்தது. இது விண்வெளி ஆராய்ச்சியின் மிகப்பெரிய உச்சமாகும். இந்த திட்டத்தின் தலைவர் வீர முத்துவும் ஒரு தமிழர்.

உலகை மிஞ்சும் தொழில்நுட்பக் கருவி!  

விண்வெளி ஆராய்ச்சித் துறையில் நமக்கு முன்னோடிகளான அமெரிக்கா, ரஷ்யா போன்ற உலக நாடுகளே நிலவின் தென் துருவத்தில் கால் பதிக்க முடியாத நிலையில், சந்திரயான்-3 விண்கலம் விக்ரம்  லாண்டரை நிலவின் மேற்பரப்பில் பாது காப்பாக தரையிறக்க முடியும் என்பதை நிரூபித்துக் காட்டியது. சந்திரயான்-3 விண்கலம் சுமந்து சென்ற லூனார் ரோவரில் ஆல்பா துகள் எக்ஸ்-ரே ஸ்பெக்ட்ரோ மீட்டர் (APXS) என்கிற கருவி  பொருத்தப்பட்டது. இதனால், நமது தேடல்  முயற்சிக்கு பெரும் வெற்றி கிடைத்துள்ளது. இதை உருவாக்கியவர் சண்முகம். இவரும் ஒரு தமிழர். இதுவரை எந்த நாடும் நிலவின் மேற் பரப்பில் கால் பதிக்காத பகுதிகளில் அக மதாபாத் இயற்பியல் ஆராய்ச்சி ஆய்வ கத்தில் வடிவமைக்கப்பட்ட கருவி, நிலவின்  மேல் அச்ச ரேகை மலைப் பகுதிகளில் கிடைத்திருக்கும் மண், பாறைகள் மற்றும் சிலிக்கான், மெக்னீசம், அலுமினியம், கால்சியம், இரும்பு போன்ற பல்வேறு தனி மங்களின் மாதிரிகளை மிகத் துல்லியமாக அளவீடு செய்துள்ளது.  அதை, பூமிக்குக் கொண்டு வந்து நிலவின்  பரிமாணம், அதன் வரலாற்றை தெரிந்து கொள்ளும் ஆய்வக பகுப்பாய்வு மற்றும்  அறிவியல் ஆராய்ச்சியில் மெக்னீசியம் உள்ளிட்ட தனிமங்களின் அளவீடு அதிகரித்து இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்த ஆய்வின் மூலம், நிலவில் அலுமினி யம், குரோமியம், டைட்டானியம், இரும்பு,  கால்சியம், கந்தகம் போன்ற தனிமங்களும், தாதுப்பொருட்களும் இருப்பது தெரிய  வந்தது. இதன் மூலம்,  நிலவு குறித்த  ஆராய்ச்சியில் இஸ்ரோ புதிய மைல்கல்லை  எட்டியுள்ளது.  இது முதல் வெற்றி தான் என்றாலும், உலகில் வேறு எந்த நாடும் கண்டுபிடிக்காத நிலையில், மிக உயர் தரத்திலான நமது அறிவியல் தொழில்நுட்பக் கருவி உலகம் முழுவதும், நடைபெறும் விண்வெளி தொடர்  பான ஆய்வுகள் மூலம், மீண்டும் ஒரு முறை  உலக நாடுகளை திரும்பிப் பார்க்கச் செய்தி ருக்கிறது இஸ்ரோ. விண்வெளி அறிவியலுக்கான இஸ்ரோ வின் அர்ப்பணிப்பு இந்த சமூகத்திற்கான அர்ப்பணிப்பில் இருந்து பிரிக்க முடியாது. நமது அறிவியலாளர்களின் ஆய்வுகள் மற்றும் உயர் தரத்திலான புதிய தொழில்நுட்  பம் கொண்ட கருவியின் கண்டுபிடிப்பு குறித்து உலகின் மிகச் சிறந்த அறிவியல் இதழ்களில் ஒன்றான ‘நேச்சர்’ இதழ், ஆய்வு கட்டுரை வெளியிட்டுள்ளது. இதற்கு சர்வதேச அளவில் வரவேற்பு கிடைக்கும் என்றும் நமது அறிவியலாளர்கள் நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்கள். விண்வெளி ஆராய்ச்சிப் பயணத்தில் வீறுகொண்டு எழுந்திருக்கும் நமது அறிவியலாளர்களின் இந்த வெற்றிப் பயணம் மேலும் மேலும் தொடர வாழ்த்துவோம்!