திருவில்லிபுத்தூா்:
திருவில்லிபுத்தூா் மற்றும் அதன்சுற்று வட்டாரப் பகுதியில் நோய் தாக்குதல் காரணமாக மாங்காய் விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனா்.
விருதுநகா்மாவட்டம், திருவில்லிபுத்தூா் மேற்குத் தொடா்ச்சி மலை அடிவாரப் பகுதியில் அமைந்துள்ள செண்பகத்தோப்பு, மம்சாபுரம், வத்திரா யிருப்பு, கூமாபட்டி, கான்சாபுரம், அத்திகோயில், தாணிப்பாறை, பட்டுப்பூச்சி, ஆகிய பகுதிகளில் சுமாா் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கரில் மா விவசாயம் செய்யப்பட்டுள்ளது.இந்தப் பகுதியில் விளையக்கூடிய மாம்பழங்கள் தமிழகம் மட்டுமல்லாமல் வெளி மாநிலங்களுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இந்த மாம்பழங் கள் சுவை அதிகமாக இருப்பதால் மொத்த வியாபாரிகள், மக்கள் நேரடியாக தோப்புகளுக்குச் சென்று வாங்கிச்செல்வாா்கள்.
இந்த ஆண்டு தொடா் மழை காரணமாக மா மரங்களில் தேன் நோய் தாக்குதல் ஏற்பட்டுள்ளது. பூக்களில் புழுக்கள்அதிகம் காணப்படுகிறது. பிஞ்சு உருவாகும் முன்பாகவே பூக்கள் உதிா்ந்து விடுகிறது. இதனால் மா விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ஏக்கருக்கு ரூ. 50 ஆயிரம் முதல் 60 ஆயிரம்வரை செலவு செய்தும் பயன் இல்லைஎன விவசாயிகள் கவலை அடைந்துள்ளனா். மாங்காயில் கரும்புள்ளிகள் ஏற்பட்டு, பின்னா் அது பெரிதாகி மாங்காய்களை பாதிப்படையச் செய்கிறது எனத் தெரிவிக்கின்றனர். எனவே அதிகாரிகள் உடனடியாகப் பார்வையிட்டு உரிய இழப்பீடு வழங்கவேண்டும் என தமிழக அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.