1992இல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 14வது அகில இந்திய மாநாடு சென்னையில் நடைபெற்ற போது சோசலிசத்துக்கு ஏற்பட்ட பின்னடைவு உட்பட மார்க்சிய தத்துவார்த்த பிரச்சனைகளில் வந்திருக்கக்கூடிய சவால்களை விளக்கி சிறப்பு தத்துவார்த்த தீர்மானத்தை தோழர் சீத்தாராம் யெச்சூரி முன்மொழிந்தார். 1998இல் சோசலிசத்துக்கு ஏற்பட்ட பின்னடைவில் இருந்து, சர்வதேச அளவில் உழைக்கும் மக்களை யும் தொழிலாளிகளையும் மீண்டும் புரட்சிகரப் பாதையில் பயணம் செய்ய வைக்க நடைபெற்ற சர்வதேச கம்யூனிஸ்ட் கட்சிகளின் முதல் கூட்டம் கல்கத்தாவில் நடைபெற்றது. அதை சிறப்பாக முன் நின்று நடத்தியவர் தோழர் சீத்தாராம்; சோவியத் பின்னடைவிற்குப் பின் கட்சியின் திட்டம், அதில் சர்வதேச நிலைமைகள் பற்றிய படப்பிடிப்பு உட்பட சில பகுதிகளில் காலத்திற்கு ஏற்ப மாற்றங்கள் வர வேண்டும் என்று கட்சி முடிவு எடுத்தது. 2000 ஆவது ஆண்டு திருவனந்தபுரத்தில் நடைபெற்ற சிறப்பு மாநாட்டில் கட்சி திட்டம் மேம்படுத்தப்பட்டது. அதில் முக்கியமான பகுதிகள் பற்றிய விவாதங் களை முன்னெடுப்பதில் தோழர்கள் ஹர்கிஷன் சிங் சுர்ஜித், பிரகாஷ்காரத் மற்றும் சீத்தாராம் யெச்சூரி ஆகியோர் முன் நின்று உட்கட்சி விவா தத்தை நடத்துவதில் மிகச் சிறப்பான பணியாற்றி னார்கள். சீத்தாராம் அந்த விவாதங்களில் ஆற்றிய சீரிய பணியின் காரணமாக ஒரு மேம்படுத்தப்பட்ட கட்சித் திட்டம் உருவானது.
ஐமுகூ ஆட்சியின் போது...
2004ல் நாடாளுமன்றத்துக்கு நடைபெற்ற தேர்தலில் முதல் முறையாக ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசாங்கம் ஆட்சி பொறுப் பேற்ற போது அதற்கான வழிகாட்டும் நெறிமுறை களையும் குறைந்தபட்ச திட்டங்களையும் உரு வாக்குவதில் அவர் பங்கு சிறப்பானது. குறிப்பாக தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தை அரசு செயல்படுத்த வேண்டும் என்பதை சிபிஐ (எம்) கடுமையாக வலியுறுத்தியதின் பேரில் தான் அது நிறைவேற்றப்பட்டது. அரசியல் ரீதியாக ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கும் மார்க்சிஸ்ட் கட்சிக்கும் உள்ள உறவைப் பற்றி கட்சி அணிகளுக்கும் சமூகத்துக்கும் விளக்கிச் சொல்வதில் அவர் முக்கியப் பங்கு ஆற்றினார். 1998 இல்ஐஅக்கிய முன்னணி அரசாங்கம் ஏற்பட்டபோது அந்த குறைந்த பட்ச திட்டத்தை உருவாக்குவதிலும் அந்த அரசாங்கத்தை அரசியல் பொருளாதார ரீதியாக வழி தவறிச் செல்லவிடாமல் தடுப்பதற்குமான போராட்டத்தை நடத்துவதற்கும் மார்க்சிஸ்ட் கட்சி சார்பாக முக்கியமான பங்கு ஆற்றினார். அந்த ஒருங்கிணைப்பு குழுவில் இருந்தபோது அரசின் பல்வேறு ஆவணங்களை, குறிப்புகளை பரிசீலிக்கிற போது அவற்றைப் பற்றி தெரிந்து கொள்ளுகிற வாய்ப்பு ஏற்பட்ட காரணத்தினால் கச்சா எண்ணெய் விலை நிர்ணயம் சம்பந்த மான பல்வேறு விஷயங்களை அவர் வெளிப் படுத்தினார். ‘ஆயில் பூல் அக்கவுண்ட்’ என்ன என்பது மட்டுமின்றி அது குறித்த சர்வதேச எண்ணெய் அரசியலை அவர் மக்கள் மத்தியில் வெளிச்சம் போட்டுக் காட்டினார்.
2009இல் ஐமுகூ அரசுக்கு கொடுத்து வந்த ஆதரவை வாபஸ் பெற்ற பின்பு, மேற்குவங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ், காங்கிரஸ், பாஜக, வகுப்புவாதிகள், மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் மற்றும் அரசு சாரா அமைப்புகள் ஆகியோர் நடத்திய தொடர் தாக்குதல் மூலமாக நாம் ஆட்சியை இழந்தது மட்டுமல்லாமல்; மேற்கு வங்கத்தில் ஒரு பின்னடைவு ஏற்பட்டது. அக்காலத்தில் 2015இல் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டு நிலை மைகளை சரி செய்வதற்கு தன்னுடைய பங்கு பணியை ஆற்றினார். 2014 இல் இருந்து வகுப்பு வாதம் இந்திய அரசியலில் பெரும்பான்மையுடன் கோலோச்சத் துவங்கிய பின், அதை எதிர்கொள்வ தில் மதச்சார்பற்ற சக்திகளை ஒருங்கிணைக்கவும் கூட்டு மேடைகளை அமைக்கவும், மதச்சார்பற்ற சக்திகளின் ஒன்றுபட்ட போராட்டத்தை நடத்தவும் அவர் ஆற்றிய பணிகள் ஏராளம். 2010ல் கோவையில் செம்மொழி மாநாடு நடை பெற்ற போது கலைஞர் அவர்களின் அழைப்பின் பேரில் கலந்து கொண்டு தமிழ்மொழி பற்றி ஆற்றிய உரை மிகவும் சிறப்புமிக்கது. சமீபத்தில் 2023ல் நடைபெற்ற பி.ராமமூர்த்தி நினைவுச் சொற்பொழிவினை – கார்ப்பரேட் வகுப்புவாத கூட்டு என்ற தலைப்பில் ஆற்றினார். அதில் இன்றைய அரசியல் பொருளாதார துறையில் மோடி அரசாங்கத்தின் கொள்கைகளை அம்பலப்படுத்தியது வெகுசிறப்பு.
2024 மே மாதத்தில் நடைபெற்ற நாடாளு மன்றத் தேர்தலில் வகுப்புவாத சக்திகளை வீழ்த்த மிகப்பெரிய அரசியல் போராட்டத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நடத்தியது. இந்தியா கூட்டணி யின் பகுதியாகவும் அதற்குள் தனது தனித்த அரசியல் நிலைப்பாட்டை விளக்கியும், வகுப்பு வாதத்தை எதிர்கொள்வதற்கு ஒற்றுமையை கட்டியும் – சிபிஐ(எம்) நடத்திய பிரச்சாரமும் போராட்ட மும் தனித்தன்மை வாய்ந்தவை. அந்தப் போராட்டங்களினால் கிடைத்த வெற்றி தான் பாஜக விற்கு ஏற்பட்ட பின்னடைவு. அந்தப் பின்னடைவு என்பது எதிர்க்கட்சிகள் நடத்திய போராட்டத்தி னால், குறிப்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யும் இடதுசாரிகளும் கூட்டாக நடத்திய எதிர்ப்பு பிரச்சாரத்தின் நேரடி விளைவு என்றால் அது மிகையாகாது. 2024 ஜூன் மாதம் நான்காம் தேதி வெளி வந்த தேர்தல் முடிவுகளும் அதை ஒட்டி ஜூன் இறுதி வாரத்தில் நடைபெற்ற மத்திய கமிட்டி கூட்டத்தில், இந்த தேர்தல் முடிவுகளை நாம் எப்படி பார்க்க வேண்டும்; அதிலிருந்து நாம் என்ன கடமைகளை நிர்ணயிக்க வேண்டும் என்ற ஆவணத்தை கட்சி மத்திய கமிட்டி உருவாக்கு வதற்கும் மிகச்சிறந்த பணியாற்றினார் சீத்தாராம். அது, வருகிற சில காலங்களுக்கு இந்த அரசுக்கு எதிராக நாம் நடத்த வேண்டிய போராட்டத்திற்கான ஆயுதமாக நமக்கு கிடைத்திருக்கிறது. அதன் பின்னர் கடந்த ஜூலையில் சில வாரங்கள் அவர் பிரிட்டன் (லண்டனுக்கு) சென்று திரும்பி வந்தார். வந்ததும் அவரது கண் புரை சிகிச்சை அறுவை சிகிச்சை நடத்தப்பட்டது. ஒரு கண் முடிந்ததும் மறு கண்ணில் நடத்தப் பட்டது. சுமார் இரண்டு மூன்று வாரங்கள் அவர் ஓய்வில் இருந்தார். இதன் காரணமாக ஜூலை மாதம் மத்தியில் இருந்து ஆகஸ்ட் மாதம் மத்தி வரை அவர் எந்த பொது நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ள முடியவில்லை.
கடைசி நிகழ்ச்சி
அவர் கடைசியாக கலந்து கொண்ட நிகழ்ச்சி 2024 ஆகஸ்ட் மாதம் 17ஆம் தேதி புது தில்லியில் நடைபெற்ற அகில இந்திய சமாதான ஒருமைப் பாட்டு கழகத்தின் பொதுக்குழு கூட்டம் ஆகும். அன்று மாலை அவருக்கு “ரமேஷ் சந்திரா நினைவு அமைதிப் பரிசு வழங்கப்பட்டது. அன்று அவர் அங்கு வந்திருந்து சிறிது நேரம் உரை யாற்றினார். அவர் சமாதான இயக்கத்தில் ஆற்றி இருக்கக்கூடிய பணியைப் பற்றியும், உலக அளவில் நடந்து கொண்டிருக்கக் கூடிய ஏகாதி பத்திய தாக்குதல்கள், போர்கள் பற்றியும், அமை திக்கான இயக்கம் வலுப்பட வேண்டியது பற்றியும் சுருக்கமாக உரையாற்றினார். அவருக்கு இருமல் அதிகமாக இருந்தது. “நாளை நான் மருத்துவ மனைக்கு செல்வதாக இருக்கிறேன்” என்று எங்கள் அனைவரிடமும் கூறிவிட்டுச் சென்றார். ஆகஸ்ட் 19ஆம் தேதி அகில இந்திய மருத்துவ விஞ்ஞானக் கழகத்தின் மருத்துவமனையில் (AIIMS ) அவர் உடல் நலம் பற்றி பரிசோதனை செய்து கொள்வதற்காக சேர்க்கப்பட்டார். பின்னர் அவசர பிரிவில் மருத்துவ சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு தொடர் சிகிச்சை பலனளிக்காமல் செப்டம்பர் 12 ஆம் தேதி மரணம் அடைந்தார். தோழர் சீத்தாராம் யெச்சூரி தனிப்பட்ட வாழ்க்கையில் ஒழுக்கம் மிக்கவராகவும், ஸ்தாபன கட்டுப்பாடு மிக்கவராகவும், அப்பழுக்கற்ற நேர்மைக்கு சொந்தக்காரராகவும் விளங்கினார். அவருடைய சொந்த வாழ்க்கை யில் துயரம் ஏற்பட்ட போதும் அதை தாங்கிக் கொண்டு செயல்பட்டார். கடந்த 2020 இறுதியில் கோவிட் பெருந்தொற்று காரணமாக தன்னுடைய மூத்த மகன் ஆசிஷ் மரணம் அடைந்த போது சில வாரம் துக்கத்திற்கு பின் அவர் மீண்டும் அரசியல் பணிக்கு வந்து சேர்ந்தார். அவருடைய உடல் நிலை யில் பல்வேறு உபாதைகள் இருந்த போதும் கூட அதைப்பற்றி கவலைப்படாமல் தொடர்ந்து அர சியல் போராட்டத்தில் அவர் பயணித்துக் கொண்டி ருந்தார். அவரது பங்களிப்பு என்பது ஈடு இணை யற்றது. இளைஞர்களுக்கு உற்சாகத்தை வழங்கக் கூடியது என்று சொன்னால் அது மிகையாகாது.