tamilnadu

img

மாபெரும் செயல்வீரர் ஆர்.வெங்கிடு எஸ்.ஏ.மாணிக்கம்

மாபெரும் செயல்வீரர் ஆர்.வெங்கிடு எஸ்.ஏ.மாணிக்கம்

இயக்கப் பணிகள் முழுமையாக நிறைவேறும் வரையில் ஓய்வறியாது செயல்படுவதிலும் அதை வெற்றிகரமாக நிறைவேற்றுவதிலும் தனித்திறமை கொண்டவர் தோழர் வெங்கிடு.  ஒன்றுபட்ட கோவை மாவட்டத்தில் கட்சியமைப்புக்களை உருவாக்குவதில் பெரும்பங்காற்றியவர். தோழர் ஆர்.வெங்கிடு 1927 செப்டம்பர் 21 அன்று பிறந்தார்.  வெள்ளக்கிணறு அரசு நடுநிலைப்பள்ளி யில் எட்டாம் வகுப்பு படித்துக்கொண்டிருக்கும் போதே கம்யூனிஸ்ட் கட்சியின் அறிமுகம் கிடைத்தது. அவருடைய சொந்த ஊரான உடையாம்பாளையத்தில் உள்ள தொழி லாளர்கள் ஜனசக்தி பத்திரிகையை வாங்கி அதை வெங்கிடுவை வாசிக்கச் சொல்லி கேட்பார்கள்.  வாசிப்பதன் மூலமாக தானும் கம்யூனிஸ்ட் கட்சியினை அறிந்து கொண்டார். லெனின் ஸ்டாலின் எழுதிய பிரசுரங்களை படிப்பதன் வாயிலாகவும் உலக விசயங்களை அறிந்து கொண்டார். எட்டாம் வகுப்பு தேறிய பிறகு ஞானாம்பிகை மில்லில் வேலைக்கு சேர்ந்தார். கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் எஸ்.கிருஷ்ணன் உடன் தொடர்பு கிடைத்தது. ஞானாம்பிகை மில் தொழிலாளர்கள் போராட்டத்தில் வெங்கிடு தீவிரமாக ஈடுபட்டார். இதனால் மில் நிர்வாகம் அவரை வேலையிலிருந்து நீக்கியது. பின்னர் காளீஸ்வரா மில் ஸ்டோரில் வேலைக்கு சேர்ந்தார். அங்கு தொழிற்சங்க தலைவர்களுடன் ஏற்பட்ட தொடர்பினால் வேலையை ராஜினாமா செய்துவிட்டு தொழிற்சங்க பணியில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டார்.

1946 நவம்பரில் நடைபெற்ற ஸ்டேன்ஸ் மில் போராட்டத்தினால் கொதிப்படைந்த அரசாங்கம் தொழிற்சங்க தலைவர்கள் மீதும் கம்யூனிஸ்ட்டுகள் மீதும் கடும் அடக்குமுறைகளை ஏவியது. வெங்கிடு தலைமறைவாக இருந்து செயல்பட்டார்.  1949 ஆகஸ்ட் 15 அன்று அன்றைய மாநில உணவு அமைச்சர் ரோச் விக்டோரியா மீது கோவையில் குண்டு வீசப்பட்டது, இதை காவல் துறை கம்யூனிஸ்ட்டுகளுக்கு  எதிராக திருப்பியது. குறிப்பாக ஆர்.வெங்கிடுவையும் எம்.கோவிந்தனையும் சதிக்கு உடந்தையாக இருந்ததாக குற்றம் சாட்டி தேடுதல் வேட்டையை நடத்தி இறுதியில் வெங்கிடுவை கைது செய்தது. 3நாட்களுக்கும் மேலாக வெங்கிடுவை  கடுமையாகச் சித்ரவதை செய்து கொடுமைப்படுத்தியது. 10 நாட்களுக்கும் மேலாக சுயநினைவின்றி இருந்தார். 15நாட்களுக்கு பிறகு சிறையில் அடைக்கப்பட்டு 6 மாதம் கழித்து வெளியே வந்தார். 1950 ல் நடந்த மில் போராட்டம் ஒன்றுக்காக வெங்கிடு 6 மாத காலம் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டார்.

1952 முதல் 1954 வரையில் போராட்டங்களுக்கு தலைமை தாங்கியதற்காக 10க்கும் மேற்பட்ட வழக்குகள்அவர் மீது போடப்பட்டது. ஒரு வழக்கில் 4 ஆண்டு காலம் சிறைத்  தண்டனை விதிக்கப்பட்டு பின்னர் மேல்முறையீட்டில் விடுவிக்கப்பட்டார். போராட்டக் களங்களில் துணிச்சலுடன் எதிர் கொண்டு போராடுபவர்களுக்கு உத்வேகத்தை அளிப்பார்.  1956ஆம் ஆண்டு சர்க்கார் சாமக்குளம் பகுதிச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். கட்சியமைப்புக்களை உருவாக்குவதில் தீவிரமாக செயல்பட்டார்.  1961 நிலச்சீர்திருத்த சட்டத்தை நிறைவேற்றக்கோரி நடைபெற்ற போராட்டத்திற்கு தலைமையேற்றார். இதற்காக அவர் கைது செய்யப்பட்டு 3 மாத சிறைத் தண்டனை விதிக்கப்பட்டார். சின்னவேடம்பட்டி பஞ்சாயத்து தலைவராக நான்குமுறை தேர்ந்தெடுக்கப்பட்டரர். 1977இல் நடைபெற்ற தமிழக சட்டமன்ற தேர்லில் சிங்காநல்லுர் தொகுதியில் வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினரானர்.  பஞ்சாயத்துத் தலைவராகவும் எம்எல்ஏ வாகவும் சிறப்பாகச் செயல்பட்டார். அதில்  முக்கியமானது அவருடைய முன்முயற்சி யால் சின்னவேடம்பட்டியில் ஏரியை உருவாக்கியதாகும். மேற்குத்தொடர்ச்சி மலையையொட்டியுள்ள ஆனைகட்டியி லிருந்து மழைநீரை கால்வாய் மூலமாக சின்னவேடம்பட்டிக்கு கொண்டு வந்து நீரை தேக்கி வைக்கும் திட்டமாகும்.  இத்திட்டம் நிறைவேற்றப்பட்டதால் சுமார் 500 ஏக்கருக்கும் அதிகமாக பாசன நிலங்கள் பயன்பட்டது. நிலத்தடி நீரும் உயர்ந்தது.

 1989ஆம் ஆண்டு செக்கோஸ்லேவாக்யா கம்யூனிஸ்ட் கட்சியின்  அழைப்பின் பேரில் மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பில் நான்கு தோழர்கள் கொண்ட பிரதிநிதிக்குழு சென்றது. தமிழ்நாட்டிலிருந்து  மாநிலக்குழு உறுப்பினர்கள் க.உதயகுமாரும் ஆர்.வெங்கிடுவும்  சென்றனர். ஒரு மாத காலம் அங்கு சுற்றுப்பயணம் செய்தனர். ஒன்றுபட்ட கோவை மாவட்டத்தில் கட்சிக்கான அலுவலகங்களை கட்டுவதில் தோழர் ஆர்.வெங்கிடு கூடுதல் அக்கறை எடுத்துக் கொண்டார். தற்போதைய மாவட்டக்குழு அலுவலகங்கள், பகுதி அலுவலகங்கள் பலவற்றை கட்டுவதற்கு ஆர்.வெங்கிடுவின் பங்களிப்பு பிரதானதாகும்.

1955இல் ஆர்.வெங்கிடு - கருப்பாத்தாள் திருமணம் தோழர் ஜீவா தலைமையில் நடைபெற்றது. அவருடைய மனைவியின் குடும்பமும் கம்யூனிஸ்ட் குடும்பம்.  ஆகவே ஆர்.வெங்கிடுவின் கட்சிப் பணிகளுக்கு அவர்  உறுதுணையாக இருந்தார். கட்சியின் மீதான அடக்குமுறை காலங்களில் போலீசார் மிரட்டல்களையெல்லாம் அவர் எதிர்கொண்டார்.  அதேபோல அவருடைய குடும்பத்தினரையும் கட்சிப்பணிகளில் ஈடுபடுத்தினார். அவருடைய முதல் மருமகன் சிவசாமி பஞ்சாயத்துதலைவராகவும் சிஐடியு இன்ஜினியரிங் சங்க தலைவராகவும் இருந்தார். சிபிஎம் ஈரோடு மாவட்ட முன்னாள் செயலாளர் கே.துரைராஜ் இன்னொரு மருமகனாவார். இவரது மகன் வி.ராமமூர்த்தி சிபிஎம் முன்னாள் கோவை மாவட்டச்செயலாளர் ஆவார். அவருடைய புதல்விகளும் வாரிசுகளும் கட்சிக்குடும்பமாகவே இருந்து வருகின்றனர். நெருக்கடியான நேரங்களில் கட்சிக்கூட்டங்களையும் இயக்கங்களை நடத்துவதிலும் ஆர்.வெங்கிடு தனித்திறமை கொண்டவர்.

1971இல் பல முக்கியப் பிரச்சனைகள் மீது ஆழமான விவாதங்கள் நடத்த கட்சியின் அரசியல் தலைமைக்குழு கூட்டத்தை கோவையில் நடத்த முடிவு செய்யப்பட்டது. அந்த கூட்டத்தை வெற்றிகரமாக நடத்திக் கொடுத்தவர் ஆர்.வெங்கிடு. அதேபோல நெருக்கடி காலத்தில் கட்சியின்  கேரள மாநிலக்குழுவின் கூட்டத்தை கோவையில் பாதுகாப்பாக  நடத்திக் கொடுத்துள்ளார் என்று கோவை மாவட்ட கட்சி பொறுப்பாளராகவும பின்னர் அரசியல் தலைமைக்குழு உறுப்பினராகவும் இருந்த தோழர் பி.ராமச்சந்திரன் அவர்கள் வெங்கிடு குறித்த நினைவுகளை பதிவு செய்துள்ளார்.  தூய்மையான பொதுவாழ்விற்கு எடுத்துக்காட்டும், உறுதியான போர்க்குணமும் மிகுந்த கட்டுப்பாடும் தான் தோழர் ஆர்.வெங்கிடுவின் உயிர்நாடியாக இருந்தன என்று அவர் குறித்து தோழர் என்.வரதராஜன் அவர்கள் குறிப்பிட்டது மிகப் பொருத்தமானதாகும்.