tamilnadu

img

இன்னும் மாறாதது - வல்லம் தாஜூபால்

இன்னும் மாறாதது 

குருவின் இடத்தை கூகுள் பிடித்தது
பேனா இடத்தைப் பென்ட்ரைவ் பிடித்தது
லெட்டர் இடத்தை ட்விட்டர் பிடித்தது
காலச் சக்கரம் வேகம் பிடித்தது 

எழுத அன்று செப்பேடு
இன்று ஐபேடு
வகுப்பு அன்று மரத்தடியில்
இன்று மடிக்கணினியில்
பார்க்க அன்று அகன்ற திரை
இன்று ஆண்ட்ராய்டு திரை 

காலையில் விழித்து
பல்தேய்க்கும்முன் செல்தேய்க்கிறார்.
குக்கிங் செய்யாமல், ஆன்லைனில்
புக்கிங் செய்து புசிக்கிறார்
கோடீஸ்வரரும் கையேந்துகிறார்
ஏ டி எம் முன்னால் 

ஆதி மனிதர் வாழ்ந்தது காடுகளில்
ஆதார் மனிதர் வாழ்வது கார்டுகளில்
ஜாம் ஜாம்என நடந்த கூட்டம்
ஜூம் ஜூம்என தன்னந் தனிமையில் 

எல்லாம் மாறியும் மாறாத செய்தி:
’மலக்குழி சுத்திகரிக்க
இறங்கிய தொழிலாளி
விஷவாயு தாக்கி மரணம்’