tamilnadu

திருச்சி விரைவு செய்திகள்

அனுமதியின்றி இயங்கி வந்த  உர விற்பனை நிலையத்துக்கு சீல்

தஞ்சாவூர், செப். 1-  அனுமதியின்றி இயங்கி வந்த தனியார் உர விற்பனை நிலையத்துக்கு, வேளாண்மை துறையினர் சீல் வைத்து நடவடிக்கை எடுத்தனர். தஞ்சாவூர் கொடிமரத்து மூலை பகுதியில் தனியார் உர விற்பனை நிலையம் ஒன்று உரிய அனுமதியின்றி செயல்படுவதாக வேளாண்மைத் துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, தஞ்சாவூர் மாவட்ட வேளாண்மை துறை உதவி இயக்குநர் (தரக்கட்டுப்பாடு) எஸ்.செல்வராஜ் தலைமையில், தர ஆய்வாளர் தினேஷ்குமார் மற்றும் வேளாண்மை துறையினர் திங்கள்கிழமை திடீரென ஆய்வு செய்தனர்.  அப்போது தஞ்சாவூர் வடக்கு ஆஜாரத்தை சேர்ந்த கமலக்கண்ணன் என்பவர் எந்தவித உரிமமும் இல்லாமல், கொடிமரத்து மூலையில் உர விற்பனை நிலையத்தை நடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து அந்த விற்பனை நிலையத்தை வேளாண்மைத்துறையினர் மூடி சீல் வைத்தனர்.

சமூக நீதி கல்லூரி  மாணவர் விடுதிகளில்  ஆட்சியர் திடீர் ஆய்வு

பெரம்பலூர், செப். 1-  பெரம்பலூரில் உள்ள சமூக நீதி கல்லூரி மாணவர் விடுதி மற்றும் சமூக நீதி பள்ளி மாணவியர் விடுதிகளில், திங்கட்கிழமை மாவட்ட ஆட்சியர் ந. மிருணாளனி திடீர் ஆய்வு மேற்கொண்டு, அங்கு ஏற்படுத்தப்பட்டுள்ள அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு செய்தார். தொடர்ந்து, விடுதியில் தங்கிப்பயிலும் மாணவ-மாணவியர்களிடம் தரமான உணவு, சுத்தமான குடிநீர் வழங்கப் படுகிறதா, கழிவறை மற்றும் விடுதியை தூய்மையாக பராமரிக்கிறார்களா என்பது குறித்து கேட்டறிந்து, விடுதி காப்பாளரிடம் விடுதியை தூய்மையாக பராமரித்திட அறிவுறுத்தினார். பின்னர், விடுதியில் பராமரிக்கப்படும் பதிவேடுகள் மற்றும் விடுதியில் தங்கியுள்ள மாணவ-மாணவியரின் எண்ணிக்கை, மாணவர்களுக்கு வழங்கப்படும் தினசரி உணவு பட்டியல் உள்ளிட்ட விபரங்களை ஆய்வு செய்தார். மேலும் மாணவ, மாணவியரிடம் கலந்துரையாடிய ஆட்சியர், தமிழக அரசு பள்ளி-கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு அரசின் நலத்திட்டங்களை முறையாக பயன்படுத்தி, வாழ்வில் முன்னேற வேண்டும் என அறிவுறுத்தினார்.

பள்ளியின் காம்பவுண்ட் சுவரை  தரமாக கட்டித் தர கோரிக்கை

பாபநாசம், செப். 1-  தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 350 மாணவ, மாணவிகள் பயில்கின்றனர். 8 ஆசிரிய, ஆசிரியைகள் பணி புரிகின்றனர். தமிழ் ஆசிரியர், தலைமை ஆசிரியர் பணியிடம் காலியாக உள்ளது.  இந்த பள்ளியின் பின் பக்க காம்பவுண்ட் சுவர் இடிந்து விழுந்து ஒரு வருடம் ஆகிறது. இதை பயன்படுத்தி இரவு நேரங்களில் மது பிரியர்கள் பாராக பயன்படுத்துவதுடன், மது பாட்டில்களை அங்கேயே உடைத்துப் போட்டுவிட்டுச் சென்று விடுகின்றனர். மேலும், திறந்தவெளி கழிப்பறையாகவும் பயன்படுத்தப்படுகிறது. முன் பக்கமும், பக்கவாட்டிலும் காம்பவுண்ட் சுவர் இல்லாததால் தகரத்தை வைத்து அடைத்துள்ளனர்.  தலைமை ஆசிரியர் அறை இருந்த கட்டடம் பழுதடைந்து, மேற்கூரையின் காரை பெயர்ந்து விழுந்ததால், அந்த கட்டடம் பயன்பாடு இல்லாமல் உள்ளது. இப்பள்ளியில் பயிலும் மாணவர்களின் நலன் கருதி, காம்பவுண்ட் சுவரை தரமாக கட்டித் தருவதுடன், கழிவறையையும் புதுப்பிக்க மாணவ, மாணவிகளின் பெற்றோர் கோரிக்கை வைத்துள்ளனர்.

ஆற்றில் தவறி விழுந்த  இளைஞர் சடலமாக மீட்பு

குடி நடுத்தெருவை சேர்ந்தவர் அருண்குமார்(30). கூலித் தொழிலாளியான இவர், கடந்த ஆக.29 ஆம் தேதி நண்பர் இல்ல திருமணத்திற்குச் சென்று விட்டு, வல்லம் வழியாக ஊருக்கு தனது இருசக்கர வாகனத்தில் திரும்பிக் கொண்டிருந்தார்.  ஆலக்குடி பகுதியில் ஓடும் கல்லணை கால்வாய் பாலம் பகுதிக்கு வந்தபோது நிலை தடுமாறி இருசக்கர வாகனத்துடன் கல்லணைக் கால்வாயில் விழுந்துவிட்டார். இரவு வெகுநேரமாகியும் அருண்குமார் வீட்டிற்கு திரும்பி வராதால் அவரது அண்ணன் அரவிந்த் பிரபு மற்றும் குடும்பத்தினர் பல இடங்களில் தேடிப் பார்த்துள்ளனர். அப்போது கல்லணைக் கால்வாயில் இருசக்கர வாகனம் தண்ணீரில் கிடப்பதை அக்கம் பக்கத்தினர் பார்த்து தகவல் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து காவல்துறை மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து தீயணைப்புத் துறையினர் கல்லணை கால்வாயில் அருண்குமாரை தேடிப் பார்த்தனர். ஆனால் அவர் கிடைக்கவில்லை. இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை மாலை நத்தமாடிப்பட்டி கல்லணை கால்வாய் பகுதியில் அருண்குமாரை தீயணைப்பு துறையினர் சடலமாக மீட்டனர். இதுகுறித்து அருண்குமாரின் அண்ணன் அரவிந்த் பிரபு கொடுத்த புகாரின் பேரில் தாலுகா காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.