tamilnadu

img

அதானியின் சாகர்மாலா துறைமுகத் திட்டத்தைக் கண்டித்து 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள், மீனவர்கள் சங்கமம்..... முக்கடலும் சங்கமிக்கும் கன்னியாகுமரியில் நடைபெற்றது.....

கன்னியாகுமரி:
மத்திய பாஜக அரசாங்கம் அதானிக்கு தாரைவார்க்க முடிவு செய்திருக்கும் சாகர்மாலாதுறைமுகத் திட்டத்தைக் கண்டித்தும், அதனைவிலக்கிக்கொள்ள வலியுறுத்தியும், முக்கடலும் சங்கமிக்கும் கன்னியாகுமரி அருகில் உள்ள மணக்குடி கிராமத்தில் இருபதாயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகளும், மீனவர்களும் சங்கமித்த மாபெரும் மகா பஞ்சாயத்து மார்ச் 27 அன்று நடைபெற்றது.

அதானிக்கு தாரைவார்க்கப்பட்டுள்ள இந்த சாகர்மாலா திட்டம் அமைக்கப்பட்டால், இங்கு வாழும் பல லட்சக்கணக்கான மக்களின் வாழ்வாதாரங்கள் அழிக்கப்பட்டுவிடும். மேலும் நாட்டின் மிகவும் அழகாக இருந்து சுற்றுலாப் பயணிகளை வெகுவாகக் கவர்ந்திழுக்கும் அழகிய சுற்றுப்புறச் சூழல் காட்சிகளும் அழிக்கப்பட்டுவிடும்.இதனைக் கண்டித்துத்தான் முக்கடல் சங்கமிக்கும் இந்த இடத்தில் இந்த மாபெரும் மக்கள்திரளின் மகா பஞ்சாயத்து நடைபெற்றது.அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் தலைவர் டாக்டர் அசோக் தாவ்லே அவர்களால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த மகா பஞ்சாயத்திற்கு, எம்.ஜி. தேவசகாயம், ஐ.ஏ.எஸ்.(ஓய்வு) தலைமை வகித்தார்.விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு கன்வீனர் கன்வால்பிரீத் சிங் பன்னு மற்றும் தேசிய மீனவர்கள் அமைப்பின் பொதுச்செயலாளர் ஒலன்சியோ சிமோஸ் ஆகியோர் இந்த மகா பஞ்சாயத்தில் சிறப்புரை நிகழ்த்தினார்கள்.

மேலும் சமூக செயற்பாட்டாளரும் சுதந்திரப்போராட்ட வீரருமான கொடிக்கால் ஷேக் அப்துல்லா (வயது 88),  ஐயா வைகுண்டர் மடத்தைச் சேர்ந்த பாலபிரஜாதிபதி அடிகளார், பிஷப் நஸ் ரீன் சூசை, ‘பூவுலகின் நண்பர்கள்’ (‘Friends of Earth’) இயக்கத்தைச் சேர்ந்தசுந்தரராஜன், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் இணைச் செயலாளர் துளசி நாராயணன் முதலானவர்களும் உரையாற்றினார்கள். இது தொடர்பாக நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் ஓய்வுபெற்ற பாரத ஸ்டேட் வங்கி அதிகாரியும் அறிவியல் இயக்கத் தலைவருமான தாமஸ் பிராங்கோ உரையாற்றினார்.

மகா பஞ்சாயத்தில் பேசிய அனைத்து மதங்களைச் சேர்ந்தவர்களும், அனைத்து சாதிகளைச் சேர்ந்தவர்களும், அனைத்து இனத்தைச் சேர்ந்தவர்களும் நாட்டின் மதச்சார்பின்மைக் கொள்கையை உயர்த்திப்பிடித்து உரையாற்றினார்கள். அனைவருமே மோடி-அமித்ஷா-அம்பானி-அதானி ஆகியோருக்கிடையே இருந்துவரும் நவீன தாராளமயக் கொள்கையின் பின்னே இருந்துவரும் கள்ளப் பிணைப்பையும் ஊழல்களையும் அம்பலப்படுத்தி, கண்டித்தார்கள். இந்தத் துறைமுகம் இங்கே வருவதற்கு இவர்களின் கள்ளப் பிணைப்பே முக்கியகாரணம் என்று அவர்கள் சுட்டிக்காட்டினார்கள்.மேலும் பேசிய அனைவரும் கேடுபயக்கக்கூடிய புதிய மூன்று வேளாண் சட்டங்களையும்,  மின்சாரத் திருத்தச் சட்டமுன்வடிவின் பாதகமான அம்சங்களையும் தாக்கியும் உரையாற்றினார்கள்.நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தலிலும், கன்னியாகுமரி நாடாளுமன்றத் தொகுதிக்கான தேர்தலிலும் பாஜக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளை முற்றிலுமாகத் துடைத்தெறியப்பட வேண்டும் என்று உரையாற்றியோர் பேசியபோது, பலத்த கரவொலியுடன் மக்கள் அவற்றை வழிமொழிந்தார்கள்.  

நிறைவாக, இந்தத் திட்டம் நிரந்தரமாக விலக்கிக் கொள்ளப்பட வேண்டும் என்று அங்கே கூடியிருந்த 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர்களால் ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.இந்தக் கிளர்ச்சிப் போராட்டத்தில் குறிப்பிட்டுச்சொல்ல வேண்டிய மிக முக்கியமானஅம்சங்களில் ஒன்று, இந்த மகா பஞ்சாயத்திற்கு கடல்வழியே சுமார் 300 படகுகளுக்கும் மேலாக கறுப்புக் கொடிகளுடன் மீனவர்கள் அணிதிரண்டுவந்து சாகர்மாலா துறைமுகத் திட்டத்திற்கு எதிராக முழக்கங்கள் இட்டதாகும். மகா பஞ்சாயத்தில் நான்கு மாதங்களுக்கும் மேலாக நடைபெற்றுவரும் விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும், தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.      (ந.நி.)