tamilnadu

தீக்கதிர் முக்கிய செய்திகள்

டாஸ்மாக் ஊழியர்களை பணி  வரன்முறைப்படுத்த சிஐடியு வலியுறுத்தல்

திருவாரூர், ஆக.17 - டாஸ்மாக் ஊழியர் சங்கத்தின் திருவாரூர் மாவட்ட பேரவை ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்க மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்றது. பேரவைக்கு மாவட்டத் தலைவர் பி.என்.லெனின் தலைமை வகித்தார். சிஐடியு மாவட்டச் செயலாளர் இரா.மாலதி துவக்கவுரையாற்றினார். மாவட்டச் செயலாளர் வி.சிவபாலன் வேலை அறிக்கையையும், பொருளாளர் ஏ.முத்துவேல் வரவு-செலவு அறிக்கையையும் முன்வைத்தனர். சிஐடியு மாவட்டத் தலைவர் எம்.கே.என். அனிபா, மாவட்டப் பொருளாளர் கே.கஜேந்திரன், மாநிலக் குழு உறுப்பினர் ஏ.பிரேமா மற்றும் துறைவாரி சங்கத்தின் நிர்வாகிகள் வாழ்த்திப் பேசினர். புதிய நிர்வாகிகளை அறிமுகம் செய்து டாஸ்மாக் சம்மேளன மாநிலத் தலைவர் பி.முருகன் நிறை உரையாற்றினார். மாவட்டத்தின் புதிய தலைவராக ஏ.முத்துவேல், மாவட்டச் செயலாளராக பி.என்.லெனின், பொருளாளராக பி.பாப்பையன் மற்றும் துணை நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். பணி நிரந்தர தகுதி வழங்கல் சட்ட அமலாக்க அதிகாரியின் உத்தரவை உறுதி செய்துள்ள சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின்படி அனைத்து டாஸ்மாக் ஊழியர்களையும் பணி வரன்முறைப்படுத்திட வேண்டும். தமிழக அரசின் 22.4.2025 அன்று மதுவிலக்கு ஆயத்தீர்வு துறை மானிய கோரிக்கையின் போது, டாஸ்மாக் ஊழியர்களுக்கு அறிவித்த சம்பள உயர்வு ரூ.2000/- முழுமையாக வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

சத்துணவு அங்கன்வாடி ஊழியர்களுக்க மாத ஓய்வூதியம் ரூ.7850 வழங்க கோரிக்கை

திருவாரூர், ஆக. 17-  தமிழ்நாடு அனைத்து சத்துணவு அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கத்தின் பிரச்சார கூட்டம், தெற்கு வீதியில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்டத் தலைவர் பி.புவனேஸ்வரி தலைமை ஏற்று சங்கத்தின் கொடி ஏற்றி துவக்கி வைத்தார். மாவட்டத் துணைத் தலைவர் பி. ராஜசுலோச்சனா, எஸ்.சேதுராமன், கே.பிச்சையம்மாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்டச் செயலாளர் ஆர்.சந்திரா, தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கத்தின் மாநிலச் செயலாளர் குரு.சந்திரசேகரன், மாநில செயற்குழு உறுப்பினர் எஸ். புஷ்பநாதன், மாவட்டப் பொருளாளர் கோ.மீனாட்சி சுந்தரம் ஆகியோர் உரையாற்றினர்.  மாநிலச் செயலாளர் எஸ்.சூரியமூர்த்தி சிறப்புரையாற்றினார். மாநில துணைத் தலைவர் கு.சக்தி பிரச்சாரக் கூட்டத்தின் நோக்கத்தை விளக்கி நிறைவு செய்தார். அமைப்பின் மாவட்ட பொருளாளர் வி.மணிமேகலை நன்றி கூறினார்.  சத்துணவு அங்கன்வாடி ஓய்வூதியர்களுக்கு மாத ஓய்வூதியம் ரூ.7,850 வழங்கிட வேண்டும். சென்னையில் செப்டம்பர் 10 ஆம் தேதி நடைபெறும் காத்திருப்பு போராட்டத்தில் திருவாரூர் மாவட்டத்தில் இருந்து பங்கேற்பது என தீர்மாணிக்கப்பட்டது.