tamilnadu

img

வண்ணக்கதிர் 4

வண்ணத்துப் பூச்சியின்‌ மருத்துவம்

மேரி காட்டில் வசிக்கும் அழகான பெண். அவள் திடீரென வினோத நோயால் அவதியடைந்தாள். அவளுக்குக் காட்டில் உதவ யாரும் முன் வரவில்லை. தோட்டக்காரர் ஒருவர் காட்டின் வழியே ஒருநாள் வந்தார். ஒரு வண்ணத்துப்பூச்சி அவர்‌ தோளில் அமர்ந்தபடி அவருடன் வந்தது. அந்த வண்ணத்துப்பூச்சி சக்தி வாய்ந்தது. நோய்வாய்ப்பட்டிருக்கும் நபருடைய கண்ணில் அந்த வண்ணத்துப்பூச்சி அமர்ந்தால் நோய்வாய்ப்பட்டவரின் நோய் குணமாகிவிடும். ஆலமரத்தடியில் தோட்டக்காரர் அமர்ந்து ஓய்வெடுத்தார். அவருடன் அவர் வளர்த்து வந்த வினோதமான வண்ணத்துப் பூச்சியும் ஓய்வெடுத்துக் கொண்டது. ஆலமரத்திலிருந்து அழுகுரல் கேட்டது. துணுக்குற்ற தோட்டக்காரர் ஆலமரத்தின் மீதேறினார். மரக்கிளையில் அழகான பெண்ணொருத்தி அழுது கொண்டிருந்ததைக் கண்டார். “உன் பெயர்‌‌ என்ன? நீ ஏன் அழுகிறாய்?” என்றார் தோட்டக்காரர். மேரி தன்னுடைய பெயரையும் நோயைப் பற்றியும் சொல்லி தன் வருத்தத்தைப் பகிர்ந்து கொண்டாள். அந்த சமயம் பார்த்துப் புறாவொன்று பறந்து வந்தது.புறாவும் தோட்டக்காரரிடம் மேரிக்கு உதவும்படி கேட்டுக் கொண்டது. அன்புள்ளம் கொண்ட தோட்டக்காரர் மனமிரங்கினார். மரக்கிளையில் அமர்ந்திருந்த அவர் தன் தோளில் அமர்ந்திருந்த வண்ணத்துப்பூச்சியை எடுத்து எதிர்க் கிளையில் உட்கார்ந்திருந்த மேரியின் கண்மீது அமர வைத்தார். சிறிது நேரத்தில் மேரியின்‌ நோய் குணமானது. மேரி இயல்பானாள். புன்னகை பூத்தாள். புறா இசையெழுப்பியபடி பறந்தது. மேரி தோட்டக்காரருக்கும் வண்ணத்துப் பூச்சிக்கும் நன்றி கூறினாள். வண்ணத்துப் பூச்சி இப்போது மேரியின் கண்ணிலிருந்து பறந்து அவளது தோளில் அமர்ந்து கொண்டது. தோட்டக்காரர்‌ புன்னகை பூத்தார். மேரியும் மனம் மகிழ்ந்தாள்.

தலைமுறைப் பாடம்

தாத்தா நான்தான் டீச்சர்
 தப்பா சொன்னா அடிப்பேன் 
பாத்து சொல்லுங்க நல்லா 
 பாக்காம சொல்லணும் சரியா?

கையில் கோலுடன் பேத்தி 
 கையைக் கட்டினார் தாத்தா 
வாயில் விரலை வைத்து 
 விழியை விரித்தார் பேத்தி 

வேங்கைப் புலியாய்ப் பேத்தி 
 வெருண்ட மானாய்த் தாத்தா 
ஆங்கே அமர்ந்து படிக்க 
 ஆனந்தப் பள்ளி அரங்கேற்றம் 

ஒன்னு ரெண்டு மூணு 
 ஒழுங்கா சொல்லு தாத்தா 
என்று சொன்னாள் பேத்தி
 இனிய மழலை மொழியில்

அங்கே வந்த பாட்டிக்கு 
 ஆனந்தம் பொங்கி வழிந்தது 
தங்கமே என்று பேத்தியைத் 
 தாவி அணைத்து மகிழ்ந்திட்டார்

புத்தகம்!

நல்ல நல்ல புத்தகம் நான் படித்த புத்தகம் வெல்லம் போல இனித்திடும் உள்ளமது களித்திடும்!  புரிதல் உணர்த்தும் புத்தகம் பொக்கி ஷம்தான் புத்தகம் அறிவு தன்னை வளர்க்குமே ஆட்சித் தலைவர் ஆக்குமே  புதிதாய் நம்மை ஆக்கிடும் புரிந்தே படிக்கும் புத்தகம் புதிராய் நம்மை ஆக்காமல் புதுமை காட்டும் புத்தகம்!  கல்வி என்னும் செல்வத்தை கண்முன் காட்டும் புத்தகம் கல்லா தவர்க்கு இழுக்கென கற்றுத் தந்த புத்தகம்!  எண்ணும் எழுத்தும் இதுவென எவர்க்கும் சொன்ன புத்தகம் கண்ணும் கருத்தாய் கற்றிட கனவை நனவாய் ஆக்குமே!  அறிஞர் பலரை அறியலாம் அணுவை அறிவால் புரியலாம் வறியவர் இயலார் எவரையுமே வளமாய் ஆக்கும் புத்தகம்!  நாளும் கோளும் விளக்கிட நன்மை பயக்கும் புத்தகம் வாழும் காலம் முழுமைக்கும் வழியைக் காட்டும் புத்தகம்!