அதிமுகவின் 4 கோஷ்டி 5 கோஷ்டி ஆனது; செங்கோட்டையன், புதிய கோஷ்டி தலைவர்
திருப்பூர், செப்.8 – அதிமுக தலைவர்களின் சுயநல அரசியலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண் முகம் கடுமையாக விமர்சித்தார். எடப்பாடியின் கம்யூனிஸ்ட் வெறுப்பு “எடப்பாடி பழனிசாமி எங்கு போ னாலும் கம்யூனிஸ்ட்களைப் பற்றி பேசா மல் இருப்பதில்லை. மேட்டுப்பாளையத் தில் தொடங்கி பல பகுதிகளில் கம்யூ னிஸ்ட் கட்சியைப் பற்றி தொடர்ந்து பேசிக் கொண்டிருக்கிறார். ஒரு கூட்டத் தில் ‘கம்யூனிஸ்ட்களையே காணோம்’ என்று கூறுகிறார். அடுத்த கூட்டத்தில் ‘கம்யூனிஸ்டுகள் ஏன் போராடவில்லை’ என்று கேட்கிறார். இன்னொரு கூட்டத்தில் ‘திமுக அணியை விட்டு வெளியே வரா விட்டால் திமுக உங்களை விழுங்கி விடும்’ என கூறுகிறார்” என்று பெ.சண்முகம் தெரிவித்தார். எங்களைப் பற்றி உங்களுக்கு என்ன தெரியும் என்றும் கேள்வி எழுப்பினார். செங்கோட்டையனின் ஐந்தாம் கோஷ்டி “ஏற்கனவே இபிஎஸ், ஓபிஎஸ், சசிகலா, டிடிவி தினகரன் என நான்கு கோஷ்டியாக இருந்த அதிமுக, வாச் சாத்தி கொடுமை புகழ் செங்கோட்டை யன் ‘மனம் திறக்கிறேன்’ என்று சொல்லி, எல்லோரையும் ஒன்று சேர்க்க வேண்டும் என பத்து நாள் கெடு விதித்திருக்கிறார். எல்லா கோஷ்டிகளையும் ஒன்று சேர்க்க வேண்டும் என்று சொல்லி, ஐந்தாவது கோஷ்டியாக செங்கோட்டை யன் மாறியிருக்கிறார்” என்றும் பெ. சண்முகம் கூறினார். பாஜக கூட்டணியின் முரண்கள் “பாஜகவுடன் அதிமுக சந்தர்ப்ப வாத கூட்டணி சேர்ந்த போது, பிரிந்து போனவர்களை சேர்த்துக் கொள்ள கட்டாயப்படுத்தக் கூடாது, அண்ணா மலை தலைவராக இருக்கக் கூடாது என்று சொல்லி சேர்ந்தார்கள். இதெல் லாம் ஒரு தேர்தல் உடன்பாடா? இப்போது அண்ணாமலை ‘இபிஎஸ் தான் முதல்வர்’ என்று பேசிக் கொண்டிருக் கிறார். அண்ணாமலை ஆடிய ஆட்டம் என்ன? பாடிய பாட்டு என்ன?” என்றும் சண்முகம் கேள்வி எழுப்பினார். சுயநல நோக்கம் மட்டுமே! “அதிமுகவைப் பொறுத்தவரை ஒவ்வொருவருக்கும் சுயநல நோக்கம் இருக்கிறது. அதிலிருந்து தான் முடிவெடுக் கிறார்கள். அவர்கள் தமிழ்நாட்டின் நலனில் இருந்து எந்த முடிவும் எடுப்ப தில்லை. கடந்த 2014ஆம் ஆண்டு பாஜக ஆட்சிக்கு வந்ததிலிருந்து வேளாண் சட்டம், குடியுரிமை திருத்தச் சட்டம் உள்ளிட்ட ஏராளமான சட்டங்களை எவ் வித நிபந்தனையும் இல்லாமல் தொடர்ந்து ஆதரித்த கட்சி அதிமுக. இவர்களது ஒரே நோக்கம் திமுகவை அப்புறப்படுத்த வேண்டும் என்பது மட்டும் தான்!” என்றும் கடுமையாக விமர்சித்தார். அமித் ஷா - இபிஎஸ் முரண் “அமித் ஷா தமிழ்நாட்டுக்கு வரும் போது ‘அடுத்து கூட்டணி ஆட்சிதான்’ என்று சொல்கிறார். அவர் விமானம் ஏறிய பிறகு, ‘இல்லை தனி ஆட்சி தான்’ என்று இங்கே இபிஎஸ் சொல்கிறார். ஏன் நேரிலேயே அமித் ஷாவிடம் சொல்ல வேண்டியது தானே?” என்றும் கேள்வி எழுப்பினார். பட்டிமன்ற சவால் “அதிமுக - பாஜக கூட்டணி ஆட்சியா? அதிமுக தனி ஆட்சியா என்று வேண்டு மானால் பட்டிமன்றம் நடத்துங்கள். அதற்கு நாங்கள் பட்டிமன்ற நடுவர் மதுக்கூர் இராமலிங்கத்தை அனுப்பி மிகச் சிறந்த தீர்ப்பை அளிக்க தயாராக இருக்கிறோம்” என்று நகைச்சுவையாக சவால் விடுத்தார். “தமிழ்நாட்டிற்கு விரோதமான பல திட்டங்களில் கையெழுத்து போட்ட அதிமுகவின் பாதிப்பை நாம் இப்போதும் அனுபவித்துக் கொண்டிருக்கிறோம்” என்று பெ.சண்முகம் முடித்தார்.