நவகவி
ஆண்:பொங்கலுக்கு சம்பா நெல்லு
பொங்கித் திங்க நெனச்சோம் கண்ணு!
வெள்ளத்திலே அழுகிப் போச்சே டக்கு முக்கு டிக்குத் தாளம்!
வெதை நெல்லும் மிஞ்சலையே திக்கி விக்கி நிக்கலானோம்!
பெண்:வெள்ளம் தான் வடிஞ்சதும் தான்
வெள்ளாமை செஞ்சோம் மச்சான்!
வறட்சியிலே கருகிப் போச்சே டக்கு முக்கு டிக்குத் தாளம்!
வைக்கோலும் மிஞ்சலையே திக்கி விக்கி நிக்கலானோம்!
(பொங்க)
ஆ:கஞ்சியில்ல கூழுமில்ல ததிங்கிணத்தோம் தாளம்!
பொண்டு புள்ள எங்கு செல்ல பட்டினிப் பட்டாளம்?
பெ:நண்டும் சிண்டும் ரெண்டு புள்ள ததிங்கிணத்தோம் தாளம்!
உண்ணவில்ல ஒண்ணும் இல்ல பட்டினிப் பட்டாளம்!
ஆ:தஞ்சாவூரு மேளம் - காவிரி
தண்ணி நனைச்சாலும் ஓசையிடும் அந்தக் காலம்!
பெ:ஆனா இப்போ மேளம் - எங்க
கண்ணுத்தண்ணி ஊறி ஊமை ஆகி அலங்கோலம்!
ஆ:காவிரியில் மட்டும் இல்ல- எங்க
கன்னத்திலும் நீர்க்கோலம்!
பெ:கானகத்தில் மட்டும் இல்ல- எங்க
கண்ணுக்குள்ளும் கார்காலம்!
(பொங்க)
ஆ:வறட்சி வந்தா எங்க வயலு வெடிச்சு பாளம் பாளம்
வயித்துக்குள்ள வெறும் குடலு அடிக்கும் உறுமி மேளம்!
பெ:வெள்ளம் வந்தா எங்க வயலு கடலின் ஆழம் ஆழம்
வீடொழுகி அடுப்பங்கரை குளக்கரை போல் தோணும்!
ஆ:அரசாங்கம் பார்ஆளும் - அதன்
மனம் ரொம்ப மட்டம் ;வாய் மட்டும்தான் வெகு நீளம்!
பெ:கையோடு நம் காலும் - இந்த
ரெண்டும் கூட மிஞ்சுமோ வாழ்க்கையே சிதறி கூளம்!
ஆ:நிமிஷமெல்லாம் ஜடமாகும் - எங்க
நேரமெல்லாம் முடமாகும்
பெ:கோட்டையிலே கொடியேறும் - எங்க
குடலில் பசி குடியேறும்!
(பொங்க)