போபால்:
கர்நாடகத்தில் காங்கிரஸ் - மதச்சார்பற்ற ஜனதாதளம் கூட்டணி ஆட்சியை, கவிழ்த்து விட்ட நிலையில், தங்களின் அடுத்த இலக்கு மத்தியப்பிரதேசம்தான் என்று பாஜக-வினர் கூறியிருந்தனர்.தலைமை உத்தரவிட்டால், அடுத்த 24 மணிநேரத்தில் மத்தியப்பிரதேச காங்கிரஸ் ஆட்சியை கவிழ்ப்போம் என்று அம்மாநில பாஜக தலைவரும், எம்எல்ஏ-வுமான கோபால் பார்கவா பகிரங்கமாக அறிவித்திருந்தார்.மத்தியப்பிரதேசத்தில் மொத்தமுள்ள 231 தொகுதிகளில் பெரும்பான்மைக்கு 116 எம்எல்ஏ-க்கள் தேவை. ஆனால், காங்கிரசுக்கு 114 எம்எல்ஏ-க்களே உள்ளனர். எனினும், சமாஜ்வாதி கட்சியின் 2 எம்எல்ஏ-க்கள், பகுஜன் சமாஜ் கட்சியின் 1 எம்எல்ஏ, 1 சுயேட்சை எம்எல்ஏ ஆகியோரின் ஆதரவுடன்தான் காங்கிரஸ் ஆட்சியில் இருந்து வருகிறது. கமல்நாத் முதல்வராக இருந்து வருகிறார். பாஜக 108 எம்எல்ஏ-க்களுடன் எதிர்க்கட்சியாக இருந்து வருகிறது.
இந்நிலையில்தான் கர்நாடகம் தந்த உற்சாகத்தில், மத்தியப்பிரதேசத்திலும் ஆட்சிக் கவிழ்க்கும் ஆசை பாஜக-வை தொற்றிக்கொண்டது.ஆனால், மத்தியப் பிரதேச பாஜக எம்எல்ஏ-க்கள் 2 பேரை, தங்கள் பக்கம் இழுத்து, பாஜகவின் ஆசைக்கு ஆரம்பத்திலேயே பாஜக அடி கொடுத்துள்ளது.அதாவது, மத்தியப்பிரதேச சட்டப்பேரவையில் குற்றவியல் சட்ட மசோதா- 2019 மீது, புதனன்று வாக்கெடுப்பு நடைபெற்றபோது, பாஜக-வைச் சேர்ந்த 2 எம்எல்ஏ-க்களை அரசுக்கு ஆதரவாக வாக்களிக்கச் செய்து, காங்கிரஸ் அதிர்ச்சி கொடுத்துள்ளது.காங்கிரஸூக்கு ஆதரவாக வாக்களித்த எம்எல்ஏக்களில் ஒருவர் மைகர் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட நாராயணன் திரிபாதி. மற்றொருவர் பியோஹரி தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஷரத் கவுல் ஆவார்கள்.இவர்கள் இருவரும் சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பு காங்கிரசில் இருந்து பாஜக-வுக்கு போனவர்கள்தான். கட்சி மாறி வந்தவர்களுக்கு சீட் வழங்கி, பாஜக இவர்களை எம்எல்ஏ ஆக்கியது. ஆனால், தற்போது தாய்வீட்டுக்கே திரும்புவதாக, அந்த 2 எம்எல்ஏ-க்களும் அறிவித்துள்ளனர்.
“முதல்வர் கமல்நாத் சிறந்த முறையில் ஆட்சி செய்து வருகிறார். அவருக்கு எங்கள் ஆதரவை அளிக்கிறோம். அதனை வெளிப்படுத்தும் விதமாகவே, அரசு கொண்டு வந்த மசோதாவுக்கு ஆதரவாக வாக்களித்தோம். எங்கள் தொகுதிகளில் பல நலத்திட்ட பணிகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது. இதற்காக ஆளுங்கட்சியில் இணைவது குறித்தும் ஆலோசித்து வருகிறோம்” என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.