காரகஸ்:
அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தன்னை கொலைசெய்வதற்கு உத்தரவிட்டுள்ளதாக வும் அதற்காக கூலிப்படையை தேடிக்கொண்டிருக்கிறார் என்றும் வெனி சுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ அதிர்ச்சியாக குற்றம் சாட்டியுள்ளார்.
இராக் நாட்டைப் போல எண்ணெய் வளமிக்க தென் அமெரிக்க நாடான வெனிசுலாவை எப்படியாவது கைப்பற்றி விட வேண்டும் என்று அமெரிக்க அரசும் ஏகபோக முதலாளிகளும் வெனிசுலாவில் குழப்பத்தை ஏற்படுத்தி,ஆட்சியை கவிழ்க்கும் முயற்சியில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருகின்றனர். அமெரிக்காவிற்கும் ஏகபோக முதலாளிகளுக்கும் சிம்மசொப்பனமாக இருந்த, வெனிசுலா நாட்டு மக்களால் பெரிதும்போற்றப்பட்ட முன்னாள் ஜனாதிபதி சாவேஸ் மரணத்திற்குப் பின்னர் அமெரிக்காவின் தலையீடு அதிகரித்துள்ளது.
நாட்டில் நிலவும் அரசியல் குழப்பத்துக்கு அமெரிக்காவே முழுக்காரணம் என்றும், வெனிசுலாவில் ஆட்சியை கவிழ்ப்பதற்கு அமெரிக்கா முயற்சிப்பதாகவும் ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறார். இந்நிலையில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தன்னை கொலை செய்ய உத்தரவிட்டுள்ளதாக வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ அதிர்ச்சியான குற்றச்சாட்டை தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக மதுரோ டிவிட்டரில் வெளியிட்ட வீடியோ பதிவில் கூறுகையில், “நான் மிகவும் மிருகத்தனமான ஆக்கிரமிப்புக்கு பலியாகினேன். அமெரிக்க அரசு என் தலைக்கு 15 மில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.109 கோடியே 75 லட்சத்து 92 ஆயிரம்) வழங்கியது. என்னை கொலை செய்ய டிரம்ப் உத்தரவிட்டுள்ளார். அவர்கள் என்னை கொல்ல வெனிசுலாவில் துப்பாக்கிச் சுடும் வீரர்களைநியமிக்க முயற்சிக்கிறார்கள். என்னை கொல்லும் கூலிப்படையை டிரம்ப் தேடிக் கொண்டிருக்கிறார்” என்று தெரிவித்துள்ளார்.
முன்னதாக வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ உள்பட அந்த நாட்டின் அரசியல் தலைவர்கள் 14 பேரை போதை பொருள் கடத்தல்காரர்களாக சித்தரித்து சர்வாதிகாரத்திமிருடன் அறிவித்துள்ள அமெரிக்கா, அவர்களை கைது செய்ய உதவிசெய்பவர்களுக்கு 15 மில்லியன் அமெரிக்க டாலர் சன்மானமாக வழங்கப்படும் என தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.