லண்டன்
ஐரோப்பியக் கண்டத்தில் தொடக்கம் முதல் மிரட்டி வந்த கொரோனா வைரஸ் தற்போது ஓரளவு கட்டுக்குள் உள்ளது. அதிக பாதிப்பைச் சந்தித்த இத்தாலி, ஜெர்மனி, பிரான்ஸ் ஆகிய நாடுகள் கொரோனவை ஓரளவு கட்டுப்படுத்திவிட்ட நிலையில், பிரிட்டன் மற்றும் ஸ்பெயின் நாடுகள் கொரோனா வைரஸுக்கு எதிராக யுத்தம் செய்து வருகின்றன.
இந்நிலையில், பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கும் (வயது 55) கொரோனா வைரஸ் தாக்கி இருப்பது கண்டறியப்பட்டது. கடந்த மாத இறுதியில் கொரோனா அறிகுறி இருந்ததால் தன்னைத்தானே தனிமைப்படுத்திக் கொண்டார். 10 நாட்களுக்குப் பின்னர் மீண்டும் கொரோனா அறிகுறி தென்பட்டதால் லண்டனில் உள்ள புகழ்பெற்ற புனித தாமஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அபாய கட்டத்தில் சிகிச்சை பெற்று வருகிறார்.
தொடக்கத்தில் சாதாரண வார்டில் அனுமதிக்கப்பட்டிருந்த ஜான்சனின் உடல்நிலை நேற்று இரவு மிகவும் ஆபத்தான நிலையை நோக்கி நகர்ந்ததால் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பிரதமர் போரிஸ் ஜான்சன் சுயநினைவுடன் இருந்தாலும் மூச்சுவிடுவதில் சிரமப்படுகிறார். அதிகளவில் காய்ச்சல் இருப்பதால் தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றியுள்ளதாகப் புனித தாமஸ் மருத்துவர்கள் அறிக்கை அளித்துள்ளனர்.
போரிஸ் ஜான்சன் கவலைக்கிடமாக இருப்பதால் பிரதமர் பொறுப்பைப் பிரிட்டன் வெளியுறவுத்துறை அமைச்சர் டோமினிக் ராப் கவனித்து வருகிறார். பிரதமர் பொறுப்பை டோமினிக் ராப்பை கவனிக்கச் சொன்னதும் போரிஸ் ஜான்சன் தான் என்பது குறிப்பிடத்தக்கது.