tamilnadu

img

மகளிர் டி-20 உலகக்கோப்பை... இறுதியில் இந்தியா,ஆஸ்திரேலியா   

சிட்னி 
         7-வது சீசன் மகளிர் டி-20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் கடந்த 21-ஆம் தொடங்கியது. தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள நிலையில், வியாழனன்று நடைபெற்ற முதல் அரையிறுதியில் இந்தியா - இங்கிலாந்து மோத விருந்த நிலையில், டாஸ் போட முடியாத அளவிற்கு மழையால் ஆட்டம் பாதிக்கப்பட்டது. இடைவிடாமல் தொடர்ந்து மழை பெய்ததால் ஆட்டம் ரத்து செய்யப்படுவதாக நடுவர்கள் அறிவித்தனர்.

லீக் போட்டிகளில் தோல்வியைச் சந்திக்காமல் வெற்றி நடையுடன் அரையிறுதிக்கு முன்னேறிய இந்திய அணி இங்கிலாந்தை விட அதிக புள்ளிகளை (இந்தியா 8, இங்கிலாந்து 6) பெற்றிருப்பதால் அந்த அணி இறுதிக்கு முன்னேறும் என அறிவிக்கப்பட்டது.  

2-வது அரையிறுதி ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா - ஆஸ்திரேலிய அணிகள் மோதின. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா பந்துவீச்சைத் தேர்வு செய்தது. முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 134 ரன்கள் குவித்தது. 

135 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணி தொடக்கம் முதலே திணறலான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. 13 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 92 ரன்கள் எடுத்திருந்த பொழுது மழை குறுக்கிட்டது. 
தொடர்ந்து மழை விளையாடியதால் டக் வொர்த் லூயிஸ் விதிப்படி  5 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதன் மூலம் ஆஸ்திரேலிய அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. ஞாயிறன்று நடைபெறும் இறுதியாட்டத்தில் இந்திய அணியை ஆஸ்திரேலிய அணி எதிர்கொள்கிறது.