tamilnadu

img

மாற்றுத்திறனாளி குடும்பத்திற்கு மாவட்ட நிர்வாகம் உதவுமா?

கிருஷ்ணகிரி, ஜூலை 30- கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை வட்டம் சிங்காரப்பேட்டை பகுதியை சேர்ந்த 50 வயதான மாற்றுத்திறனாளி வெங்கடேசனுக்கு ஒரு கால் இல்லை. திருமணமாகி 19 ஆண்டுகள் ஆகிறது.மனைவியும் ஐந்து வயது குழந்தையும் உள்ளனர். கடந்த ஜனவரி முதல் 100 நாள் வேலை செய்தும், மீதி நாட்களில் வாரத்தில் சில நாட்கள் ஏதாவது சிறு வியாபாரம் செய்தும் கிடைத்த வருமானத்தில் பிழைத்து வந்தனர். ஜனவரிக்குப் பின் 100 நாள் வேலை வழங்கப்படவில்லை. மார்ச் மாதம் பொது முடக்கம் அறிவிக்கப்பட்ட பின் எந்த சிறு வருமானமும் இல்லாமல் வாழ்வாதாரம் இழந்து தவிக்கின்றனர். வேறு வழியில்லாததால் வெங்கடேசன் தின்பண்டங்களை வாங்கி விற்பனை செய்து வருகிறார். உதவிக்கு அவரது மனைவியும் உடன் செல்கிறார். கடந்த 5 மாதங்களாக எந்த நிவாரண உதவியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து வெங்கடேசன் கூறுகையில், தற்போது எங்களுக்கு 100 நாள் வேலை வழங்க வேண்டும், சாப்பாடு குடும்ப செலவுகளுக்கு நிறைய கடன் வாங்கியுள்ளதால் அரசு எங்களுக்கு நிவாரண உதவி வழங்க வேண்டும்,  மாவட்ட ஆட்சியர்  மாற்றுத்திறனாளிகளுக்கான இலவச மூன்று சக்கர வாகனம் கொடுத்து உதவ வேண்டும் என்றார்.